அறிவும், பண்பும், அருளும், உருவாம் அண்ணல்

1. அருள் சுரந்து அம்பிகைதான் உறையும் மூதூர்
   அதனில்வரு சண்முகனார் நாகநாதர்
திருவனைய மீனாட்சிப் பிள்ளை கூடிச்
   செய்திடுமில் லறப்பயனாய் இளையநாச்சி
அருமகளாய்த் தோன்றியபின் நயினை செய்த
   அரியதவப் பயனெல்லாம் திரண்டொன்றாகி
ஒருமகவாய் வந்ததெனக் கந்தையாவாம்
   ஓங்கு புகழ்ப் பெரியாரும் உதித்தாரன்றே.

2. அழகில் முருகற்கிணையாய் இலங்கும் நல்லோன்
   அருங்கலைகள் கற்றுணர்ந்தா சிரியனாகி
இலங்கு தில்லையம்பலவித் தியாசாலையில்
   இணையில்போ தனைபுரிந்த ஏற்றங் கண்டு
பலரும்மகிழ்ந் தேபெரிய வாத்தி யாராய்ப்
   பார் புகழும் திருநாமம் சூட்டி நின்றார்
அலசிடவொண் ணாதவன்றான் ஆற்று சேவை
   அதன்பெருமை கூறிடவார்த் தைதான் உண்டோ

3. வீரபத்திரர் கோவில் விமானம் ஆதி
   விரும்பு முறை மையிற்கட்டி முடித்த மேலோன்
சீரமையும் வகைமுருகன் கோவில் தன்னில்
   திருப்பணியும் கற்றளியாய் ஆக்கி வைத்தோன்
ஊரவர்கள் கடனுதவி பெறவே சங்கம்
   உருவாக்கி னோன் தீவுப் பகுதி யெல்லாம்
சேர மோட்டார்ப் படகுச் சேவை யென்னச்
   செய்த சமூகப் பணிகள் செப்பப்போமோ

4. சீரோங்கு தாமோதரம்பிள் ளைப்பேர்ச்
   செல்வர்துணை நாகமுத்து செயுந்த வத்தால்
நேரோங்கு தலைமகளாய் உதித்த செல்வி
   நிறைபண்பார் புவனேசு வரியென் றேத்தும்
ஏரோங்கு திருமகளை மாலை சூட்டி
   எழிலாரில் லறவாழ்க்கைத் துணையாய்க் கொண்டே
பாரோங்க வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிப்
   பண்புக்கோர் உறைவிடமாய் மிளிர்ந்த சீலன்.

5. தலைமகளாய்க் கேதார கெளரி என்னும்
   சாந்தம்நிறை அழகுபோலி செல்வி தங்கச்
சிலை வனப்பு ராசராஜேஸ் வரியும் மிகச்
   சீலனாய்ப் பொலி நாகேஸ் வரனும் திங்கட்
கலை திரண்ட தனைய சிவராச சூரியர்
   கருது பண்பார் பிறைசூடி என்னும் ஐவர்
விளையில்மா ணிக்கங்கள் ஆகத் தோன்றி
   விளைத்திட்ட இன்பத்தில் மிதந்த தாதை.

6. போற்று மருத் துவத்துறைசேர் இராசரத்தினம்
   பொருந்திடுமத் துறைபுகழ் சேர் பரராசசிங்கம்
ஆற்றல் மிகும் ஆசிரியை சியாமளாவும்
   அருங்குணங்கள் நிறைவசந்த ராணி யோடு
சாற்று மாசிரியையாய்ப் புகழே பூண்ட
   சரோஜாவும் மருகராய் வந்து வாய்ப்ப
   ஏற்றமிகும் அவர் அன்பில் திளைத்தே வாழ்வை
இன்ப மய மாக்கி நின்ற இனிய மாமா.

7. பேர்த்தியராய் முதலில்வந் துதித்தே இன்பம்
   பெருக்கு கிரு பாலினி மஞ்சுளாவி னோடு
வார்த்தையினில் வடிக்கவொனா இன்ப மூட்டும்
   வரதப்பிரி யாவுடனே வளரு மன்பிற்
கீர்த்திமிகு லதாசங்கீ தாவும் தூர
   தேசம் போற் றும்தனுஜா அம்பிகாவும்
சேர்ந்திடு நல்லின்பத்திற் சிலிர்த்து நின்றே
   தெய்வீக நெறியுணர்த்தி வாழ்ந்த தாத்தா.

8. குணக் குன்றாய் விளங்கு கும ரேசனோடு
   குலவு பண்பார் பரந்தாமன் பெண்வயிற்றில்
இணக்கமுறு பேரராய் வந்தார் அன்பின்
   எழில் கொஞ்ச மகனார்தந் திட்ட பேரர்
அணைத்தின்ப மூட்டு பார்த் திபன்தி லீபன்
   அன்புடனே ஆதரவு தந்து தாங்கத்
துணைக் கவரைப் பெற்றபெரு மிதத்திற் சொர்க்க
   சுகங்கண்டு சுகித்து மகிழ்ந் திருந்த தாத்தா.

9. முத்துக்கு மாரசுவா மியாரென் றேத்தும்
   முனிவரன்தன் அருட் பார்வை பெற்று நின்றோன்
சித்தமெலாம் சிவவுணர்வு தேங்க அன்புச்
   சேவையவர் திருவடிக்கே செய்து வாழ்ந்தோன்
அத்தன்வந் தன்போடு தங்கி ஆசி
   அருளு சிவ லிங்கபுளி யடியிற் காணி
மெத்த மகிழ் வொடு பெற்றே இல்லம் ஆக்கி
   விளங்கிடுமில் லறஞானி யாகி வாழ்ந்தோன்.

10. வண்ணை சிவ தொண்டன்நிலை யத்தைச் சார்ந்து
   வரு யோக சுவாமிகளின் ஈடு பாடும்
திண்ணமுற உள்ளத்தை நிரப்ப வாழ்ந்தோன்
   சிவ உணர்வைத் தனைச் சேர்ந்தார்க் கருளிநின்றோன்
எண்ணுமெண் பத்தேழாம் வயதில் வந்த
   இறையாணை உள்ளுணர்வால் உணர்ந்தே சுற்றம்
அண்ணல் சிவ நாமம் உச்சரிக்கக் கூறி
   அவ்வொலியிற் சிவன்மலர்த்தாள் அணைந்திட்டாரே

தேற்றம்
சாறு பிழிந்து சர்க்கரை எடுத்தால்
   சக்கை பின்னர்ப் பேணுவரோ
பேறிவ் வுடம்பா லடைவ தெலாம்
   பெற்றே வாழ்ந்த பின்புடலை
வேறு படுத்திச் சிவநாம
   ஒலியிற் கலந்தார் கண்டுநின்றீர்
தேறும் சிவனார் திருவடிக் கீழ்ச்
   சித் பேரின்பில் திளைக்குவரே

மீளா அடிமை மாணவன்
வித்துவான் சி.குமாரசாமி