ஸ்ரீ பிடாரி அம்பாளுக்கு திருக்குளிர்த்தி நாளை

யாழ் குடாநாட்டில் அருள்மிகு தெய்வீகத் தீவாகத் திகழ்கிறது நயினாதீவாகும். இத் திவீன் தெய்வீகத் சிறப்பு தொன்மையானது. சர்வமத வழிபாட்டிற்கும் இச் சிறு தீவு வழி வகுத்து நிற்கின்றது. இங்கு உள்ள இந்து ஆலயங்களில் தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயம் பய பக்தி நிறைந்த ஆலயமாக மிளிர்கின்றது. யாழ் குடாநாட்டில் வேள்விக் கோயில்களில் இக் கோவிலும் அடங்கும்.

இக் கோவிலின் வருடாந்த வேள்விக்கான கும்பஸ்தானம் கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்தும் ஒன்பது நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வியுடன் நிறைவேய்தும். இவ் ஆலயம் நயினாதீவின் தென்மேற்கு ஓரமான கத்தியாக்குடா கடற்கரை வெளியம் தில்லை வெளியில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ பிடாரி அம்பாள் விக்கிரம் கடல் அலையால் அழைத்து வரப்பட்டு கரை ஒதுங்கிய இடத்திற்கு அண்மையில் தான் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஆதி காலத்தில் இங்கு வேள்வியின் போது ஆட்டுக்கடா வெட்டியும், கோழிகள் வெட்டியும் வேள்வி விழா கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது. அக் காலத்தில் அன்று வாழ்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மிருகபலியினை தடுத்தனர்.அதன் பின் இவ் ஆலயத்தில் வேள்வி என்ற பெயரில் நடைபெற்ற மிருக பலி தடுக்கப்பட்டது.

நேர்த்திக்காக கொடுக்கப்படுகின்ற ஆட்டுக்கடா, கோழிகள் என்பன உயிருடன் கோரல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது. ஊரே ஒன்று கூடி பொங்கல் பொங்கி பலகார வகைகள், பழவகைகள் படைத்து அருளினால் அள்ளுண்டு அரோகரா என்ற ஒலியுடன் பறையொலி முழங்க வழிபடுகின்ற வழிபாட்டு முறை பண்டைய வரலாற்றை நினைவூட்டி பக்திப் பரவச நிலைக்கு அடியவர்களை ஆற்றுப்படுத்துகின்றது.

“தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது
ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்”
என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நயினை தில்லைவெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் மிருகபலியற்ற வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா நடைபெறுகிறது.

அன்போடு பொங்கலிட்டு அன்னையின் அருள் பெறுவோமாக.
(நாளை சனிக்கிழமை இவ் ஆலயத்தில் திருக்குளிர்த்தி இடம்பெறும்.)

நயினை நாக.கோபாலகிருஷ்ணன், தலைவர்
சப்த தீவக தீவ்ய ஜீவனசங்க சமாசம்