பரம்பொருளின் அருட்பார்வையைப் பெற்ற புண்ணிய பூமி தான் நயினாதீவாகும். இங்கு வரலாற்று மகிமை கொண்ட நயினை நாகபூஷணி அம்மாள் ஆலயம் உண்டு. இவ்வாலயத்தை மனதில் கொண்டு வழிபட்ட சைவ அன்பர்கள் சைவமும் தமிழ் மொழியும் சிறப்புற்றுத் திகழ அளப்பரிய தொண்டுகளைச் செய்துள்ளார்கள். இவர்கள் தம் முன்னோர் காட்டிய நல்வழிகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவற்றில் ஒருவராக ஆறாண்டுகளுக்கு முன் மறைந்த நல்லாசிரியர் அமரர் வித்துவான் சின்னத்தம்பி குமாரசாமி திகழ்ந்தார். இவர் மாணவர்களின் உள்ளங்களில் நிறைவுடைய மனிதராக விளங்கினார். கல்லூரியில் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர் அன்பர் வித்துவான் அவர்கள். இவரின் அகத் துணைவியார் ஆசிரியை திருமதி .கனகம்மா குமாரசாமி அவர்கள் 04.09.1999 ஆம் ஆண்டு கனடாவில் இறைவன் திருவடியைச் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கமையாகும்.
இவ்வம்மையர் இறுதிவரையும் பேர் நலம் பொறித்த பெண்மைப் பெரு விளக்காக விளங்கினார். குமாரசாமியின் பெற்றோர்கள் இறை வழிபாடு, ஒழுக்கம், அடக்கம், வாய்மை, எளிமையாகிய நற்பண்புகளை தம் அணிகலன்களாகக் கொண்டு திகழ்ந்தார்கள். இவரின் தந்தையார் சின்னத்தம்பிக்கும் அகத்துணைவியார் நல்லமுத்துவிற்கும் மகனாக 26.11.1923 ஆம் திகதி இவர் பிறந்தார். குமாரசாமி ஐந்து வயதுக் குழந்தையாக இருக்கும் பொழுது தனது அருமைத் தந்தையாரை இழந்தார். தாயார் தன் குழந்தைக்கு மகாபாரதம், இராமாயணம், போன்ற கதைகளை இனிமையாகச் சொல்ல அதனைக் கேட்டு மகிழ்வார்.இவர் ஆரம்பக் கல்வியை நயினை நாகபூஷணி வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். திருநெவேலி சைவத் தமிழ்ப் பாடசாலையில் உயர் கல்வியைப் பெற்று முதன்மையாகச் சித்தி பெற்றார். திருநெல்வேலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து ஆசிரியராக விளங்கினார். இவர் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரியும் பொழுது வயது இருபத்தொன்பதாகும்.
ஆசிரியர் குமாரசாமி தனது தாயாரின் திருமண விருப்பை அறிந்தார். இதனால் இவர் சின்னத்தம்பிக்கும் மனைவியர் நாகம்மாவுக்கும் பிறந்த கனகம்மா என்னும் ஆசிரிய நங்கையை அகம் குளிர வாழ்கைத் துணைவி யாக ஏற்றுக் கொண்டார். இல்லறம் நல்லறமாக விளங்குவதாயிற்று. அவன் அருளால் எல்லாச் செல்வங்களையும் இனிது பெற்று மகிழ்ந்தார்கள். இவர் தமிழ்மொழிக் கல்வியில் சிறந்த புலமையைப் பெறவேண்டும் என்று விளைந்தார். 1953 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "வித்துவான்" என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் சைவசமயத்தில் மிகுந்த ஈடுபாடுடைய நாயன்மார்களின் வழியைத் தானும் பின்பற்றி ஒழுகினார். ஐம்பெருங் காப்பியத்திலும் இராமயணத்திலும் அக்கறை கொண்டவர். இவர் கம்பன் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவுகள் மக்கள் உள்ளத்தை ஈர்த்து நின்றன.
வித்துவான் குமாரசாமி ஓளவையார் நல்கிய நல்வழி நூல்களை மனத்தால் போற்றி ஒழுகினார். இவர் முல்லைதீவு, நெல்லியடி, வவுனியா போன்ற இடங்களிலுள்ள மகா வித்தியாலயத்தில் நல்லாசிரியரகவும், அதிபராகவும் கடமை புரிந்தார். 1971 ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் மகளிர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பன்னிரண்டு ஆண்டுகள் வரையும் பணிபுரிந்தார். இவர் தனது புலமை ஆற்றலினால் பயிற்சி ஆசிரியர்கள் மத்தியில் நற்புகழ் பெற்றுத் திகழ்ந்தார். கலாசாலையின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். இதுவே தனது ஒளிமயமான காலப்பகுதியாகக் கருதி ஆராத இன்பம் கொண்டார். கோப்பாய் ஆசிரியைக் கலாசாலையில் ஒவ்வொரு ஆண்டும் "முத்தமிழ் விழா" பெரும் விழாவாக இனிது நடைபெறும். இவ்விழா நாளில் அதிபர் மழைவளம் பெய்யாது காக்க விநாயகப் பெருமானுக்கு பூசை செய்து வழிபடுவது வழக்கமாகும். ஒருமுறை கலாசாலையில் முத்தமிழ் விழா நடைபெறுவதட்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு பெரும் மழை விடாது பெய்வதாயிற்று. இதனைக் கண்டு அதிபர் முதல் பயிற்சி மாணவர்கள் வரையும் கவலையில் ஆழ்ந்தார்கள். இவர்களின் கவலையைப் போக்கக் கருதினார் வித்துவான் குமாரசாமி அவர்கள். "தனக்கு உவமை இல்லாதான் தான் சேந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்ற வள்ளுவர் வாக்கினை மனதில் கொண்டு நயினை குலதெய்வத்தை உள்ளத்தால் பூசித்தார்.
இதன் பின்னர் அவன் அருளால் தோன்றிய சிந்தனையைக் கவிதையாக எழுதிப் பக்தியோடு பாடி முடித்தார். சிறிது நேரத்தில் மழை பெய்யாது வானத்தில் ஞாயிற்றின் ஒளிக்கதிர்கள் எங்கும் பரவலாயிற்று. இந் நிகழ்ச்சியை நேரில் கண்ட அனைவரும் குமாரசமியின் தெய்வீக அருள் சக்தியைக் கண்டு மகிழ்ந்தார்கள். அன்றைய முத்தமிழ் விழா குமாரசமியின் பக்தி நெறியை வெளிப்படுத்தும் திருநாளாகும். சிறந்தடியார் சிந்தனையில் நின்று அருள் புரியும் ஈசனின் மகிமையை யாவரும் அன்று உணர்ந்தனர்.
நயினை குமாரசாமி ஓளவையார் நல்கிய நல்வழி, ஆத்திசூடி, வாக்குண்டாம், கொன்றைவேந்தன், போன்ற நூல்களுக்கு உரை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவர் பதிப்பித்தவற்றுள் "நவராத்திரி தோத்திரப் பாமாலை", வித்துவம், குசேலர் சரிதம், குழந்தை பாடல் போன்ற நூல்களையும் குறிப்பிடலாம். இந்நூல்களைத் தமிழ் மக்கள் பெற்று பயன்பெற வேண்டும். இதுவே நாம் அவருக்குச் செய்யும் கைமாறாகும். குமாரசாமி அவர்கள் 1983 ஆம் ஆண்டு அரசாங்க பதவியிலிருந்து ஓய்வு பெற்றர். 1988 ஆம் ஆண்டு புனித சம்பதிரியர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் நல்லாசிரியராகத் திகழ்ந்தார். இவர்களின் பரம்பரைக் குலதெய்வம் நயினை இரட்டங்காலி முருகனாகும். இவர் தனது இறுதி மூச்சு வரையும் நல்லூர் முருகனிடத்தில் பேரன்பு கொண்டு ஒழுகிய பெரியாராகும்.
ஆக்கியவர் : காரைநகர் அ . சிவானந்தநாதன்