வரலாற்றுப்புகழும் தெய்வீகப்புகழும் கொண்ட நயினாதீவு

இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு சொந்தமான தீவுகளில் மிகவும் புராதானமானதும், வரலாற்றுச்சிறப்பும் கொண்டது நயினாதீவாகும். முக்கியமாக இந்த தீவின் வரலாறு நாகர்களுடன் தொடர்புடையதாக உள்ள காரணத்தினால் இங்கே எழுந்தருழியிருக்கும் சக்தி நயினை நாகபூஷணி என்ற சிறப்பு பெயரால் சிறப்பிக்கப்படுகின்றாள்.

வரலாற்றுச்சிறப்பு மிக்கதும், 64 சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகவும் விளங்கும் இந்த நயினை நகபூசணியின் தேர்த்திருவிழாவுக்கு இலங்கையின் வட பகுதி மக்கள் அனைவரும் இந்தத்தீவில் ஒன்றுகூடுவது வழக்கமாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மண்டதீவு, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கு பாலம் உள்ள காரணத்தினால், அவற்றினூடாக வந்து குறிகட்டுவான் என்ற ஏறு துறையில் இருந்து நயினா தீவுக்கு தோணிகளில் பயணிக்கவேண்டும். கடல்வழிப்பயணத்தின் ஊடாக சென்று நாகபூசணியினை தரிசிப்பது உள்ளத்தில் பெரும் ஞானப்பெருக்கை உண்டாக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

வரலாறு.

நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டன வென்று கருதப்படுகிறது. திரு.குல.சபாநாதன் அவர்கள் 1957 இல் தாம் எழுதிய ‘நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் தேர்த் திருப்பணிச் சபை மலரில்’ (பக்கம் -16) “இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப் படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன. நாகதீப, மணிபல்லவம்| ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக “நயினாதீவு”டன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாகதீவு (நகதிவ) எனும் பெயர் “யாழ்ப்பாணக் குடாநாடு” முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரப் பொற்சாசனம் (Vallipuram Gold Plate Inscription) விளங்குகின்றது. ஆகவே, நாகதீப அல்லது நாகதீபம் என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும். ஆயினும், நாகதிவயின| என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘நம்பொத்த| என்ற சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது ‘நயினார்தீவு’ அல்லது ‘நாகநயினார்தீவு’ அல்லது நாகதீவு| என்ற தமிழ்ப் பெயரின் சிங்கள வடிவமே.

பதினைந்தாம் நூற்றாண்டில், நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர் நாகதீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு - இவற்றில் எதுவாகவும் இருந்திருக்கலாம் என்பதே ‘நம்பொத்த’ மூலம் நமக்குத் தெரியவருகின்றது. ஆயினும் மகாவம்சத்தில் ‘புத்தர் நாகதீபத்திற்கு வந்தார்’ என்று சொல்லப்பட்ட கட்டுக் கதையில் சுட்டப்பட்ட ‘நாகதீபம்’
என்பது அக்காலச் சிங்களவர்களுக்கு அதிக பரிச்சயமற்றதாக வட இலங்கையில் அமைந்து இருந்த நாகர் இராச்சியத்தைக் குறிப்பிடுவதாகவே கொள்ளப்படவேண்டும்.

மணிபல்லவம்| என்ற பெயரும் நாகதீபம் என்ற பெயரைப் போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக வழங்கப்பட்டது என்பது நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் ஊ. இராசநாயகம் ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும். டொக்டர் போல் பீரிஸ், டாக்டர் பரணவிதான போன்ற சிங்கள தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளனர். இதனை திரு. குல. சபாநாதன் மேற்குறித்த
அவரது நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்:

இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர் இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்: “நாகதீவு, நயினாதீவு எனப் பெயர் மாறியது நயினாபட்டர்
என்னும் பிராமணர் ஒருவர் அங்கு குடியேறிக் கிலமாய்க் கிடந்த நாகதம்பிரான் கோயிலைப் புதுக்கியபின் என்ப.
ஆயின், “நாகநயினார் தீவு” என வையாபாடலில் வருகின்றது. நாகதம்பிரான், நாகநயினார் எனவும் அழைக்கப்பட்ட-
தேயோ?”(யாழ்ப்பாண வைபவ விமரிசனம் : பக்கம் -21)

திரு. குல.சபாநாதன் அவர்களும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்குறித்த கருத்தை வழிமொழியும் வகையில் தனது நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்:

“நாகர் தாம் வழிபட்ட நாகத்தை, நாகநயினார், நாகதம்பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம்
கோவில் கொண்டெழுந்தருளிய தலம் நாகநயினார்தீவு, நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.”
(தேர்த் திருப்பணிச் சபை மலர் : பக்கம் -23) “நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக
இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில் இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறீ நாகபூசணி அம்மன் கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக தகவல்களைக் காணலாம்.

நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று, சரித்திர காலத்துக்கு முன்னர் - அதாவது விசயன் வரவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் - நாகர்களது ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள் கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ். குடாநாட்டில்) இருந்தோ அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில் குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது சந்தேகமறப் புலப்படுகின்றது.

இன்றைய நிலை

இலங்கையின் இனப்பிரச்சினைகாரணமாக தமிழர் வாழ் நிலங்கள் சுவிகரிக்கப்பட்டதற்கும், அவர்களின் பாரம்பரிய காலாச்சாரங்கள் ஒடுக்கப்படும் நிகழ்வுகளுக்கும் நயினாதீவும் விதிவிலக்காகிவிடவில்லை. 1991 ஆம் ஆண்டில் இருந்து 1996 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து எவரும் இந்த நயினாதீவுக்கோ அல்லது நாகபூஷணி அம்மனை தரிசிக்கவோ முடியாத நிலையில் இருந்தனர். அதன் பின்னரும்கூட கமையான கெடுபிடிகள், படையினர், கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகள் அலைக்கழிப்புகள் என பல்வேறு காரங்களாலும் இங்குவரும் மக்களின் தொகை குறைந்தகொண்டே சென்றது.

இங்கு கடல்வழிப்பாதையில் சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினிப்படகில் பயணித்துக்கொண்டிருந்த மக்கள் 1984 களில் சிறி லங்கா கடற்படையினால் வெட்டி கோரக்கொலை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.

இத்தனைக்கும் மத்தியில் இந்த தீவை இங்குவாழும் மக்களும் இங்கிருந்து புலம்பெயர்ந்து உலகநாடுகளில் வாழும் மக்களும் கைவிட்டுவிடவில்லை. முக்கியமாக இந்தக்கோவிலின் அபிவிருத்திக்கும், இங்கு தினந்தோறும் இடம்பெற்வரும், அமுதசுரபி என்ற அன்னதானத்திற்கும் , இந்த தீவின் அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் ஊக்கத்துடன் உழைத்தும்வருகின்றனர்.

எந்த வித கெடுபிடிகளும் இல்லாமல் , சுந்திரமான நடமாட்டத்துடன் இந்த தீவுக்கு தமிழர்கள் சென்று வழிபட்டுவர அங்குள்ள நாகபூஷணிதான் இனியாவது வழிவகுக்கவேண்டும்.