நயினாதீவு எப்போது மீள் எழுகை கொள்ளும்

நயினாதீவு நான்கு கிலோமீற்றர் சுற்றளவைக்கொண்ட சிறிய தீவாக இருந்தாலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஒரு தீவாகும். சுமார் 3000 மக்கள் இங்கு வாழ்கின்றனர்.இதை விட தினசரி சுமார் ஐயாயிரத்துக்கும் அதிக மாணவர்கள் இந்தத் தீவுக்கு வந்து செல்கின்றார்கள்.இவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச்சங்கம் கூறுகின்றது. நயினாதீவில் கடலரிப்புத் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் நாளா பக்கமும் கடல் நீர் உட்புகுவதாகவும் ஒவ்வொரு பகுதியின் ஊடாகவும் சுமார் இருபது அடி தூரம் வரை நீர் உட்புகுவதால் உவர்த் தன்மை அதிகரித்து காணப்படுவதாகவும் கூறும் மேற்படி சங்கத்தலைவர் ப.க.பரமலிங்கம் கரையோரப் பகுதிகளில் தடுப்பு மதில்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இல்லையேல் மிகக்குறுகிய காலத்தில் தீவு கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றார்.

இங்கு மாரி காலத்தில் சிறிய அளவிலான உணவுப்பொருள்கள் உற்பத்தியில் ஈடுபடுவதுண்டு.மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான பிரதான, குறுக்கு வீதிகளில் நின்ற நிழல் தரும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதால் மாரி காலங்களில் மரம் நடுகை ஊக்கிவிக்கப்பட வேண்டியது அவசியம். எனினும் வெட்டப்பட்ட மரங்களுக்குப்பதிலாக மீள் நடுகை எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் கூறப்படுகின்றது. நயினாதீவில் உள்ள வீடுகளிலும் கூட குடியிருப்பாளர்கள் நிழல்தரு மரங்களை வளர்ப்பதாக இல்லை. ஏற்கனவே மழைவீழ்ச்சி குறைந்த பகுதியில் மர நடுகைகளும் இல்லாத நிலையில் மக்கள் பெரும் வறட்ச்சிக்கு முகம் கொடுக்கின்றார்கள். பயனுள்ள நிழல்தரு மரங்களை நடுகை செய்வதுடன் பனை, தென்னை நடுகைகளை ஊக்குவிக்கும். மர நடுகை இயக்கம் ஆரம்பிக்க விவசாய கமநல சேவை உள்ளுராட்சி மன்றங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றவும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் முன்வருவது அவசியமாகும்.

தங்கி நின்று தமது கடமைகளைக் கவனிக்கக் கூடியதாக அரச அதிகாரிகளுக்கு ஒரு இடம் இல்லை. நயினாதீவு வங்களாவடியில் இருந்த வாடி வீடு நீண்ட காலமாக அழிவடைந்துள்ளது. அங்கு ஒரு புதிய வாடி வீடு அவசியம். வங்களாவபடிப் பகுதியில் இருந்த துறைமுகம் நயினாதீவின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. அதுவும் நீண்ட காலமாக பயனற்றுக்கிடக்கிறது. குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்தத் துறைமுகம் அக்காலத்தில் முக்கிய போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு கைகொடுத்து வந்தது.தற்போது மூடப்பட்டுக்கிடக்கும் இந்நத் துறைமுகம் புனரமைக்கப்பட வேண்டும்.இதன் மூலம் இலகுவான பயனம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

வீதிகளும் உரிய முறையில் திருத்தம் செய்யப்பட்டதாக இல்லை.பிரதான வீதிகளும் இரண்டாம், மூன்றாம் குறுக்கு வீதிகளும் சீர் செய்யப்படாததால் வாகனப் போக்குவரத்தும் பாதசாரிகளின் நடமாட்டமும் சிரமத்தினூடே இடம் பெறுகின்றது. பிரதான வீதி அகலப்படுத்த வேண்டும் ஏனைய வீதிகள் தாரிடப்பட்டுப் பூரணப்படுத்தல் வேண்டும். வீதிகள் ஒழுங்கற்றுக் கிடப்பதால் இங்குள்ள ஒரேயொரு பஸ் வண்டியும் அடிக்கடி ஸ்தம்பிதமடைகின்றது.பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகளைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேவை எனவும் பரமலிங்கம் தெரிவித்தார்.

இப்போது நிகழும் கடும் வறட்சியினால் பொதுவாக எல்லா இடங்களிலுமே நீர் பற்றாக்குறை உண்டு. நயினாதீவில் குடிதண்ணீர்ப் பிரச்சனை மாரி காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் நிறையவே காணப்படுகின்றது.இப்போது குழாய் நீர் விநியோகச்சேவை முன்னர் போல் பெரிய அளவில் இல்லை. இரணைமடு குடி தண்ணீர் திட்டத்தில் முன்னுரிமை வழங்குவதுடன் சாட்டி, அல்லைப்பிட்டி பகுதிகளில் இருந்து குடிநீர் வழங்க ஆவன செய்தல் வேண்டும் எனவும் சங்கம் கருதுகின்றது.

நயினாதீவு உப அலுவலகம், தபாலகங்களுக்கான கட்டடங்கள் தேவை.தற்போது இவைகள் பழைய கட்டடத்திலேயே இயங்குகின்றன. புதிய நவீன வசதிகள் கொண்ட கட்டடங்கள் அமைவதன் மூலம் ஆயுள்வேத நிலையம், பொதுநூலகம் போன்றவற்றில் மக்களுக்கான வசதிகள் நிறையவே கிடைக்கும் கட்டடங்கள் நயினாதீவின் வரலாற்றைச் சித்தரிக்ககூடியதாக இருத்தல் வேண்டும் என்பதும் மக்களது ஆர்வமாக உள்ளது.

கல்வியைப் பொறுத்தவரை கடந்தகாலங்கள் உச்சத்திலே இருந்துள்ளது.பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய மனிதர் வாழ்ந்த இடம் இது. இன்று நிலமை மாறிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. மகாவித்தியாலயம், கனிஷ்ட மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கிலம், விஞ்ஞானம் கணித பாடங்களைக் கற்பிக்க நீண்டகாலமாக தராதரம் மிக்க ஆசிரியர்கள் இல்லை என்பது ஒரு குறையாகும்.கணனி நெறிக்கான ஆசிரியர்கள் இடவசதிகள் கிடையாது.ஆசிரியர் பற்றாக்குறையை முற்றுமுழுதாக நீக்குவதுடன் மிகவும் பழமைவாய்ந்து இடிந்து விழும் நிலையிலுள்ள பாடசாலைக் கட்டடங்களைத் திருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

படகுச்சேவைகள் நன்றான இருப்பினும் படகுகள் மக்கள் பயணத்திற்கு உகந்ததாக இல்லை என்பதே பொதுவான கருத்தாகும்.மிகவும் சிறிய படகுகளில் நெருக்கடி மிக்க பயணத்தை, தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடியதான அழுக்கு நிறைந்த அங்கிகளை அணிந்து பயனிக்கவேண்டியுள்ளது. பாதுகாப்பு அங்கி என்ற பெயரில் வலுக்கட்டாயமாக இதை அணிய வேண்டியுள்ளது. பயணிகள் சுத்தமான உயிர்காப்பு அங்கிகளை பயன்படுத்துவதற்கான ஒழுங்குகள் தேவை.

தென்பகுதியில் இருந்து தினமும் நயினாதீவுக்கு வந்து சேரும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே அம்பாள் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் படகுக்கு அனுமதிக்கப்படுவதாகவும், உள்ளுர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் இவர்களை உல்லாசப் பயணிகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காக்க வைப்பது,அம்பாள் ஆலயம் செல்ல வேண்டிய அடியார்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாது செய்து விடும் என்றும் அடியார்களிடையே விமர்சனங்கள் எழுகின்றது.

நயினாதீவில் பெயருக்கே கூட்டுறவுக் கடை உள்ளது.இந்தக் கடையில் அத்தியாவசிய பாவனைப் பொருள்கள் கிடையாது.கடையில் உள்ள பொருள்களின் பெறுமதி 5 ஆயிரம் ரூபாய்க்கும் உட்பட்டதே. இதனைச்சீர் செய்ய வேண்டும். அல்லது மூடிவிட வேண்டும். இல்லாவிடில் நயினாதீவுக்கென தனியான பல.நோ.கூ.சங்கத்தை அமைக்க வேண்டும்.புங்குடுதீவு நயினாதீவு கூட்டுறவுச்சங்கத்தினால் நயினாதீவு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது எல்லோரினதும் எண்ணமாக உள்ளது.நயினாதீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை.மீள் நியமன வைத்தியர்கள் அல்லது தமது வைத்திய படிப்பை பூரணப்படுத்தாதவர்களை நியமிப்பது வழமை எனக்கூறும் மக்கள் இங்குள்ள ஒரேயொரு வைத்தியசாலையையும் ஒரேயொரு வைத்தியரையுமே நம்பியிருக்க வேண்டியுள்ளனர். வைத்தியசாலையிலே வைத்தியர் இல்லை, மருந்து வகைகள் இல்லை, குடிதண்ணீர் இல்லை, போக்குவரத்து உரிய ஆசன வசதிகள் இல்லை, நோயாளிகள் இடை நடுவே மரணத்தைத் தழுவுகின்றார்கள்.போதிய கவனிப்பு இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இங்கே மின்சார விநியோகம் தற்போது ஓரளவு சீர்செய்யப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் விநியோகம் இல்லை. மின் விநியோகம் வழங்கக் கேட்டால் பணம் கேட்கப்படுகின்றது.இதுவரை ரூபா இருபது லட்சத்திற்க்கும் அதிகமாக மக்களிடம் வசூல் செய்யப்பட்ட பணத்தில் இருந்தே மின்சாரம் வழங்கப்படுகின்றது. வீதி வெளிச்சத்திற்காக மக்கள் வழங்கிய பணத்தில் இருந்து 85 மின் விளக்குகள் பொருத்தப்பட்ட போதும் இவற்றில் எண்பது மின் விளக்குகள் இப்போது இல்லை.மீதி ஐந்து விளக்குகள் மட்டுமே இடைக்கிடை வெளிச்சம் தருகின்றது.வேலணைப் பிரதேச சபை வீதிவிளக்குகளை பொருத்தி மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். இவ்வாறான கோரிக்கைகள், வேண்டுகோள்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம் சமர்பித்துள்ளது. சுமார் 15 கோரிக்கைகளை அது முன்வைத்துள்ள நிலையில் எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே மக்களின் பார்வையில் உள்ளது.