நாகர்களும் நாக பூசணியும்

அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.

உலக இயக்கம் பற்றி அண்மையில் அணுவில் இருந்து ஆராச்சி தொடங்குவோம் என்று விஞ்ஞானிகள் சொல்ல ஆழ்கடலை துளை இடவேண்டும் அதனால் ஆபத்துவரும் என்று பலர் மறுக்க இந்திய விஞ்ஞானி அப்துல்கலாம் நடராஜர் சிலையை வைத்து ஆராய்ச்சியை தொடங்குவோம் என்று கூறி 100 விஞ்ஞானிகள் முன்னிலையில் மெய்ஞானத்தை ஆராச்சி செய்து வெற்றிகரமாக முடித்தும் காட்டினார்.இது மெய்ஞானத்தை நிலை நிறுத்திய விஞ்ஞானம்.சில வருடங்களுக்கு முன்னம் அணுவை துளைத்து தாம் எண்ணியதை முடிப்போம் என்று பெரும் பிரயத்தனம் செய்து முயற்சித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள் பிரான்ஸ் ,சுவிஸ் எல்லையில் நிலத்தை துளைத்து தாம் இலக்கை அடைய முடியாமல் பெரும் ஆபத்து விளையும் என்பதால் பின்வாங்கினார்கள் தோல்வியும் கண்டார்கள்.

அணுவில் இருந்து தோன்றி பரிணாம வளர்சி அடைந்த உயிர்களில் மனித குலத்தின் முதல் குடிகள் தமிழர்கள் என்று பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.பலர் தொடர்ந்தும் ஆய்வுகள் செய்கின்றார்கள்.மறை மலை அடிகளும் தமிழர்களே முதல் குடிகள் என்று கூறுகின்றார்.இதை தேவநேயப் பாவாணர்,இராமசந்திர தீட்சிதர் போன்றவர்கள் தமது நூல்களில் விரிவாக கூறுகின்றார்கள் .அந்த முதல் தமிழ் குடிகளில் நாகலோகத்து நாகர்களும் இருந்தார்கள்.ஈழத்தின் ஆதிகுடிகளான நாகர்கள் நாகலோகத்தின் அழிவின் பின்னர் அதன் எஞ்சிய பகுதியான ஈழத்தின் யாழ்ப்பாண தீபகற்பத்திலும் இலங்கையின் முழுமையான மேற்கு கரையோர பகுதிகளிலும் இந்தியாவின் முழுமையான கிழக்கு கரையோர பகுதிகளிலும் வாழ்ந்தார்கள் என்றும் பல நூல்களில் வரலாறுகள் வருகின்றது. இந்த நாகர்களே ஈழத்தின் முதல் குடிகள் என்றும் கந்தபுராணம், இராமாயணம், மகாபாரதம் ,மாந்தை மாண்மியம், போன்ற புராண இதிகாச வரலாற்று நூல்களை ஆதாரமாக மேற்கோள் காட்டிய வரலாறுகள் கூறுகின்றது ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு நாகபாம்பினை வழிபடும் மரபினை தம் வழிபாட்டு முறைகளில் கொண்டு இருந்தார்கள். இன்று நாகபூசணி அம்மன் இருக்கும் மணித்தீவில் வெண்மையான நிறம் கொண்ட நாகங்கள் பெண்தெய்வத்தை மலர்தூவி வணங்கியதாகவும் ,இதை கண்ட நாகர்கள் மரங்கள் இலைகள் தளைகளால் நிழல் அமைத்து தாமும் அம்பிகையை ,மலர்தூவி வழிபடும் மரபினை மேற்கொண்டதாகவும் அறியபடுகின்றது.

நாகங்கள் பெண் தெய்வத்தை வணங்கும் இந்த வணக்க முறை இன்றும் நயினாதீவு என்கின்ற புனித மண்ணில் இல்லாமல் இல்லை.எம்பிரான் நாக தம்பிரான் புளியம் தீவில் அதிகாலையில் துயில் எழுந்து நந்தவனத்தில் மலர் பறித்து நாக உருவெடுத்து பாம்பன் கடலை நீந்தி கடந்து நயினையில் கருவறையில் உறையும் தேவியின் பூங்குழலில் மலர் சூடி விட்டு இன்றைய கல்யாண மண்டப கட்டட பகுதியில் உறைந்து கொள்கிறார்.ஐயர் அதிகாலையில் கருவறை கதவை திறக்கும் பொழுதே அன்னை மலர்சூடிய மாதேவியாக பேரொளியோடு மலர்ந்த முகத்தோடு வரவேற்கின்றாள்.இது கடந்த காலங்களில் நடந்த உண்மை சம்பவங்கள்.பூட்ட பட்ட கருவறைக்கு நாகம் எவ்வாறு போனது தீர்த்த கோமுகி சிறு துவாரத்தால் வந்து இருக்குமா என்று ஆராச்சிகூட செய்தார்கள்.ஆனால் அம்மை அப்பரின் அற்புத செயல்களை மானிட உருத்தாங்கி பாவ வினைகளோடு அலையும் எம்மை போன்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா, ஆராச்சி செய்து உண்மை அறியமுடியுமா.

பிரபஞ்சத்தை படைத்து காத்து அருளுபவள் தீய சக்திகளை அழிக்க திருத்தேரில் ஏறி நயினையில் உலாவரும் நாள் இன்றைய நாள்.
இன்றைய நாளில் சோழககாற்றில் அசைந்தாடி பேரொலி எழுப்பி எழுவதும் வீழ்வதுமாக இருந்த எழாத்து பிரிவு அலைகள் கூட இன்று ஏகமனதாக சமாதானம் செய்து அமைதியாகி யாழிலும் அயல் தீவுகளிலும் இருந்து அம்பாளை வணங்கவரும் அடியவர்கள் படகுகளுக்கு அமைதியான கடல் அன்னையையாக இருந்து ஆதரவு கொடுக்கும்.ஆம் இன்று அன்று கடலில் மூழ்கிய பர்வதவர்த்தினி கோவிலின் முத்து தேர் பவழத் தேர் செப்புதேர் ஆகிய தேர்களிலும் அம்பாள் கடல் வலம் வரும் நாள் அல்லவா, ஆம் இது ஜதிகம்.

வானில் காற்றில் அசைந்து சிறகசைத்து நூற்றுக்கணக்கான கருடப்பறவை அம்பாளின் திரு வீதி உலா வர,அகிலத்தை ஆளும் நாக ராஜ ராஜேஸ்வரி அழகிய திருக்கோலத்தில் எழுந்தருளி வெண் குதிரைகள் பூட்டிய தேரில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து நிற்கும் பல்லாயிரகணக்கான அடியவர்கள் அரோகரா ஒலி எழுப்ப திருவீதி உலா வர போகின்றாள்.வழமையில் கடந்த ஆண்டுகளில் வீதி உலா வரும் பொழுது கோவிலில் வடக்கு வீதியில் இன்றைய கல்யாண மண்டபம் இருக்கும் பகுதியில் சில நிமிடங்கள் தேர் செலுத்துபவர்கள் சில்லுக்கு போடும் கட்டைகளை மீறி கட்டுபாட்டை இழக்கும்.அதனால் தேர் சரியான இடத்துக்கு இருப்புக்கு வருமா என்று அடியவர்கள் உள்ளம் ஏக்கத்தில் இருக்கும்.இது அங்கு பாம்பு உருவில் இருக்கும் நாகேஸ்வரரும் , ஈஸ்வரியும் செய்யும் திருவிளையாடல்களில் ஒன்றாகும். கட்டை போடுபவர்கள் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதத்தில் கூட ஈடுபடுவார்கள்.ஆனால் அனைத்துக்கும் விடையாக சில நிமிடங்களில் தேர் சரியாக ஒரு அங்குலம் கூட விலகாமல் இருப்புக்கு வரும்.பாம்பு உருவில் இருக்கும் நாகேஸ்வரர் விடை பெற்று கடலில் நீந்தி புளியம் தீவு நாகதம்பிரான் ஆலயத்துக்கு செல்வார்.

நாகங்கள் மலர் கொண்டு வருவதையும் கருடன் வானில் வட்டம் இட்டு பறப்பதையும் கர்ண பரம்பரை கதைகள் மூலமும் சித்தர்கள் ஞானிகள் தெய்வ வாக்குகள் மூலமும் ,முன்னாள் கோப்பாய் குருக்கள்மார் செவிவழி செய்திகளிலும் நாக மணி புலவர் அராலி முத்துக்குமாரு புலவர், நயினை முத்து சாமியார், வேலணை தம்பு வாத்தியார் போன்ற புலவர்கள் அம்பாள் மீது பாடிய பாடல்கள் மூலமும் தான் கடந்த காலங்களில் அறிந்து இருந்தோம் ஆனால் இன்று வாழ்வியல் நிதர்சனமாக கண்டுகொண்டு இருக்கின்றோம். தாயவள் நாக பூசணி அம்பாளின் திருவிளையாடல்களையும் அற்புதங்களையும் கண்குளிர காணும் பெரும் பேற்றை இந்த பிறவியில் பெற்று இருக்கின்றோம்.

சத்தியே சிவமும் ஆகி அத்தனையும் அவளே ஆகி அகிலத்தை ஆளும் தாயின் பாதார விந்தங்களை பணித்து ,வணங்கி ,,பிறப்பதற்கும் பிறந்த ஊரின் பெருமையை உலகிற்கு அறிவியலோடு உரைப்பதற்கும் எம்மவர்க்கு நாவன்மையை கொடுத்த தாய் அன்னை நாகபூசணி, அதே மண்ணில் இறப்பதற்கும் ஒரு வரம் கொடுத்தால் இந்த மனித பிறவியில் எம்மவர்கள் பெற்ற பேறு, பெரும் பேறே, பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டோல் அன்னையே உன்னை மறவாத மழலையாய் நயினை மண்ணில் பிறக்கும் வரம் வேண்டும்.

தாமரை மலர்கள் தூவி
தாயவளை துயில் எழுப்பி
ஊரவர் உறவுகள் புடை சூழ
உமையவளை தேர் ஏற்றி
பாவலர் பாடி துதித்து வர
பாலகரும் தேர் வடம் பிடிக்க
போர் அறம் காக்கும் தேவி
பேரருள் வழங்கி வருகின்றாள், தாயே ஆகி வளர்த்தனை போற்றி.

நன்றியுடன், சிவமேனகை

Written by: