திரு ச.நா.கந்தையா ஆசிரியர் (SNK- பெரிய வாத்தியார் )

அழகிய இலங்கைத்தீவின் வடபாகத்தில் அமைந்துள்ள சப்ததீவுகளில் நயினாதீவு மிகுந்த சிறப்பு மிக்கது . ஏனெனில் ஒன்று அம்பிகையின் அருளாட்சி , மற்றையது புத்த பகவான் கால் பதித்தமை ஆகிய இவ்விரு காரணங்களாலும் மற்றைய தீவுகளிலும் பார்க்க நயினாதீவு சிறப்புப் பெறுகின்றது. மணிபல்லவம், நயினை , மணித்தீவு , நாகதீவு என பல சிறப்புப் பெயர்களையும் இத்தீவு கொண்டுள்ளது.

அன்னை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் அருட்கடாட்சம் பெற்ற இத்தீவிலே 1901ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி திரு சண்முகம் நாகநாதர், மீனாட்சி நாகநாதர் தம்பதியினருக்கு ஏக புத்திரனாக திரு கந்தையா அவர்கள் பிறந்தார். திரு கந்தையாவுக்கு இணைபிரியா அக்காவாக திருமதி இளையநாச்சியார் கணபதிபிள்ளை உடன் இருந்தார். தமக்கைக்கு 5 வயதாகவும், தம்பி கந்தையாவுக்கு 3 வயதாகவும் இருக்கும் போது தமது தந்தையை இழந்துவிட்டனர். இளம் கைம்பெண்ணான மீனாட்சி மனம் தளராது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார். கந்தையா சின்னஞ்சிறு பாலகனாக இருக்கும் போதே சிவதீட்சை பெற்று கல்வியறிவிலும், நல்லொழுக்கத்திலும் , இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். இவர்களது குலதெய்வம் அன்று இளையபண்டாரம் என்று அழைக்கப்பட்ட வீரபத்திரர் ஆவார். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சின்னஞ்சிறு கந்தையா குலதெய்வத்தைச் சென்று வழிபடுவது வழக்கம். அவர் அன்னை ஸ்ரீ நாகபூசனியிலும் மிகுந்த பற்றுள்ளவர்.

இவர் கல்வியில் சிறப்புற சித்தியடைந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தனது ஆசிரியர் பயிற்சியினை சிறப்புற முடித்து 1928ம் ஆண்டிலே நயினையில் முதல் முதல் தோன்றிய அறிவாலயமாகிய தில்லையம்பல வித்தியாசாலைக்கு முதல் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். "என் கடன் பணி செய்து கிடப்பதே " என்ற அப்பர் வாக்கிற்கிணங்க கல்வியே கருந்தனமாகக் கொண்டு தனதூர்மக்களை அறிவுச் சுடராக மாற்றுவதில் அல்லும் பகலும் அயராது உழைத்தார். இடநெருக்கடி காரணமாக தில்லையம்பல வித்தியாசாலை 1948ம் ஆண்டளவில் இவரது முயற்சியால் இன்றைய நாகபூசணி வித்தியாசாலை வளாகத்துக்கு இடமாற்றமும் பெயர் மாற்றமும் பெற்றது. இவர் ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் மேல் கொண்ட பெரும் பக்தியினால் இப் பாடசாலைக்கு இப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். நாகபூசணி வித்தியாசாலைக்கு வாயிருப்பின் அது இன்றும் என்றும் பெரியவாத்தியார் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்குமென்றால் மிகையாகாது.

நயினை மண்ணில் உதித்த ஒருவராலேயே ஊர் மக்கள் கல்வியிலே மறுமலர்ச்சி பெற்ற காலமது. கல்வியின் கலங்கரை விளக்கமாக விளங்கிய அவரை பெரிய வாத்தியார் என அன்றைய ஊர் மக்கள் அழைத்ததில் வியப்பொன்றுமில்லையே. நாவலர்கள் பலர் இருப்பினும் நாவலர் என்ற நாமம் ஆறுமுகநாவலரைக் குறிப்பது போல தலைமையாசிரியர்கள் பலர் நயினாதீவில் இருப்பினும் பெரிய வாத்தியார் எனும் பெயர் ச.நா. கந்தையா ஆசிரியர் அவர்களையே சாரும். அவரிடம் நேரிடையாக கற்றுத்தெளிந்த மாணவர்கள் ஆசிரியர்களாகி இவரின் உறுப்பெளுத்து எழுதவேண்டும் என்ற கொள்கையை இன்றும் கடைப்பிடிக்கும் தன்மை இவர் உறுப்பெளுத்தில் கொண்ட பற்றை இன்றும் பறைசாற்றி நிற்கின்றது. இவர் தனது ஆசிரியர் பணியை நயினாதீவில் மட்டுமல்ல வேலணை , புங்குடுதீவுப் பாடசாலைகளிலும் ஆற்றியுள்ளார். மிக நீண்ட காலம் நாகபூசணி வித்தியாசாலையில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த இவர் 1961ம் ஆண்டு கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் நயினாதீவின் அபிவிருத்தியிலும், ஆன்மீக செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தார். முதலாவது ஆங்கில வைத்தியசாலை உருவாக முயற்சி செய்து தனது இல்லத்தில் இடம் கொடுத்து உதவியுள்ளார். நயினை மக்களின் பொருளாதாரச் சிக்கலை உணர்ந்து கடனுதவி செய்யும் சங்கம் அமைத்த பெருமையும் இவரையே சேரும். அத்துடன் தீவுப்பகுதி மக்களின் போக்குவரத்துச் சிக்கலை நிவர்த்தி செய்ய கூட்டுறவு முறைமையில் தீவுப்பகுதி மோட்டார் வள்ளச் சேவையை அமைத்து உதவினார். நாகம்பாளின் அடியவர்களுக்கு உதவும் முகமாக மக்களைத் தயார் படுத்தி நயினாதீவு யாத்திரிகர் தொண்டர் சபையை உருவாக்கினார். மற்றும் வீரபத்திரர் கோவில் விமானம் ஆதி விரும்பு முறைமையில் கட்டிமுடித்த பெருமையும், முருகன் கோவில் திருப்பணி போன்ற ஆலய அபிவிருத்திகளிலும் அயராது முன்னின்று உழைத்தார். இவர் நாகபூசணி ஆலயத்தின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட பரிபாலனசபை முறைமையை உருவாக்க ஸ்ரீகாந்தா முதலானோரின் உதவியுடன் பன்னி-ரண்டு வருடங்கள் அயராது வழக்காடி இறுதியில் வெற்றியும் பெற்றார்.

கடவுள் பக்திமிகுந்த பெரிய வாத்தியார் நயினாதீவுச் சாமியார் என அழைக்கப்பட்ட முத்துச்சாமியாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார். காலத்துக்குக் காலம் சுவாமிகள் பெரிய வாத்தியாரின் நயினாதீவு வீட்டிலேயே தங்கியிருந்து அடியார்களுக்கு அருளாசி வழங்குவார். சுவாமிகள் சமாதியடைவதற்கு சில வருடங்களுக்கு முன்பே தான் வைத்திருந்த பங்கஞான வேலை பெரிய வாத்தியாரிடம் கொடுத்து அருளாசியும் வழங்கியுள்ளார். சுவாமிகளின் பெரும்பாலான அடியவர்கள் சிவலிங்கப் புளியடியை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அதையுணர்ந்து பெரிய வாத்தியார் அதையே தமது வாழ்விடமாகக் கொண்டார்.

ஆத்மஜோதி ஆசிரியரும், இல்லறஞானி என அழைக்கப் பட்டவருமாகிய திரு. க. இராமச்சந்திராவின் சகோதரர் தாமோதரம் பிள்ளையின் மூத்த மகள் புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளாக கேதாரகௌரி, இராஜராஜேஸ்வரி என இரு பெண் பிள்ளைகளும், நாகேஸ்வரன், சிவராஜசூரியன், பிறைசூடி என மூன்று ஆண் பிள்ளைகளையும் பெற்று மகிழ்ந்தனர். பெண்களிருவரும் ஆங்கில ஆசிரியர்களாகப் பணி புரிந்து தற்போது அம்பிகையடியினை அடைந்து விட்டனர். நாகேஸ்வரன் நிலஅளவையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுச் சிவலிங்கப் புளியடியில் வசிக்கின்றார். சிவராஜசூரியர் ஐக்கிய அமெரிக்காவிலும் , பிறைசூடி ஜெர்மனியிலும் வசிக்கின்றார்கள்.

வைத்தியர்களான இராசரத்தினம், பரராசசிங்கம், மற்றும் ஆசிரியை சியாமளா, வசந்தராணி, ஆசிரியை சரோஜா ஆகியோர்களை மருமக்களாகவும், கிருபாலினி, மஞ்சுளா, குமரேசன், பரந்தாமன், வரதப்பிரியா, லதா, சங்கீதா, பார்த்திபன், திலீபன், தனுஜா, அம்பிகா ஆகியோரைப் பேரப்பிள்ளைகளாகவும் கொண்டு வாழ்வில் இன்புற்றிருந்தார்..

நயினாதீவுச் சுவாமிகளும் சிவலிங்கப் புளியடியிலேயே சமாதியடைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சிவளிங்கப்புளியடியில் இருந்த காலத்தில் முத்துச்சாமியாரின் சீடரான யோகர் சுவாமிகளின் ஆசியும் பெற்று அங்குள்ள சிவதொண்டன் நிலையத்திலும் ஆன்மீக சேவை புரிந்துள்ளார். இவர் தமது எண்பத்தி ஏழாவது வயதில் 1987ம் ஆண்டு மார்கழி மாதம் 23ம் திகதி சிவலிங்கப் புளியடியிலுள்ள தமது இல்லத்தில் தனது இன்னுயிரை ஈர்த்தார்.
இறுதியாக அவர் நயினை மண்ணிற்கு கல்வி வளர்ச்சியிலும், அபிவி ருத்தியிலும், ஆன்மீக வளர்ச்சியிலும் செய்த சேவையினை நாம் என்றென்றும் மறக்க முடியாது. தன் தாயின் கனவுகளை நனவாக்கிய உத்தமரை தாய் மண்ணின் தேவைகளை உணர்ந்து செயலாற்றிய பெரிய வாத்தியாரை நாம் என்றென்றும் மறத்தலாகாது.

கனடாவிலிருந்து அன்பு மருமகள்