இலட்சிய ஆசிரியர்

அமரர் சி. குமாரசாமி அவர்கள் கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றி 01-12-1983 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியக் கலாசாலையின் ஆக்கப் பணிகளிலெல்லாம் தம்மை ஒரு தொண்டனாகக் கருதி உழைத்தவர். "செய்யும் தொழிலே தெய்வம்" என் வாழ்ந்த செம்மல். பயிலுனருக்கும், பயிற்றும் விரிவுரையாளருக்கும், வேலை செய்யும் ஊழியருக்கும் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் முன்னின்று உதவி புரியத் தயங்குவதில்லை. இவர் காலத்தில் எழுந்த யோகமண்டபம், இராமநாதன் திறந்த வெளியரங்கு ஆகியன அவரின் உழைப்பின் சின்னங்களாகும்.

கலாசாலையில் நடந்த விழாக்கள் அனைத்தும் வித்துவான் அவர்களின் வழிநடத்தலில் சிறப்புற்றன என்பதை யாவரும் அறிவர். மேலும் கலாசாலையின் சஞ்சிகையாகிய "கலைமலர்" குழுவின் ஆலோசகராகச் செயற்பட்டு அம்மலரின் நறுமணம் எட்டுத்திக்கும் பரவ உதவினார்.

வித்துவான் அவர்கள் சிறந்த பேச்சாளர். நினைத்தவுடன் கவிதை புனையும் ஆற்றல் உடையவர். திண்ணிய உறுதி படைத்தவர். ஒருசமயம் விவசாயத்தில் பெருநஷ்டம் அடைந்தபொழுது "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதை வாழ்ந்து காட்டியவர். அமரர் அவர்கள் எக்கூட்டத்தில் சமூகமளித்தாலும் அங்கே அவர் சொற்பொழிவுகளைக் கூர்ந்து அவதானிப்பதையும் சிறு சிறு குறிப்புக்கள் எடுப்பதையும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அவருடைய கற்கும் ஆவல் இதன்மூலம் வெளிப்பட்டு ஆசிரியர் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்கவேண்டும் என்பதைக் காட்டுவித்தது.

அவருடைய குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

திருமதி சி. இராமநாதன்
அதிபர், கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரிய கலாசாலை, யாழ்ப்பாணம்.