ஆதிபராசக்தி மனிதர்களை தன்பால் ஈர்த்து, அருள்புரிந்து காப்பதற்காக திகழ்ந்து கொண்டிருப்பவையே சக்தி பீடங்களாகும். உலகத்துக்கு தாயாகிய அன்னை பல சக்தி பீடங்களில் அமர்ந்திருக்கின்றாள். காசியில் விசாலாட்சியாகவும், காஞ்சியில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும் அமர்ந்திருக்கும் அன்னையானவள் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் 'புவனேஸ்வரி' பீடமாக அமர்ந்து, அருள் பாலித்து அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றாள்.
அலைகடல் நடுவே அமர்ந்து அருள் சுரக்கும் அன்னை ஸ்ரீ நாகபூசணி, வரலாற்றுச் சிறப்பும், பழைமையும் வாய்ந்த நயினையம்பதியிலே கோவில் கொண்டு எழுந்தருளி 'பாலினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' திருவருள் பாலிக்கின்றாள். நாடிவரும் அடியார்களின் வினைகளையெல்லாம் தீர்ப்பவள் அன்னை, உலகிற்கெல்லாம் இருள் கடிய உதயசூரியன் உதயமாவதைப் போல், மணிபல்லவத்தில் நாகம்மை அரசாட்சி போற்றப்படுகின்றது. மனிதரும், தேவரும், மாயாமுனிவரும், வந்து சென்னி, குளிதரும் சேவடியைத்தந்து, துணையும் தொழும் தெய்வமுமாய் அருட்பார்வை நல்கி, அனைவரையும் புனிதராக்குகின்றாள். நெஞ்சக் கனலை உருகச் செய்து, வஞ்சப்புலன் ஐந்தின் வாய்களை அடைக்கின்றாள். வருந்திவரும் அடியார்களுக்கு வேண்டத்தக்கது அறிந்து வேண்டுவதும் கொடுக்கின்றாள்.
தூய்மையான நாக வழிபாட்டினை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் காணலாம். நாக வழிபாட்டிற்கு இவ்வளவு புராதனமான ஆலயம் வேறு எங்கும் காண முடியாது. மூலஸ்தானத்தில் அம்மன் உருவம் போல இருப்பது பழைய நாகப்பிரதிஷ்டையே ஆகும். இதற்குப் பின்னால் ஐந்து தலை நாகப்பிரதிஷ்டை ஒன்றுண்டு. கலப்பற்ற தூய்மையான நாக வழிபாட்டினை இவ்வாலயத்தில் காணலாம். மூலஸ்தானத்தில் மூலமூர்த்தியின் விக்கிரகத்தின் அமைப்பு ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதாக இருக்கலாம்.
நெடுங்காலம் பிள்ளைப்பாக்கியம் இல்லாதிருப்போர் நாகபூசணியை வழிபட்டு, நாகப்பிரதிஷ்டை, நாகசாந்தி செய்தால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அடியார்களிடையே இன்றுமுண்டு. நாகம்மாள் அடியார்கள் ஒவ்வொருவருடைய உள்ளங்களில் உறுதியான இடம்பெற்ற, வேண்டிய வேண்டிய வரங்களை வழங்கி துன்பங்களைப் போக்கி அருளுகின்றாள்.
'நாகதீபம்' என்று அழைக்கப்படும் நயினாதீவில் ஒரு சர்ப்பம் நெடுநாள் வசித்து தவம் செய்து அம்பிகையின் அருளால் தனது சாபத்தை நீக்கிக் கொண்டது. சாபம் நீங்கப் பெற்ற நாகபாம்பைத் தமது திருமேனியில் அணிந்து, சாப நிவிர்த்தி செய்த குளிமையால்த்தான் இங்கு எழுந்தருளியுள்ள அம்பிகை 'நாகபூசனி' என்ற பெயரைப் பெற்றாள் எனச் சரித்திர வாயிலாக அறியப்படுகின்றது.
புராதனப் பெருமை வாய்ந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை போர்த்துக்கீசர் இடித்தபோது, சைவ நன்மக்கள் துடிதுடித்தார்கள். தாங்கள் பக்தியுடன் வழிபட்டு வந்த அம்பாளையும் ஏனைய மூர்த்திகளையும் அவர்கள் தீண்டக் கூடாது என எண்ணி ஒளித்து வைத்தார்கள். அம்பாளை மேற்குக் கடற்கரையிலுள்ள ஓர் ஆலமரப் பொந்தில் வைத்து வழிபட்டதாக ஓர் ஐதீகமுண்டு. அந்நியர் கோயிலை இடித்த பொழுதும் அம்பாள் வழிபாட்டை நிறுத்த முடியவில்லை. அந்நியர் இக்கோயிலை இடிக்க வந்தபோது, கோவில்தேர் தானாக உருண்டு மேற்குக் கடலில் அமிழ்ந்து விட்டதாகவும், பௌர்ணமி தினத்தில் தேர்முடி தெரிவதாகவும் ஓர் கதை உண்டு.
'ஆணிப்பொன் மூத்தெனும் மாலை சூட்டித் தருகினிலே பேணிப்பாயந்த புத்திரரோடிந்தப் பெண்ணரசை மாணிக்க இரத்தினம் வைத்தே இழைத்திட்ட வாகனத்திற்காணிற் கவலை கலைந் தோடிடும் பல காதங்களே' அம்பாளின் மகத்துவத்தை, அம்பாளின் கருணையை நினைந்து நயினைக் கவி 'கஸ்தூரி' அமரர் ஆ.இராமுப்பிள்ளை அவர்கள் பாடிய பாடல் இதுவாகும்.
என்னினத்தார் வாழ்வொன்றே கருதவில்லை
உனக்கெல்லா உயிர்களுமே சொந்த மென்ற
உண்மையை நான் ஒரு போதும் மறந்ததில்லை
சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயோர் தாமும்
சீலமுற வேண்டுமென்றே வேண்டுகின்றேன்
தனக்கொருவரொப்பில்லாத் தாயே இந்தத்
தாரணியிற் சாந்தியையே தருவாய் நீயே!'
நயினை நாகபூசணியின் தவப்புதல்வர் இல்லற ஞானி, கவிஞர் அமரர் க.இராமச்சந்திரா அவர்களால் அம்பிகையின் பேரில் பாடப்பட்ட பாடல் இதுவாகும்.
சர்வமத சந்நிதியாக அருள் பாலிக்கும் அன்னை நாகபூசணியின் இவ்வருட மகோற்சவம் இன்று (04-06-2008) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
'ஆழ்கடலில் அடியார் கூட்டம் அலைமோதிக்கரை சேர்ந்து, அம்பிகையின் கோபுரத்தின் முன் 'தாயே' என்று உள்ளம் நெக்குருக, நின்றுருகும் காட்சியை சொல்லினாலோ, எழுத்தினாலோ கூறிவிட முடியாது."
நா. க. குமாரசூரியர். JP, அஞ்சல் அதிபர்