மாட்டு பொங்கல்

வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம் என்றெல்லாம் கூப்பிடுவார்கள் கடைசிபிள்ளையாக பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூட செல்லத்தை பொழிவார்கள் என்ன மாதிரி இடையில பிறந்தால் சிறு சிறு குற்றங்கள்செய்யப்படும் போதெல்லாம் வைக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் மாடு. சில நேரங்களில் மிகவும் பாசமாக எருமைமாடு என்று அழைப்பார்கள் .சில இடங்களில் நடவடிக்கைகளும் அப்படி தான் இருக்கும் .மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது மாமா சித்தப்பா பெரியப்பா மச்சான் என்று எல்லோரும் சங்கிலி காப்பு மோதிரம் என்று கொண்டுவந்து போடுவார்கள் .இடுப்புக்கும் வெள்ளியில் அரைநாண் கயிறு போடுவார்கள் .நமக்கு மாட்டுக்கு கழுத்துக்கு கட்டுறமாதிரி ஒரு நூல்தான் கிடைக்கும் .இடுப்புக்கும் அதே நூல் தான் .

சரி வீட்டில தான் அப்பிடி என்று பாலர் பள்ளி கூடத்தில போய் சேருவம் என்றால் ,அங்க ரீச்சர் வா மாடு இரு மாடு எழும்பு மாடு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை மாடு போட்டு கூப்பிடுவா ,,சரி ஒரு வருஷம் தானே இவாட தொல்லை முடிஞ்சுது என்று மேல பெரிய பள்ளிகூடத்தில போய் சேர்ந்தால் இங்க ஒருத்தி அப்படி கூப்பிட்டா அங்க ஏழெட்டு பத்துபேர் எடுத்ததுகெல்லாம் மாடு தான் சில வேளை சந்தேகத்தில வால் கீல் கொம்பு கிம்பு நமக்கு முளைச்சு இருக்கா என்று கூட தடவி பார்க்கவும் வைக்கும் .

சரி வீட்டில வெளிநாட்டுக்கு அனுபிற கதை வந்திச்சு ,சரி அண்ணனதானே முதல் அனுப்புவினும் அவன் போய் உழைச்சு அனுப்ப நாம புது ஏசியா சைக்கில் வாங்கி கலர் கலரா சுடிதார் பார்த்து சுற்றி திரியலாம் என்று நினைச்சு மூச்சு விடவில்லை .அவன் பிள்ளை பெரியவன் நல்லா படிக்கின்றான் பொறுப்பாய் இருக்கின்றான் .இந்த மாடு தான் தின்னுட்டு தின்னுட்டு கொம்புக்கு மண் எடுத்துக்கொண்டு தெனாவட்டா ஊர் சுற்றி திரியுது இதை பிடிச்சு அனுப்புவம் என்றார் பெரியப்பா ,,,சொன்னதுதான் காணும் சித்தப்பன் மாமா மாமி பெரியம்மா என்று எல்லோரும் சேர்ந்து உடன ஆமோதிச்சு முடிவே பண்ணிடாங்கள்,,,,என்ர நிலைமை அப்படி மறுக்கவும் முடியாது எப்பவும் என்னை கட்டி இருகின்ற கயிறு அவையின்ர கையில தானே அந்த நேரம் இருந்தது அதனால நானும் மாடு மாதிரி தலையை மட்டும் கயிற்றை அவர்கள் இழுக்க ஆட்டினேன்,,,

வெளிநாட்டுக்கு வந்து மாடா உழைச்சு ஓடாய் தேஞ்சு ஒவ்வொருத்தராய் இலங்கையில நாட்டு பிரச்சனை சரியில்ல என்று 29 பேரை அடுத்தடுத்து கூப்பிட்டு ஒவ்வொரு நாடு நாடாய் அவர்கள் விருப்பம் போல அனுப்பி நல்லாக்கிவச்ச பிறகும் நேற்றைய பொங்கல் பாட்டிக்கு எல்லாரையும் கூப்பிட்டு நானே பாட்டி வச்சு கதைச்சு கொண்டு இருக்கேக்க நாளைக்கு பொங்கலுக்கு யாரை பிடிச்சு கட்டுறது ஊரிலை என்றால் பட்டி பட்டியா மாடு நிற்கும் பட்டு கட்டி பொட்டு வச்சு அழகு பார்க்க வடிவாக இருக்கும் என்றார் அம்மா ,,,,,
மாமாவும் பெரியப்பாவும் அப்பாவும் என்னை பார்த்தார்கள் .ஏன் அவர்களை சொல்கின்றேன் என் புது மனைவி கூட என்னையே பார்த்தாள் ,,,என்ன ,,,,இன்னும் தலையை குனிந்து கழுத்தை காட்டி கயிற்றை ஏற்பதா.

உண்மையில் உலகில் உள்ளவர்கள் அனைவரும் நல் வாழ்வு வாழ உழைத்து கொடுப்பது தான் மாடு என்ற உண்மையை முதல் முதலாக விளங்கிக்கொண்டேன்.
நன்றி.

என்னை போல் மாடா உழைச்சு ஓடாய் தேய்ந்த அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சிவமேனகை

Written by: