என் அறிவுப் பசி தீர்த்த அமுதசுரபி

சிலரது மரணங்கள் விளைக்கும் பிரிவுத்துயர் நீங்காத சோகமாய் நிலைத்து ஏக்கத்தை நிரந்தரமாக்கி விடுகின்றன. அத்தகைய மரணங்களில் ஒன்று ஆசிரியப் பெருந்தகை வித்துவான் பண்டிதர் சி குமாரசாமி B.A அவர்களுடையது.

வித்துவான் அவர்கள் நிறை வாழ்வு வாழ்ந்த வித்தகர். முழு மனிதனாக மானுடத்தின் உயர் விழுமியங்களின் கூட்டுருவாகத் தரிசனம் தந்தவர். மனித நேயத்துக்கும் சான்றாண்மைக்கும் நடமாடும் விளக்கமாகத் திகழ்ந்தவர். அப்பெருந்தகையிடம் மாணவனாக அமையும் பேறு பெற்றவன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு.

1955-1960 காலப்பகுதியில் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் அவர் பணியாற்றியபோது அவரிடம் முறையாகப் பாடங்கேட்கும் பேறு கிட்டியது. அதன் பின்னரும் அவரது இறுதி மூச்சுவரை இந்த ஆசிரிய - மாணவ உறவு தொடர்ந்தது. கடந்த 04-01-1994, செவ்வாய் மாலை 4 மணிக்கு, அவரைக் கொழும்பில் சந்தித்த போதும் எனது ஐயங்கள் சிலவற்றை அவர் அகற்றினார். கற்க வேண்டியவை பற்றி ஆலோசனைகள் வழங்கினார். நானும் என் துணைவியும் இணைந்தெழுதிய இந்தியச் சிந்தனை மரபு என்ற நூல் பற்றிய மதிப்புரை ஒன்றை எழுதி எனக்கு வாசித்துக் காட்டினார். யாழ்ப்பாணத்துக்கு மீண்டு எனது பல்கலைக்கழகப் பணியைத் தொடர்வதற்கு ஊக்கமளித்து வழிப்படுத்தினார். அன்று தான் நான் அவரைக் கடைசியாகப் பிரிந்தேன். யாழ்ப்பாணம் மீண்டபின் 10-01-1994 இல் நான் செவியுற்ற செய்தி வித்துவான் இயற்கை எய்தினார் என்பது.

வித்துவான் அவர்களின் தொடர்பால் நான் பெற்றபேறு விளக்கும் தரமன்று. இலக்கியங்களின் பரப்புக்குள் என்னை மூழ்கடித்து முக்குளிக்கச் செய்தவர் அவர். அந்த இலக்கியப் பெருங்கடலில் நின்று இன்றுவரை கரையேறமுடியாமல் நான் தவிப்பதற்கு மூலகாரணர் அவர். பல்கலைக் கழகத்தில் நான் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்து பயில்வதற்கு வித்துவான் இட்ட இந்த விதையே அடிப்படையாயிற்று. இன்றும் விரிவுரை வகுப்புக்குள் நுழையும் போது வித்துவான் அவர்கள் என்னோடு தோன்றாத் துணையாக வந்து கொண்டிருக்கிறார் என்பது என் உணர்வு.

வித்துவான் அவர்களது பிரிவு என்னைப் பொருத்தவரை, நான் என் அறிவுப் பசியைத் தீர்த்துவந்த அமுதசுரபியை இழந்துவிட்டேன் என்பதாகும். இந்த இழப்பு தொடக்கத்தில் சுட்டியது போல நீங்காத சோகமாய் நிலைத்து ஏக்கத்தை நிரந்தரமாக்கிவிட்டது.

கலாநிதி நா. சுப்பிரமணியன்
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்கலைக்கழகம்