நயினைக் கீதம்

வாழிய நயினை நாகபூஷணியின்
   மணிபல்லவத் திருநாடே!
வளர்ந்திடும் தமிழ்க்கலை கொண்டே!
   விளைந்திடும் பயிர் வளம் கண்டே!
ஈழத்தின் வடபால் ஏழு பெருந்தீவில்
   ஆன்னையின் நாடு – வாழிய நயினை

இந்து சமுத்திரம் இயலிசை பாடிட
   வந்து வணங்கிடும் அடியார்
வந்தவர் குறைதனை வளமுடன் நீக்கிடும்
   வரந்தரு சக்தியின் கூடு – வாழிய நயினை

அருளொளி அன்னையின் அமுதசுரபியும்
   அழகிய கோமுகிப் பொய்கை
கடல்வளம் நிலவளம் கலைவளம் நிறைந்து நல்
   களிப்புறு மக்களம் கண்டு
கலைபயில முப்பெரும் கூடம்!
   இந்திரன் தந்த பொற்பீடம்!
கவிஞர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் இசைஞரகள்
   கலந்து நல் புகழ்தரும் நாடு – வாழிய நயினை

இந்து பௌத்தர் இஸ்லாமிய கிறிஸ்தவர்
   இணைந்திட வணங்குவர் இங்கு
தோண்டர்கள் வேதியர் தூயநல ஞானியர்
   வந்தருள் பெற்ற நன்னாடு!
இது ஒரு மணித்திரு நாடு – மணி
   மேகலைத் தாயினள் நாடு
மானிலமெங்கும் மகிழ்ந்து புகழுமெங்கள்
   நயினை தாய்த்திருநாடே! – வாழிய நயினை

ஆக்கம் : க.ந.ஜெயசிவதாசன்
எழுத்துருவாக்கம் : நயினை.கொம்