தேவி நீ இரங்குவாயோ !

நாற்புரமும் கடலுடுத்த நயினை தன்னில்
   நாகமொடு பரமர்தனை அணைத்து இங்கு
தாகமொடு வருபவர் துயரம் தீக்கும் சக்தி
   தாழினையே தொழுதிடுவோம் நாளும்நாமே

நாடிவரும் நாயகியுன் பக்தர் தாமும்
   தேடிவந்துன் பாதமலர் தொழுது நின்று
நேயமுடன் இரந்துரைக்கும் குறைகள் யாவும்
   தீயெனவே போயகல வைப்பாய் தாயே!

தாயே உன் சேய்கள் நாம் தரணிவாழ
   வுhய்விட்டு கதறி அழ குறைகள் தீர்க்கும்
ரஞ்சனியே அச்சம் இனி இல்லை எம்முன்
   தஞ்சம் இனி நாமே உந்தன் வாழ்வில்

நாடோறும் சக்தி உந்தன் பக்தர்கள் நாம்
   ஈடேற வழிவேண்டி நின்று இங்கு
பா பாடி பண்ணிசைத்து ஏத்த நாளும்
   பாரினிலே அடியவர் தம்இன்னல்தீரும்

இன்னலுடன் வந்தேகும் அடியார் துன்பம்
   கன்னலுடன் அமுதமென் கரந்து போகும்
விண்ணுறையும் மந்திரங்கள் யாவும் தீர்க்கும்
   மண்ணுலகில் வரும் துன்பம் மறைந்து போகும்

போற்றி என்று அனுதினமும் புகழ்ந்த ஏத்த
   தோற்றலுகத் துயரனைத்தும் நிறைவு காண
சொன்ன அன்னபூரணியே துலங்க மண்ணில்
   இன்னுமிங்கு குறைதீர இரங்குதாயே!

தாரணியே தரணியில் வாழவழி காட்டும் நாயகியே
   நாரணியே நல்கும் சக்தி ஆரணியே
காரணியே கன்னிகையே மணியே – எங்கள்
   ஆரணியே நயினை மண்ணில் உறையும் தாயே.

தாய்க்குமரிய தயாபரி உன் தாளிணையில்
   சேய்க்கும் இடமுண்டோ சொல்லுமம்மா
பார்க்குமிடமெங்கும் பரந்து வாழும் அடியார் உன்
   பாதமலர் தஞ்சமென சரண் புகுவார்.

பரந்தரியே போற்றுவார் துயர் பெறாதவள் நீயே
   நாரணன் சோதரியே நாவுறையும் நர்த்தனியே
காரணி நீ காவாழும் பரிபூரணி நீ
   ஆரணியே ஆனந்தமாய் முத்தி நீயே

ஏற்றுகின்ற மக்களது இடர்கள் நீங்கி – எனை
   போற்றுகின்ற மக்களெல்லாம் ஒன்றாய் இன்று
ஏற்றுகின்ற தீபமதில் ஒளியாய் நின்று
   சாற்றிடுவாய் மக்களது குறைகள் யாவும்

ஆக்கம் : க.பிரணதார்த்திகரன் நயினாதீவு -5
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்