நயினை நாகம்மை திருக்குட முழுக்காடற்பத்து

முன்னைமுதல் நாகர்தொழ மூர்த்தமாய் மூலத்துள்
   முகிழ்த்தெழுந்து முப்போதும் கருணை செய்த
அன்னையென அனுதினமும் அடியார் போற்றி
   அகத்துள்ளே அருளுருவம் கண்டு நாளும்
பின்னைவரு சந்ததியும் பேறு பெற்றுப்
   பெரிதுவந்து அடிபணிந்து தொடர வைத்த
இன்னமுதே நயினையுறை நாகம் மாளே
   இன்பமுறக் குடமுழுக்கு ஆடீர் அம்மா.

அறுபத்து நான்குண்டாம் சக்தி பீடம்
   அவற்றுள்ளே புவனேசு வரிக்காய் அன்று
நிறுவித்த இந்திரனுக் கிரங்கி நயினை
   நிலைக்கின்ற பீடத்தில் அமர்ந்த தாயே
திருவுற்ற உன்னுருவத் தேசும் தெவிட்டாத்
   தெய்வத்தாய் நின் அரவணைப்பும் தெளிந்து பக்தி
பெருகிற்று நயினையுறை நாகம் மாளே
   பேறுதரக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

ஆவினது மகனுக்கு 'அட்சம் தந்து
   அடுத்து வந்த மேகலைக்குச் 'சுரபி' தந்து
மேவிவரு அடியவர்க்கு அமுதம் தந்து
   மேன்மேலும் பெருங்கருணை அள்ளித் தந்து
தேடிவரும் தொண்டர்குறை தீர்த்து ஆன்ம(ச்)
   சித்தியுடன் முத்திபெற வைத்து இன்பம்
கோடிதரும் நயினையுறை நாகம் மாளே
   குண்டலியே குடமுழுக்கு ஆடீர் அம்மா

அலைபாயும் ஆழ்கடலில் அடியார் கூட்டம்
   ஆர்ப்பரித்துக் கரையேறி அருளே சேர்க்க(த்)
தலைவாயில் கோபுரத்தின் முன்னே கூடித்
   தம்வசத்தை இழந்து நின்று தாயே என்று
நிலையாய உன்னுருவம் நினைத்து உள்ளம்
   நெக்குருக நின்றுருகும் தெய்வக் காட்சி
கலையாது நயினையுறை நாகம்மாளே
   கண்பனிப்பக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

ஐந்துதலை நாகங்கள் உன்னைச் சூழ
   அவைநஞ்சை அடக்கியுயர் நிழலாய் ஆக்கி
இந்துவளர் சடைமுடியான் இருந்த கயிலை
   இடப்பாகம் தான்தந்து காட்சி நல்க
அந்தமிலாப் பசிப்பிணியைத் தீர்க்கச் செய்யும்
   அற்புதத்தை நினைந்தடியார் வாழ்த்தி ஏத்த
சந்ததமும் நயினையுறை நாகம் மாளே
   சாந்திபெறக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

விண்ணின்ற பெருங்கருணை ஒளியாய் ஓங்கி
   விரவிவரு காற்றூடு ஒலியாய் வந்து
பண்ணொன்றத் தீயூடு பரவி நீரில்
   பக்குவமாய்(த்) திருக்குடத்தில் பாங்கு பெற்று
மண் ஒன்றில் மூலத்தில் கர்ப்பம் எய்த
   மந்திரமாய் இயந்திரமாய் மகிமை சேர்த்துக்
கண்ணொன்றும் நயினையுறை நாகம் மாளே
   களிகூரக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

பரந்தெழுந்த பலசமயப் பற்றும் உந்தன்
   பாசமணி பல்லவத்தில் பற்றி நின்று
சுரந்துவரு உன்கருணை வெள்ளத் துள்ளே
   சுகமுழுக்கு ஆடிடவே நின்றார் தாயே
சிரந்தழுவிப் பதம் சூடித் திக்கு எட்டும்
   தித்திக்கும் அருளமுதம் பருக நிற்போர்
அரந்தைகெட நயினையுறை நாகம் மாளே
   ஆனந்தக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

தலமாண்டு சக்தியினைத் தேக்கி ஆண்டு
   தகவாண்டு தண்ணளியும் தவிசும் ஆண்டு
பலவாண்டு பக்தர்களின் பரிசும் ஆண்டு
   பாராண்டு பல்லுயிர்கள் பாலித் தாண்டு
குலமாண்டு சக்திமதச் சாக்தம் ஆண்டு
   கூடுமடி யார்கள்குறை போக்கி ஆண்டு
நலமாண்ட நயினையுறை நாகம் மாளே
   நவதீர்த்தக் குடமுழுக்கு ஆடீர் அம்மா

உந்தனது சேய்களெலாம் உன்னை அன்றி
   உற்றதுனை பற்றுவரோ தாயே அம்மா
சிந்தனையின் சிறப்பன்றோ இந்த நாட்டில்
   செந்தமிழர் படுந்துயரம் அறிந்திலையோ
வந்தனைகள் உன்னடிக்கே ஆக்கி நின்றோம்.
   வரம்தந்து எமைகாத்து வாழவைக்கும்
பந்தமுடன் நயினையுறை நாகம் மாளே
   பார்வதியே குடமுழுக்கு ஆடீர் அம்மா

தம்பிரான்தன் அடிதொழுது நாகம் பூவைத்
   தன்வாயில் எடுத்தலைகள் தாண்டி உந்தன்
செம்பாதம் சூடவரக் கருடன் ஊடே
   சினமுற்ற செய்தியது கண்டு வணிகர்
நம்பகமாய் சமரசத்தை நாட்டி உருக்கன்
   நடுக்கடலில் நிலைநிறுத்தி நாகம் பூவால்
அம்பிகையே அர்ச்சிக்க வைத்தாய் உன்னை
   அப்பாம்பும் குடமுழுக்கு ஆட ஆடீர்.

மூத்தவரும் இளையவரும் ஆட ஆடீர்
   முழுத்தெய் வடிவங்கள் ஆட ஆடீர்
காத்துவரும் நவகோள்கள் ஆட ஆடீர்
   காவலுறு கணங்களெல்லாம் ஆட ஆடீர்
கூத்துடையான் சிவனாரும் ஆட ஆடீர்
   கோபுரத்தின் கலசங்கள் ஆட ஆடீர்
ஆத்தையரே நயினையுறை நாகம் மாளே
   அருட்குடத்தால் குடமுழுக்கு ஆடீர் அம்மா.

ஆக்கம் : Mr. Sunmuganathapillai BSc, SLEAS