உயர்வே உள்ளிய உத்தமர்

மனித சமூகத்தின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவுவது உத்தமர்களின் உயரிய சிந்தனை. மனித இனம் அடைந்த முன்னேற்றம் தற்செயலானதன்று. காலம் காலமாக மனிதாபிமானமும், படைப்பாற்றலும், முன்னேற்ற முனைப்பும், உள்ள பெருமக்களின் இலட்சியப் பங்களிப்பே முன்னேற்றத்துக்கு உதவுகின்றது என்பது தெளிவு.

பிறரது உழைப்பின் பயனைத் துய்க்கும் ஒவ்வொருவரும் நான் சமூகத்துக்குக் கடன்பட்டுள்ளேன் அக்கடனை வட்டியுடன் தீர்ப்பது எனது கடமை என்ற உணர்வால் உந்தல் ஏற்பட்டு சமுக மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்யவேண்டிய கடப்பாடுள்ளது. எனவே எவருக்கும் அழிவை ஏற்படுத்தும் செயலை விடுத்து ஆக்கந் தரும் செயலில் ஈடுபடும் உணர்வு அவசியம்.

அமரர் வித்துவான் சி. குமாரசாமி ஆக்க சிந்தனை மிக்கவராகச் சமுக மேம்பாட்டுக்குத் தன்னாலான மிகச் சிறந்த பங்களிப்புச் செய்தார் என்பதனை அவரது வாழ்க்கை வரலாறு தெளிவுறுத்தக் காண்கிறோம். ஒருவரது ஆளுமை உருவாக்கத்தில் அவரது பரம்பரையும் சூழலும் ஊடாகும் தன்மைக்கேற்பச் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆளுமையின் தன்மையே செயற்பாட்டின் அடிப்படை ஆகும். இவ்வகையில் வித்துவான் குமாரசாமியின் பரம்பரையும் சூழலும் செழிப்பாய் அமைந்ததைக் காணலாம்.

தமிழும் சைவமும் ஒன்றி வளர்ந்திருந்த பண்பாட்டுப் பின்னணியில் வந்த பெற்றோரின் செல்வாக்கும், நெருங்கிய சமூகத் தொடர்பும், உறவு பாராட்டிக் கூடி வாழும் கொள்கையுள்ள நயினை நாகபூஷணியை மையமாக வைத்து இம்மை மறுமை இரண்டிலும் இன்பந்தரவல்ல சமய அடிப்படைச் சூழலும், இலக்கிய இலக்கண சமயப் புலமைமிக்க நன்மக்களின் நெருக்கமான செல்வாக்கும், மணிபல்லபத்தின் இயல்பு நிலையாய் இருந்த காலத்தில் அமரர் வித்துவான் குமாரசாமி உருவாக்கப்பட்டார்.

கல்வி பரீட்சைச் சித்திக்கும் பதவி பெறவும் என்ற இன்றைய நிலை இறுக்கமடையாத அரை நூற்றாண்டுக்கு முன்னே கற்றபடி நிற்றலும் கல்வியின் நோக்கமாக மதிக்கப்பட்டிருந்தது. அதனால் கற்றவர் உலகியல் ஒழுக்கத்தைப் பேணி வாழும் நிலை இருந்தது. எனவே இளமை அனுபவங்களால் பெற்ற சமுக விளுமியப்பற்று அவரின் சமுக நலன், நாட்டு ஆளுமை உருவாக்கத்திற்கு உதவியதை உணரலாம். இன்று அருட்செல்வமும் தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் நெடுங்காலம் நிலவி வந்த விகிதாசாரமும் மாறி பொருட்செல்வ வேட்கை அளவுக்கு அதிகமாகி ஆதிக்க நிலை அடைந்ததால் சமுகம் திக்குத் தெரியாத காட்டில் தட்டுத் தடுமாறி மக்கள் சோதனையும் வேதனையும் மிக்க மோக வாழ்வுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அறிவின் ஆட்சியும் அன்பு வாழ்க்கையும் சாத்தியமான காலத்தில் பண்பாட்டு விழுமியப் பின்னணியில் வாழ்ந்து கற்றுத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்ட வித்துவான் குமாரசாமி ஆசிரியராய், அதிபராய், விரிவுரையாளராய், எழுத்தாளராய், பதிப்பாசிரியராய், தனது இறுதிக்காலம் வரை ஓய்வின்றி உழைத்தார். கல்வித் தொழிலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட இவர் அத்தொழிலில் தொடர்ந்த ஈடுபாடு கொண்டவராயிருக்கச் சமூக உறவைத் தரும் வியாபாரத்தை ஓய்வுகாலச் "சிறு" பொழுதுபோக்காகக் கொண்டு மக்கட் பண்பை வளர்த்துக் கொண்டதைக் கண்டு வியந்தோம்.

அரம் போன்று பலவற்றைக் கூர்மையாக்கும் கூர்மை மிக்க புத்திஜிவிகளாயினும் மக்கட் பண்பில்லையேல் மரம் போல்வர் என வள்ளுவப் பெருமான் கூறியதைகொண்டு நோக்கும்பொழுது வித்துவான் குமாரசாமி பாத்திரங்களில் சிறப்பாகத் துலங்க அவருக்கு உறுதுணையானது அவரிடம் மிகுந்து காணப்பட்ட மக்கட்பண்பே.

எளிமையான வாழ்வும் உயர்வான உலகியல் நோக்கும் போக்கும் கொண்ட அவர் ஆசிரிய கலாசாலையில் இலட்சிய ஆசிரியராய் ஆசிரிய மாணவர் தம் வான்மையை விருத்தி செய்ய உதாரண விரிவுரையாளராய் "அறி அல்லது அழி " என்பதை ஆசிரிய மாணவர் உணர்ந்து அறிவு வேட்கையினராக அல்லும் பகலும் கல்விக் கருமத் தொடரில் ஈடுபடத் தூண்டிய பெருமை பெற்றவர். " கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பது இன்று செல்லாது "கற்போர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " என்பதே சரியான கோட்பாடு என்பது அவர் கருத்தாயிருந்தது. உலகில் ஏற்படும் துரித மாற்றங்களுக்கு வெற்றிகரமாக வாழ்வதாயின் நாம் அனைவரும் வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதுவிடின் "கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் " என்றாகிவிடும் என்பது அவர் கருத்தாயிருந்தது. பாடத்தை ஆயத்தம் செய்து அதனை
"எண்பொருள்வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
   நுண்பொருள் காண்பது அறிவு "

என்பதற்கொப்ப கேட்டார்ப்பிணக்குந்தகையவாய் நகைச் சுவையோடு மாணவர் மனங்கொளப் பாடம் நடத்தும் பேராசிரியராய் இருந்தார்.

அமரர் வித்துவான் குமாரசாமியின் சாதனை நிறைந்த வாழ்வு பலருக்கு ஆக்கமும் உக்கமும் தருவதாகும். சிறியன சிந்தியாத சீரிய பண்பினரான அவர் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " என்பதற்கொப்பப் பிறர் நலம் பேணலைத் தனது வாழ்க்கை இலக்காகக் கொண்டதால் தேடிச் சோறு நிதம் தின்று சின்னம் சிறு கதைகள் பேசும் வேடிக்கை மனிதராய் அவர் வாழ மறுத்து, அறிவுலகில் ஆய்வு மேற்கொண்டு, தான் கண்ட அரிய உண்மைகளைப் பிறரும் அறிந்து நேர்வழி நின்று சீர்பெறச் செய்வதைத் தனது வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்தார். பொருள் வேட்கை அற்றவராய் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பினராய்
" அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
   பெற்றான் பொருளைப் புழி "

என்பதனை நன்குணர்ந்து பலரும் பயன்பெறத் தன் அறிவையும் பொருளையும் பெற்று இன்புறச் செய்தார் என்பதை மறக்க முடியாது.

அவர் தனது சீரிய வாக்காலும் வாழ்வாலும் தான் வந்த பொழுது இந்த சமுகம் இருந்ததைவிடத் தனது பணியால் சிறப்புறுத்திச் சென்றுள்ளார். அவர் தான் உயர்வதோடு நிறைவு கண்டாரில்லை. பிறரும் அறிவொளி பெற்று அவ்வொளியில் மெய்ப்பொருள் கண்டு இன்புறச் செய்ய எண்ணியதால் ஓயாமல் ஒளியாமல் கல்விப்பணி செய்தார். அவரது அடக்கமும் நட்பும் பரிவும் இரக்கமும் மலர்ந்த முகத்துதியோடு இணைந்து மாணவர் ஒளிவு மறைவின்றி ஊடாடிப் பயன் பெற உதவின. காட்சிக்கு எளியர் கடுஞ்சொல்லர் அல்லர் அதனால் நடுவூரில் நற்கனி மரமாய் நாடிப் பலரும் நலம் பெற வாழ்ந்தார்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகியதும் உள்ளியது எல்லாம் பிறர் உயர்வடையவேண்டும் என ஓயாது அவர் உளைத்ததுவும் " பெற்றது கொண்டு சுற்றம் அழுத்தியதும் தாமின்புறுவது உலகின் புறக்கண்டு " மகிழ்ந்ததுவும் நீங்கா நினைவாய் அன்பர் நெஞ்சத்து நிற்கும் என்பதால் யாழ்ப்பாணப் பல்கலக்கழகத்தின் தமிழ்த் துறையில் அவர் நினைவுப்பரிசு வழங்கப்பட நிதியம் ஒன்று நிறுவப்படுவது அன்பர் அனைவருக்கும் இன்பம் தரும். பிறர் உயர்வே உள்ளிய உத்தமர்க்கு அதுவே உரிய காணிக்கை எனக் கருதுகின்றோம். இச் சிந்தனையை செயலுருவம் பெறச் செய்வது அன்பர்கள் கடனாகும்.

ஆக்கம் : ஆர் . எஸ் . நடராசா MA, SLEAS
அதிபர், பலாலி ஆசிரிய கலாசாலை, திருநெல்வேலி