நல்லார் ஒருவர் ........

அக்காலத்திலே கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலே ஒவ்வோராண்டும் முத்தமிழ் விழா பெரும் எடுப்பிற் கொண்டாடப்படுவது வழக்கம். மாதக் கணக்கில் நாட்டிய நாடகம், நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட எவ்வளவோ கலைநிகழ்ச்சிகளை இல்லப் போட்டியடிப்படையில் மாணவிகள் ஆயத்தம் செய்வதில் மும்மரமாக ஈடுபட்டு உழைப்பார்கள்.

விழாவன்றோ கேட்க வேண்டியதில்லை. கலாசாலை வாயில் தொடங்கி விழா நடைபெறும் திறந்தவெளி அரங்கு வரை அலங்காரங்கள் கண்ணைப்பறிக்கும். விரிவுரை மண்டப வாயில் தாழ்வாரத் தரையெங்கும் மாக்கோலம், பூக்கோலம் (பிழிந்த தேங்காய்ப்பூவுக்கு நிறமூட்டியது) என்று ஆசிரிய மாணவிகளின் கலையுணர்வும், அழகுணர்வும் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாகும். அந்நாளைய அதிபரான திருவாட்டி இரதிதேவி ஆனந்தக்குமாரசாமி (இன்று அவர் இல்லை) விழாவைக் குழப்பும் வகையிலே மழை பெய்யாதிருக்க வேண்டி இருபாலைக் கற்பகப்பிள்ளையாருக்கு அருச்சனை செய்வதும், நேர்த்திவைப்பதும் வழக்கமாயிருந்தது.

ஆனால் குறித்த தமிழ் விழா ஒன்றின் போது அந்த அம்மையாரின் பிராத்தனைக்குக் கற்பகப் பிள்ளையார் மசியாததால், அன்று காலையிலிருந்தே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. அதிபர், விரிவுரையாளர்கள், மாணவிகள் எல்லாருடைய முகங்களிலும் ஏமாற்றம் இருளாகக் கவிந்ததற்குக் கேட்கவா வேண்டும். ஆனால் இவர்களில் ஒருவரின் முகத்தில் மட்டும் வழக்கமான மலர்ச்சி மாறாமல் குடியிருந்தது. அவர் ஒரு தாளை எடுத்தார். பேனாவால் அதில் ஏதோ விறுவென்று எழுதினார். அது ஒரு கவிதை. மழையைத் துதித்து வேண்டித் தற்காலிகமாக அன்று மட்டும் பெய்யாதிருக்க மன்றாடிய கவிதை.

அவர் தாம் யாத்த கவிதையைப் பாடினார். எல்லோரும் கேட்டு நின்றனர். என்ன அற்புதம்! அரைமணித்தியாலத்தில் மழை நின்று விட்டது. முகிலுக்குள் மறைந்திருந்த கதிரவனும் தலைகாட்டினான். ஒரு சில மணித்தியாலங்களில் மழை பெய்த சுவடேயில்லை.

இந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் வேறு யாரும் அல்லர். புரந்தார் கண்ணீர் மல்க வைத்து ஓராண்டுக்கு முன் எம்மைப் பிரிந்த அமரர் வித்துவான் குமாரசாமி அவர்கள் தாம். இதனை நான் நேரிற் கண்டவனல்லன். வித்துவானின் பின்னவனாக நான் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நான்காண்டுகள் விரிவுரையாளனாப் பணியாற்றிய காலத்தில் ஒவ்வோராண்டு முத்தமிழ் விழாவின் போதும் அதிபரும், விரிவுரையாளர்களும் வாயூறியூறி நினைவு கூர்ந்து சொல்லக் கேட்டது தான்.

வித்துவான் கவிதை இயற்றிப் பாடியதும், தொடர்ந்து மழை நின்றதும் 'காக்கை இருக்கப் பனம்பழம் வீழ்ந்தது' போன்ற தற்செயல் நிகழ்வாகப் பலருக்கும் தோற்றக்கூடும். ஆனால் அவரை உள்ளத்தால் நேசித்து அவரின் உள்ளத்தின் உயர்வை உணர்ந்தவர்களுக்கு அவரின் பாட்டுத்தான் மழையை நிறுத்தியது என்று நம்பாமல் இருப்பது இயலாத காரியம். "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை". அதே நல்லார் மழை வேண்டாக் காலத்தில் அதனைப் பெய்யாது நிறுத்தவும் வல்லவராய் இருப்பார் என்பதற்கு ஐயம் இல்லை. அத்தகைய விரல்விட்டு எண்ணக்கூடிய நல்லாருள் ஒருவராகவே வித்துவான் குமாரசாமி அவர்கள் என் நெஞ்சிலே என்றும் இருப்பார்.

அவரின் பரிந்துரையை முழுமனதுடன் ஏற்ற அதிபர் திருவாட்டி ஆனந்தகுமாரசாமி என்னை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக ஏற்றுக் கொண்டார். ஆனால் வித்துவான் அவர்களிடம் எதிர்பார்த்த சில பண்புகளை அவர் என்னிடமும் எதிர்பார்த்து ஏமாந்துதான் போயிருப்பார் என்பது நிச்சயம். (விரிவுரைகள், மாணவிகளின் பலதுறைச் செயற்பாடுகளின் எனது பங்களிப்பு அவர் எதிர்பார்த்ததிலும் கூடுதலாய் இருந்தது என்பது உண்மை. அதுவன்று இங்கு நான் கூறுவது.) "பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்" எந்தப் பணிப்பையும் பெருமை சிறுமை பாராது முன்வந்து முழுமனத்துடன் செயலாற்றிய குமாரசாமிப் பெரியாரை இந்தச் சிறியவனில் அந்த அம்மையாராற் காணமுடியாது போனது என் தவறல்லவே! நான் எனும் அகந்தை பட்டு உழன்ற நான் எங்கே? அடக்கமும் எளிமையும் ஒருசேர அமைந்து "பணியுமாம் என்றும் பெருமை" என்ற வள்ளுவனின் வாக்குக்கு இலக்கியமாய் வாழ்ந்து காட்டிய அவர் எங்கே?

சிலந்தியிடம் பாடம் கற்று, ஆறு தோல்விகளின் பின்பும் போராடி வெற்றிக் கொடி நாட்டியவன் றொபேட் புறூஸ் மன்னன். வாழ்க்கையிலிருந்தும், தாம் கற்ற நூல்களிலிருந்தும் "தோல்வியே வெற்றிக்குத் தூண்" என்ற உண்மையைக் கற்றுக் கொண்டு, எதற்கும் கலங்காது, "மடுத்தவாயெல்லாம் பாடாக" வாழ்க்கையை உழுதிட்டு, இறுதிவெற்றிகளை ஏராளமாகக் கண்டவர் வித்துவான். அவர் கல்வியிலும் வித்துவான், வாழ்க்கையனுபவ அறிவிலும் வித்துவான்.

சங்கீதபூஷணம் இராசலிங்கமும், வித்துவானும் வன்னியிலே பெருமெடுப்பில் நெல்விளைவித்தவர்கள். ஓராண்டு நெல் மூடிகளைக் கொண்டு வந்து குவித்த பொழுது அடை மழை பிடித்துக் கொண்டது. வெள்ளம் காட்டாராய்ப் பெருகி மூட்டைகளை இழுத்துச் சென்ற பொழுது, சித்தர்கள் போல கைதட்டிக் கொண்டு "போனால் போகட்டும் போடா" என்று இருவரும் பாடினார்கள். இது வித்துவான் எனக்குச் சொன்ன கதை.

இதே மனந்துளங்காமையை அவரிலே காண எனக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் வாய்த்தது. வித்துவானும் நானும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், முதுமாணித் தகுதிகாண் பரீட்சைக்கு (M.A.Q) ஒன்றாகத் தோற்றினோம். நான் ஒரு வினாத்தாளுக்கு விடை எழுதியபோது, கேட்டிருந்த ஐந்து வினாக்களுக்கு நான்குக்கு மட்டும் விடை எழுதினேன். எழுதிமுடித்துப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறி வித்துவானோடு கலந்துரையாடிய பொழுதுதான் என் தவறு எனக்குத் தெரிந்தது. "செய்தக்க செய்யாமையால் கெட்டுவிட்டதே" என்று நான் பெரிதும் கலங்கினேன். வெட்கமின்றிச் சொல்வதானால் கண்ணீர் விட்டேன். "ஏன் ஐயா கவலைப்படுகின்றீர்கள்? உங்கள் நான்கு விடைகளே ‘B’ எடுக்கப் போதியவை. ‘A’ எடுக்கப் போவதில்லையே என்றா கவலைப்படுகிறீர்கள்? என்று அவர் சிரித்தபடி என்னைத் தட்டிக் கொடுத்ததாலேயே, பரீட்சையைத் தொடர்ந்து எழுதாது பெட்டி கட்ட நினைத்த நான் தொடர்ந்தும் மற்ற வினாத்தாளுக்கும் விடை எழுதினேன். வித்துவான் சொன்னது போல அந்த வினாத்தாள் விடைக்கு எனக்குக் கிடைத்தது B !

இதே சூழ்நிலையில் வித்துவான் ஒரு வினாத்தாளில் (செய்யுள் யாப்பு தொடர்பானது) விடையொன்றைப் பிழையாக எழுதிவிட்டார். நானும் அவரும் கலந்துரையாடியபோது இவ்வுண்மை புலனாயிற்று. வித்துவானோ சிரித்துக் கொண்டே, Well, I will try next time. என்றார். "வானத்துளங்கிளென் மண்கம்பமாகிலென்" என்று வாழ்ந்த அந்த மலை இன்று சரிந்துவிட்டது.

வித்துவானோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு, அவரின் நகைச் சுவையுணர்வை என்றும் மறந்துவிடல் இயலாது. ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த பொழுது நாங்கள் இருவரும் விரிவுரையாளர்களாகக் கலந்து கொண்டோம். கருத்தரங்கின் இடைவேளையின் போது பண்டிதர் வே. சண்முகலிங்கம் (இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்து மறைந்தவர்) "அழகுக்கு ஓர் எழுத்துச் சொல் ஒன்று சொல்லுங்கள்" என்று வித்துவானைக் கேட்டார். கேட்டது கேட்க முன்னமே 'ஐ' என்ற பதில் வித்துவானின் வாயிலிருந்து வழுக்கி விழுந்தது. தொடர்ந்து அவர் சொன்னார் "நான் சொன்னது தமிழ் 'ஐ', ஆங்கில ‘I’ அல்ல. நான் வித்துவானை நோக்கிச் சொன்னேன். "ஐயா! உங்களுக்கு அழகு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். கல்வியழகு நிறைந்திருக்கும் பொழுது புற அழகு இருந்தென்ன? இல்லாது விட்டால் என்ன?"

ஆம்; கல்வியலகும், பண்பும் ஒரு சேரப் பெற்ற சால்பழகரான வித்துவான் குமாரசாமி அவர்கள், எம்போலியர் உள்ளக்கிழியில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் தான். இதற்கு ஐயமே இல்லை.

க. சொக்கலிங்கம் (சொக்கன்)