திருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!”

குறுந்தொகை (167)
பாடியவர்: கூடலூர் கிழார்

திருமணம் முடிந்துவிட்டது.
தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.
நன்கு உறைந்த தயிர்.
காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களால்
அதை நன்றாகப் பிசைகிறாள் அவள்.
அடுப்பில் ஏதோ சத்தம் கேட்கிறது.
தயிர் பிசைந்த விரல்களைச் சட்டென்று
தன் ஆடையிலேயே துடைத்துக்கொண்டு ஓடுகிறாள்.
சமையலைக் கவனிக்கிறாள்.
சிறிது நேரத்தில்,
குவளை மலரைப் போன்ற அவளுடைய
கண்கள் முழுக்கப் புகை படர்ந்து நிறைகிறது.
அதைப் பற்றிக் கவலைப்படாமல்
தொடர்ந்து சமைக்கிறாள்.
இப்படித் தன் கையால் துழாவிச் சமைத்த
புளிக்குழம்பை அவள் தன்னுடைய கணவனுக்கு
ஆசையோடு பரிமாறுகிறாள்.
அவனும் அதனை ‘அருமையா இருக்கு’ என்று சொல்லிச் சாப்பிடுகிறான்.
அப்போது அவளைப் பார்க்கவேண்டுமே,
ஒளிமிகுந்த நெற்றியும் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்!
Written by: