நாகம் வழிபட்ட நாயகிக்கு இன்று மகாகும்பாபிஷேகம்

மக்களின் துயர் துடைக்கும் அருள் நிலையங்களாக ஆலயங்கள் இருக்கின்றன. காலத்திற்குக் காலம் ஆலயத்தில் திருப்பணிகள் தடையின்றி சிறப்புடன் நடைபெற வேண்டும். அன்பும் பக்தியும் சிரத்தையும் கொண்டு அன்பர்கள், அடியார்கள், உருகி உருகி வழிபட்டு ஆறுதல் அடைய வேண்டும். பிரார்த்தனைகளிலே தான் உடலும், உயிரும், உள்ளமும் மனமும் அசைக்க முடியாத சக்தியைப் பெறும்.

சாந்தியும் சமாதானமும் நிறைந்த புண்ணிய பூமியாகிய நயினா தீவில் அம்பிகை எழுந்தருளி உலகெங்கிலுமுள்ள ஆன்மாக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றாள். உலகத்திற்கு தாயாகிய அன்னை பல சக்தி பீடங்களில் அமர்ந்திருக்கின்றாள். இவ்வாலயத்தில் புவனேஸ்வரி பீடாக அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். இலங்கைத் திருநாட்டில் இப்புனித ஆலயத்தைப் போன்ற தொன்மையும் கீர்த்தியும் வாய்ந்த சக்திபீடம் பிறிதொன்றில்லை எனலாம். தனது அளப்பரும் கருணையினால் உயிப் வர்க்கத்தை அரவணைத்துக் காத்து வருகின்றாள். ஒரு சர்ப்பம் ஒருநாள் இங்கே வசித்து தவஞ்செய்து தனது சாபம் நீங்கப் பெற்றது. அதனைத் தனது திருமேனியில் அணிந்து சாப நிவர்த்தி செய்தமையால்த்தான இங்கு எழுந்தருளிய அன்னை அம்பிகை நாகபூசணியென்னும் திருநாமம் உடையவளாக விளங்குகின்றாள்.

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் சகலவிதமான நோய்களையும் நீக்கும் கும்பாபிஷேகம் எல்லாவற்றையும் விடச் சிறந்த கிரியையாகும். இதனால் பேரானந்தப் பெருவாழ்வும் கோடி புண்ணியமும் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. கும்பாபிஷேகம் என்பது பல்வேறுபட்ட குறைபாடுகளையும் நீக்கி இறைவனது திருவருள் பாலிக்குமாறு செய்யும் பெருஞ் சாந்தியாகும். இச்சாந்தியானது ஆலயங்களில் உரிய காலங்களில் செய்ய வேண்டியது இன்றியமையாதது. பிறந்திருக்கும் இப் புத்தாண்டு எமது திருக்கோயில்களுக்கு அணி செய்யும் ஆண்டாக மலர வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் விருப்பமாகும். அந்த வகையில் நயினை அம்பிகையின் கருணையும் இதற்குத் துணை செய்வதாக அமைய வேண்டும். எனவே தான் நயினை ஸ்ரீ நாக பூசணி அம்மாளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடை பெறத் திருவருள் பாலித்துள்ளது.

இன்று நயினாதீவில் இந்திரலோகம் எனப் போற்றத்தக்க வகையில் அம்பிகையின் ஆலயத்தில் சிறப்பான பலவகைப்பட்ட பாரிய திருப்பணிகள் நிறைவேற்றபட்பட்டுள்ளன. ஆலய உட்பிரகாரத்தில் நிரந்தர சீமெந்துக் கூரையிடுதல், சீமெந்துக் கூரை திராவிடச் சிற்ப வேலைப்பாடுகளுடன் நவீனப்படுத்தல், புதிதாக தூண்கள் அமைத்து திராவிட சிற்ப முறைப்படி அழகுபடுத்தல், ஆலய சுற்றுமதில்கள் அமைத்தல், இரதோற்சவ இளைப்பாற்று மண்டபம், புதிய கரும பீடங்கள் அமைத்தல் இன்னோரன்ன பல திருப்பணிகள் இடம்பெற்றுள்ளன. ஆலய கிழக்கு வெளிவாசலில் 108 அடி உயரமான இராஜகோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுறக்காட்சி தருகின்றது.

திருப்பணிகள் பல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடியார்கள் பலர் அம்பிகையைத் தரிசிக்க அம்பாள் ஆலயத்திற்கு சென்று நேரில் கண்டு மகிழ்ந்ததையும் அருட் கடாட்சத்தை பெற்றுக் கொண்டதையும் நாம் நேரடியாகக் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. அம்பிகை ஆலயத் திருப்பணி வேலைகள் யாவும் நல்ல முறையில் நடைப்பெற்றுள்ளது. தங்களது சிரமம் பாராது உள்ளன்போடு அயராத கண்ணும் கருத்துமாக அறங்காவலர் சபைத் தலைவர் கா.ஆ.தியாகராசா அவர்களதும் ஏனைய அறங்காவலர்களதும் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் திருப்பணிகள் சிறப்புடன் நிறைவேறக் காரணமாகும். இப்பெரும் திருப்பணிகளை முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றியிருப்பது அம்பிகையின் தெய்வீகச் செயலாகும். பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மிகவும் குறுகிய காலத்தில் மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

அலைபாயும் ஆழ்கடலில் அடியார் கூட்டம் ஆர்ப்பரித்து கரையேறி அருளே சேர்க்க
தலைவாயில் கோபுரத்தின் முன்னே கூடித் தம்வசத்தை இழந்து நின்று தாயே என்று
நிலையாய உன்னுருவம் நினைந்து உள்ளம் நெக்குருவ நின்றுருகும் தெய்வக்காட்சி
கலையாது நயினை நாகம்மாளே! கண்பணிப்பக் குடமுழுக்கு ஆடீர் அம்மா!
ஆழ்கடலில் அடியார் கூட்டம் அலைமோதிக் கரை சேர்த்து அம்பிகையின் கோடி
ரத்தின முன் தாயே என்று உள்ளம் நெக் குருகி நின்று கண்ணீர் மல்கி

அம்பிகையை வழிபடும் காட்சி அருட் காட்சியாகும். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோயில் ஆதீன பிரதம சிவாச்சாரியார் சாகித்திய சிரோன்மணி சிவாகம திவாகரன் சிவ ஸ்ரீ பரமசாமி குருமணி முத்துக்குமாரசாமி சிவாச்சாரியார் அவர்கள் பிரதம சிவாச்சாரியராக இருந்து மகாகும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடாத்தி வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அம்பிகையின் மகாகும்பாபிஷேகத்தை கண்டுகளிக்கவும் அருளமுதைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடியார்கள் நயினாதீவுக்கு வருகை தரவுள்ளார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் நயினையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியார்களும் ஏனைய வெளிநாடுகளில் வசிக்கும் அடியார்களும் அம்பிகையை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருமளவில் நயினையம்பதியில் கூடி அம்பிகையின் அருட்கடாட்சத்தை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள். இவ்வாறு வருபவர்களுக்கெல்லாம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுத சுரபி அன்னதான சபையினர் அன்னதானம் மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அம்பிகையின் திருவருளும் ஆசியும் நிறைவோடு கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்போம். நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளை நேரில் வந்து தரிசித்து எல்லா நலன்களையும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.

நயினை. நா. க. குமாரசூரியர் (JP)