நண்பனாய்............... நல்லாசிரியனுமாய்..............

தாத்தா ...
என் அன்புத் தத்தா ...

ஒரு கணம் ஒரே கணம் நடந்து முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்ற கடந்தகால நினைவலைகள் யாவற்றையும் ஒருங்கிணைத்து உங்களின் அன்பு கெழுமிய, அறிவு துலங்கும் உருவத்தை ஒரே தரம் மீண்டும் நான் அகத்தில் தரிசனம் செய்து பார்க்கின்றேன்.

அறிவு ஒளிரும் கண்களும், அன்பு களை கட்டும் உருவமும், அகத்தின் அழககைப் புறத்தே இனங்காட்டும் வெள்ளை நஷனலும் வேட்டியும், எதையோ செய்து முடித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் எந்தநேரமும் பரபரக்கும் ஓர் அவசரமும், எப்போதும் உங்களிடம் குடிகொள்ளும் மனிதமும், நீக்கமற உங்களிடம் நிறைந்திருந்த அன்பும், பண்பும், எளிமையும், ஆழங்காணமுடியாத அறிவும் அமைந்த உங்களை, என் கறுத்தத் தாத்தாவை "எப்பிறப்பில் காண்பேன் இனி" என்று மனம் அழுகிறது.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு"
என்ற திருக்குறளின் உட்கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றேன். வாழ்வின் நிலையற்ற தன்மையை, மரணத்தின் நிதர்சனத்தை வள்ளுவன் எவ்வளவு அழகாக எடுத்தியம்பியுள்ளான். இந்த உணர்வோடு எனக்கு ஏடு தொடக்கி வித்தியாரம்பம் செய்துவைத்து, எனது கல்விக்கு வித்திட்ட கலங்கரை விளக்கம் இன்று எங்களுடன் இல்லை என்ற துயரம் தோய்ந்த உண்மையை உணர்ந்து கொள்கிறேன்.

எனது வாழ்க்கைப் பயணத்தில் எனது கல்விக்குக் களம் அமைத்து, வழிகாட்டியாக நின்று, என்னை நெறிப்படுத்திய உங்களையும், மழலைப் பருவத்தில் தனது மடியைத் தொட்டிலாக்கித் தாலாட்டி உணவூட்டியதோடு மட்டுமன்றி பழமொழிகளையும், விடுகதைகளையும், இதிகாச புராணக் கதைகளையும் கதைகதையாக சொல்லித் தந்த உங்களது அன்னையை, ஏட்டறிவு ஏதுமின்றி, எழுத்தறிவு சிறிதுமின்றிப் பள்ளிக்கூடவாசமே இன்றி ஆனால் அளவிடற்கரிய அறிவு படைத்த உங்கள் தாயாரை, அந்த அமுதசுரபியை, எனது பெத்தாச்சியை நினைக்கும்போது மீண்டும் மழலையாகி அன்னை மடியில் தமிழுணவு உண்ண மாட்டேனோ என்றும், அந்த நாளும் வந்திடாதோ என்றும் மனம் ஆவல் கொள்கிறது.

கறங்குபோல் சுழலும் காலவிட்டத்தில் எனது வாழ்வின் வளர்ச்சிக்கு அன்பு நிழல் தந்து, அறிவு நீர் வார்த்துச், சந்தேகக் களை பிடுங்கிச், சிந்தனை எருபோட்டு, நண்பனாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய் நின்று ஒளிதந்த தீபம் இன்று எங்களுடன் இல்லை.

சொல்விற்பனவும், அவதானமும், கல்வி சொல்லவல்ல நல்வித்தையும் தந்து மாணவர் மனங்களில் நிறைந்த நல்லாசிரியனாய், செய்யும் தொழிலே தெய்வமெனக் கருதி கடமை புரிந்த செயல் திறனும், உற்றவிடத்து உதவியும், கைம்மாறு கருதாத கடமையும் கொண்டு வாழ்ந்த உங்களது வாழ்விலே யார் உற்றார்? யார் அயலார்? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்கப் புலவனின் வாக்கு உங்களது வாழ்வில் உயிர் பெற்றதன்றோ?

ஆழ்ந்த புலமையும், தெளிந்த ஞானமும் கொண்டு,
"கலையாத கல்வியும் கறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமுமன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமுங் கூனாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் பெற்று"
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உங்களின் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக அமைந்தது. ஈடுசெய்யமுடியாத இழப்பாக அமைந்த உங்கள் மறைவு உங்களது குடும்பத்தினருக்கும், உங்களது உறவினருக்கும் ஏற்பட்ட இழப்பு மாத்திரமல்ல, தமிழ் சமூகத்துக்கே ஏற்பட்ட இழப்பாக அமைந்துவிட்டது. இந்த சமூகத்திலே வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ள உங்களது மாணவர்களும், என்றுமே உங்களது அன்பர்களாக, நண்பர்களாக உடனிருந்து செயலாற்றிய அறிஞர்களும், பயன் கருதாது நீங்கள் காலத்தினால் செய்த உதவிகளுக்குக் கடமைப்பட்டவர்களும், ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரும் காலந்தோறும் உங்களை நினைவர். அன்புக்கு ஆட்பட்டுக் கண்ணீர் மல்குவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது பெயரை நிலைபெற வைக்கும் உங்களது பிள்ளைகள், உங்களின் பெருமையினாலும் புகழினாலும் தாம் வாழும் காலங்களில் உங்களின் நிலைத்த புகழை நிலைபெறச் செய்வர். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்பதற்க்கமைய எண்ணத்தாலும், செயலாலும் இல்வாழ்வின் பண்பையும், பயனையும் பெற்று வாழ்க்கைத் துணைவியுடன் வாழ்ந்த வாழ்வின் மகத்துவத்தை மரணம் முற்று முழுதாக மறைத்துவிட முடியாதபடி நீங்காத நினைவுகள் எமைத் தொடரும்.
"எச்சமென ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்றல்ல பிற"

அன்புப் பேத்தி ச. கலாநிதி