சற்குருவை வாழ்த்துவோம்

தமிழீழத்தின் தண்ணொளி முகத்தில்
   மூக்குத்தியென மின்னும் நயினையில்
முத்தாய் விளைந்தவர் வித்துவான் குமாரர்
   கத்தும் கடல் சூழ் இச் சிறுதீவில்
கலைவளம் பிறநலம் அருள் நலம் எல்லாம்
   கடல் அலைபோலக் கதித்துப் பொங்கும்
அத்தனை நலனும் ஆக்கமாய் விளங்கும்
   அணி மணி பல்லவ கலை வளர் மன்றம்
இத்தகு நயினையில் எழுந்துயர் வெய்த
   வித்தைச் சத்தாய் விளைவாய் நின்று
வீரியம் தந்தவர் வித்தகர் சீக் கூ (சி. கு)
   கூரிய அறிவும் நேரிய நெறியும்
சீரிய வாழ்வும் செம்மனச் செழுமையும்
   சிறப்பாய்க் கொண்டவர் வித்துவான் அவர்கள்
"மேகலை" அரங்கு ஓங்கி நிமிரவும்
   மேளமும் தாளமும் பாட்டும் கூத்தும்
பேரறிஞர் தம் பேருரை பலவும்
   ஊரறி கவிஞர் சீருறு அரங்கும்
பட்டி மன்றமும் இப்படி எவ்வளவோ
   மட்டிலாதன மார வைத்தார்
அன்னை நாகம்மை அருட் சுடர் போல
   அறிவுச் சுடரைக் கொழுத்திய சான்றோன்
வாழையடி வாழையாய் வந்த மரபினை
   நாளை உலகிற்கு இட்டுச் சென்றவர்
வேளை தவறாது ஓடி ஓடி
   வேதனை பிறர்க்கு விலகச் செய்தவர்
செல்வக் காலை இருப்பினும் இவரோ
   அல்லற் காலை இருக்கா மனத்தவர்
மைதோய் வண்ணமும் மாசிலா முகமும்
   கைதோய் கொடையும் கன்னல் தமிழைப்
பொய்வாய் மொழியும் பெற்றார் உற்றார்
   உய்வோர் ஊரார்க் குத்தவும் உளமும்
ஐயோ இவரின் ஆளுமை தன்னை
   எவ்வாறிங்கே இயம்ப முடியும்
அவ்வாறறிவார் அறிவார் அறிதல் தகுமே.

நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம்