ஒப்பேதும் இல்லாது சுற்றம் பேணி உவந்துபணி செய்தஇவன் ஒருவன்தானே

ஆறுமைல் சுற்றளவு நயினைநாடு
   அதனுள்ளே அருட்சக்தி பீடம்நாடு
பேறுடைய பீடுடையோர் பிறந்தநாடு
   பெறுமவற்றுள் அறிவறிந்தோர் பேணும்நாடு
சீருடைய செழுஞ்செந்நாப் புலவர்நாடு
   தித்திக்கத் திருமுறைகள் இசைப்போர்நாடு
பாருலகில் பரப்பளவில் சிறுத்தநாடு
   பலதலங்கள் பெற்றுவளம் பெருத்தநாடு

தொன்மையுள குடிப்பெருக்கில் இந்தநாட்டில்
   தொடர்ந்திட்ட "பட்டர்"மர பதனில்தோன்றி
பன்மை நலம் பரந்தோங்கப் பண்டுதொட்டு(ப்)
   பக்திநெறி பரந்தெழுந்து பரவச்செய்து
எண்ணமெலாம் இரவுபகல் தெய்வத் தொண்டில்
   இருத்தியறம் பொருந்திநலம் கண்டமேலோன்
வண்ணமுளான் உயர்ராமச் சந்திரன்தன்
   வகையொப்பான் சிவப்பிரகாச விதானையன்றோ

அம்பாளைப் பரம்பரையாய்ப் பேணிக்காத்து
   அர்ச்சித்து அடிதொழுது அவள் தன்பாதம்
தம்வாழ்வில் தலைவைத்துத் தொழும்பாய்த்தொண்டு
   தாங்கியவன், கிராமத்தின் தலைமைக்காரன்
செம்மாந்து சபைநடுவே திகழ்ந்துஊரில்
   செய்கிரியை சரியைகளில் சிறந்தவீரன்
அம்மாநீ சிவப்பிரகா சத்தை உன்பான்
   அணைத்தவிதம் அன்பனுக்கே அளித்தபேறே

திருநீறு அகலாத செழுமைநெற்றி
   திகழ்ந்தொளிரு சந்தனத்தின் திருந்துபொட்டு
உருஏறு போன்றதொரு உயர்ந்த தோற்றம்
   உத்தரியம் கலையாத உடுப்புநித்தம்
திருவேறும் தோத்திரங்கள் செப்புஞ் செந்நா
   செய்கருமம் சிறப்பாகச் செய்யும்செங்கை
பெருவீறு கொண்டெவரைப் பகைத்தபோதும்
   பின்னவரை நட்பாக்கி வாழ்ந்து நின்றோன்

அன்னையவள் பெயராலே தாகசாந்தி
   அம்பாளின் சந்நிதியில் அடியார்க்காக்கி(த்)
தன்னையுமோர் வன்தொண்டன் ஆக்கிக்கொண்டு
   தான் செய்த பணிகளுக்குத் தடையாய் நின்ற
அன்னவரை வழக்காடி மன்றில்வேன்று
   ஆணைகளைத் துகளாக்கி ஆட்சிகொண்டு
சொன்னபடி செயல்வீரம் காட்டி நின்றோன்
   துணிவோன்றே துணையாகக் கொண்டவீரன்

நிலமடந்தைக் காளாகி நின்றதாலே
   நித்தியமும் அவள்ஆசைக் கடிமையானான்
அலமலந்தான் அதனாலே, ஆனால் தோம்பு
   அவன்பக்கம் அசையாது நிற்றல்கண்டோம்
பலமடைந்த உறுதிகளால் நீதிமன்றம்
   பலமுறையும் அவன்பக்கம் தீர்ப்புச்சொல்லக்
கிலமடைந்தார் எதிரிகளும் விதானையாரின்
   கெட்டித்தனம் இதனாலே வெளிப்பாடாச்சு

பதவிதனில் தகுதிகளைக் கண்டஆட்சி
   பலமுறையும் பரிசளித்துப் பதக்கம் சூட்டி
உதவிகளும் உயர்ந்தபல மதிப்பும் செய்து
   ஊக்குவித்தார், இங்குசிலர் உணராராகி
அவதியுடன் "கொடும்பாவி"கட்டி அன்னார்
   அரியசெயல் அவமதிக்க முயன்றுகாடு
பறதியுடன் சென்றிட்டுச் சுட்டார் "பொன்போல்
   பளபளத்துப் "பிரகாசம்" பரவக்கண்டோம்

சபைநடுவே நீட்டோலை வாங்கிப்பெற்று
   சளைக்காது தான்பிடித்த கருமம் ஆற்றி
அவைளெகலாம் தான்புகுந்து அறிந்தோர்போல
   அகமகிழ்ந்து பெரியோரை அனைத்துக்கட்டி
எவை எவையும் அவரவர்க்கு உவப்பாய்ச் சொல்லி
   இதம்பேசி வசமாக்கும் இயல்பில் மிக்கோன்
வகையறிந்து வருமுன்னே காத்துவெற்றி
   வாய்ப்புறவே வழிசமைக்கும் வலுவில்வல்லோன்

பப்பரவன் சல்லியினில் பதித்தபாதம்
   பலமுறையும் பலரிழுத்து அசைத்துப் பார்த்தார்
ஒப்புரவு கண்ணோட்டம் எல்லாம் சொல்லி
   உயர்ந்தபல பெரியோரும் உணர்த்தி நின்றார்
துப்பரவாய் அதைவிட்டுப் போகமாட்டேன்
   தோம்புண்டு துணையென்று துணிந்து நின்றான்
அப்புறமாய் அம்பாளுக்காக வென்று
   அகன்றிட்டான் அகலாதான் அன்னை தொண்டன்

முப்போதும் விநாயகனை தொழுது போற்றி
   முன்னவனை முழுத்துணையாய் ஆக்கிக்கொண்டு
எப்போதும் இல்லறத்தில் இருந்து ஓம்பி
   இயல்புடைய மனைமாட்சி எய்தப்பெற்றுத்
தப்பாது நன்மக்கள் தம்மைஈன்று
   தகைசான்ற சான்றாண்மை விழங்க நின்று
ஒப்போதும் இல்லாது சுற்றம் பேணி
   உவந்துபணி செய்தஇவன் ஒருவன்தானே

சகோதரன் நா. க. சண்முகநாதபிள்ளை