கல்வி, அறிவு, ஒழுக்கங்களிற் சிறந்த சான்றோரை உடமையினாலேயே இவ்வுலகம் நிலைத்து நிற்கின்றது என்று கூறுகின்றார் பழந் தமிழ்ப் புலவர் ஒருவர். எமது மணித்தீவின் பெருமைக்கு அம்பிகையின் அருட் செல்வமே முக்கிய காரணமெனினும் இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அறிஞர்களும் பெருமளவு காரணராவர். நயினாதீவின் கல்வி வளர்ச்சியை ஆராயப் புகின் பண்பாட்டடிப்படையிலமைந்த ஆழ்ந்த கல்வி முறை இங்கு நிலவி வந்தமையைக் காணலாம்.

குருகுல அடிப்படையிலேயே எமது தீவில் கல்வி வளர்ந்து வந்தது. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் சில அமைந்திருந்தன. அங்கு சென்று மாணவர்கள் இலக்கியம், இலக்கணம், புராண படனம் ஆதியன கற்று வந்தனர். நாகமணிப் புலவரின் பேரனார் வேலாயுதர் ஒரு பாடசாலை நடாத்தி வந்தார் எனத் தெரிகிறது. திண்ணைப் பள்ளிக்கூடங்களுள் காலத்தாற் பிற்பட்டது கந்தபண்டாரம் வேலுப்பிள்ளை அவர்கள் நடாத்தி வந்த பாடசாலை ஆகும். இன்றுள்ள நுனிப்புல் மேயும் கல்வி முறைக்கு மாறாக அன்று கல்வி பயின்றோர் ஆழ்ந்த அறிவு படைத்து விளங்கினர். அவர்கள் வளர்த்த பரம்பரையினரை இன்றும் நாம் காணமுடிகிறது. அக்காலத்தில் நயினாதீவிலிருந்து ஏனைய தீவகங்களுக்கும், இலங்கையின் பிற பாகங்களுக்கும் சென்று ஆசிரியர்களாகவும், உரையாசிரியர்களாகவும் பலர் தொண்டாற்றினார் எனத் தெரிகிறது. அவர்களது சேவை பற்றி யாம் விரிவாக அறிந்து கொள்ள முடியாதிருப்பது வருத்தத்திற்குரியதே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கல்வி வளர்ச்சிக்காகப் பாடசாலை நிறுவப்பட்ட பின்னருள்ள வரலாறே யாம் ஓரளவு தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்திலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவை யாவும் மத போதனையை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டனவே. கோல்புரூக் விசாரணைச் சபை அறிக்கையின் படி இலங்கையிலும் நாலு அரசினர் தமிழ் பாடசாலைகள் மாத்திரமே அமைந்திருந்ததாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதத்தினர் பல பாடசாலைகளையும், கல்லூரிகளையும் நிறுவினர். இவ்வாறு மிஷனரிமார் நிறுவிய பாடசாலைகளிற் சைவ மாணவர் சென்று கல்வி கற்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்தித்தே ஆறுமுக நாவலர் (1872 - 1879) யாழ்ப்பாணக் குடாநாட்டில் சைவப் பாடசாலைகள் கட்டப்படவேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். 1872 ஆம் ஆண்டு வண்ணார்பண்ணையில் நாவலர் ஆங்கிலப் பாடசாலை உருவாகியது. அவருடைய பிரச்சாரத்தினால் சமய அபிமானமுள்ளவர்கள் பலர் சைவப் பாடசாலைகளை இடங்கள் தோறும் நிறுவ முயன்றனர். தீவுப்பகுதிகளிலும் இவ்வுணர்ச்சி தலை தூக்கியது. அதன் பயனாய் நயினாதீவிலும் ஒரு சைவப் பாடசாலை பத்தொன்பதாம் நூற்றாண்டினிறுதியில் நிறுவப்பட்டது.

நயினாதீவில் முதன்முதலாக நிறுவப்பட்ட சைவப் பாடசாலையின் தாபகர் திரு வே. சின்னட்டியார் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இரண்டாவது மனைவி வயிற்றுதித்த மைந்தரே எமதூரில் வாழ்ந்து சமீபத்திற் காலஞ் சென்ற திரு வே. சி. நாகலிங்கம் அவர்கள். திரு சின்னட்டியார் இளம் வயதிலே தம்மை விட்டுப் பிரிந்த தமது அருமைக் குமாரன் தில்லையம்பலத்தின் ஞாபகார்த்தமாகத் தாமமைத்த பாடசாலைக்குத் தில்லையம்பல வித்தியாசாலை என நாமம் சூட்டினார். தில்லையம்பல வித்தியாசாலை திரு மு. செல்லப்பா அவர்கள் நன்கொடையாக அளித்த காணியிலேயே கட்டப்பட்டது. தில்லையம்பல வித்தியாசாலையின் முதலாவது தலைமை ஆசிரியராகக் கடமையாற்றியவர் புங்குடுதீவு சோமசுந்தர குருக்கள் ஆவார். அவர்களிடமே திரு முத்துக்குமாரு பரமலிங்கம் (அப்பாப்பிள்ளையார்) ஆதியோர் புராண படனப் பயிற்சி பெற்றனர்.
தனியார் முகாமையில் இயங்கி வந்த இவ்வித்தியாசாலையின் பரிபாலத்துக்காக வல்லிக்காட்டுத் தென்னந் தோட்ட வருமானம் ஒதுக்கப்பட்டிருந்தது. சின்னட்டியாருக்குப் பின் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது மூத்த மனைவியின் புதல்வர் பொன்னம்பலம் பாடசாலையை நிருவகித்தார். அவர் காலத்தில் பத்தைமேனிப் பொன்னுத்துரை யென்பவருக்கு ஈடு வைத்த வல்லிக்காட்டுக் காணி பின்னர் மீளவில்லை.

தனியார் முகாமையில் இயங்கி வந்த இப்பாடசாலையிற் கடமையாற்றிய ஆசிரியர்களுடைய பெயர்கள் இன்றும் நயினை வாழ் முதியோர் நினைவிற் பசுமையாக உள்ளன. அவர்களுள் ஒருவரான மசுக்குட்டி வாத்தியாரை நினைக்கும் போது பாடசாலைக்குச் செல்லாது காடுகளில் ஒளித்துத் திரிந்தோருக்கு அவர் வழங்கிய தண்டனைகளே நினைவுக்கு வருகின்றன. மேலே வளையிற் பிடித்துத் தொங்குமாறு விட்டுக் கீழே காவோலை போட்டுக் கொளுத்துவது போன்ற தண்டனைகளை அவரிடம் கல்வி பயின்றோர் விபரிக்கும் அழகே தனி.
வேலணை தம்பு வாத்தியார் நியம நிஷ்டைகளில் வழுவாத சைவ ஆசிரியர். இவர் இப்பாடசாலையிற் கடமையாற்றிய காலத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி போதிக்கப்பட்டது. தம்பு வாத்தியாரிடம் புராணபடனப் பயிற்சி பெற்றோர் பலர் இன்றும் புராணங்களுக்கு உரை சொல்லும் திறன் படைத்தோராக விளங்குகின்றனர்.
வித்துவ சிரோமணி கணேசையர் அவர்கள் தலைமையாசிரியராக அமர்ந்து கல்வி போதிக்கும் பேறும் அக்காலத்தில் நயினை மக்களுக்குக் கிட்டியது. அவர்கள் இங்கு கடமையாற்றியபோது இரகு வமிசத்திற்கும் உரைக் குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எழுதிய உரைக் குறிப்புக்கள் `சுதேச நாட்டியம்` என்னும் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தன. புலோலி விசாகர் வாத்தியாரே தனியார் பாடசாலையிற் கடமையாற்றிய கடைசித் தலைமை ஆசிரியர் ஆவர். 1926 ஆம் ஆண்டு முகாமையாளராக இருந்த திரு பொன்னம்பலம் தில்லையம்பல வித்தியாசாலையைச் சைவவித்தியா விருத்திச் சங்கத்திடம் கையளித்தார். இதன் பின்னர் நயினாதீவு திரு மு. நாகலிங்க வாத்தியார் தலைமையாசிரியராகக் கடமையாற்றினார். 1928 ஆம் ஆண்டு திரு ச. நா. கந்தையா அவர்கள் தலமையாசிரியர் ஆனார். அவ்வாண்டிலேயே தில்லையம்பல வித்தியாசாலைக்கு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.

நயினாதீவுக் கல்வி வளர்ச்சியில் உள்ளூரில் தொன்றுதொட்டு நிலவி வந்த பழக்கவழக்க மரபும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பாரதம். இராமாயணம் போன்ற காவியங்களையும், நளவெண்பா, அரிச்சந்திரபுராணம் போன்ற பிற இலக்கியங்களையும், கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சிவராத்திரிபுராணம் போன்ற புராணங்களையும், திருக்குறள், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களையும் மக்கள் வீடுகளில் இரவு நேரங்களிற் படித்து வந்தனர். ஒருவர் உரத்து வாசிக்க மற்றையோர் கேட்டுக் கொண்டிருந்தனர். புராணப்படனங்களும் பல கோவில்களிலும் தொடர்ந்து நடைபெற்றன. காப்புக்கட்டி விரதம் இருந்து பலர் புராணம் கேட்டனர். ஆண்டுதோறும் கேட்டு வந்ததினால் நிரம்பிய இலக்கிய அறிவு படைத்தோராகப் பலர் விளங்கினர். உரை கூறுவோர் தவறாக உரை கூறியபோது கேட்டுக்கொண்டிருந்த கிழவிகள் சிலர் திருத்திய சந்தர்ப்பங்களுமுண்டு. நயினாதீவுக் கோவில்களிற் சமயப் பிரசங்கங்கள் பல நிகழ்ந்து வந்தன. சின்ன மேளம் போன்ற கேளிக்கைகள் கோவில்களில் இடம் பெறாமையே இதற்குக் காரணமாகும். சமயப் பிரசங்கங்களும் மக்களின் கேள்வி அறிவைப் பெருக்கின. இன்றும் நயினாதீவிலுள்ள முதியோர் சிலர் பாரதம் முழுவதையும் வாய்ப் பாடமாக ஒப்புவிக்க வல்லவராய்க் காணப்படுகின்றனர். சிலர் நிகண்டு முதலியனவற்றையும் நன்கு மனனஞ் செய்துள்ளனர். திருவாளர்கள், அண்டியார், மார்க்கண்டர், பொன்னர் போன்றோர் சுயமாகவே கவிதைகள் இயற்றினர். நாகமணிப் புலவர் கல்வி நிறைந்த சூழலிற் பிறந்து வளர்ந்தவர். அவரது பேரன் வேலாயுதர் நயினாதீவு பழைய உரையாசிரியர்களுள் காலத்தால் மிக முற்பட்டவர் எனலாம். புலவர் அவர்கள் இயற்றிய நயினை மான்மியம், நயினை நீரோட்டயமக அந்தாதி என்பன அவரது புலமைக்குச் சான்று பகர்கின்றன. இன்றுள்ள கவிஞர்களுள் திரு ஆ. இராமுப்பிள்ளை (கஸ்தூரி) அவர்களும், வே. கந்தவனம் அவர்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோராவர். எழுத வாசிக்கத் தெரியாத நயினை முதியோர் பலர் நூற்றுக் கணக்கான பாரத இராமாயண கந்தபுராண செய்யுட்களைப் பிழையின்றி மனனஞ் செய்துள்ளமை, நயினாதீவு கல்வி வளர்ச்சியில் கேள்வி பெற்றிருந்த முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்தும்.
தில்லையம்பல வித்தியாசாலையில் திருவாளர்கள் கா. வேலுப்பிள்ளை, நா. கனகரத்தினம், ச. வைத்தியலிங்கம், க. ப. சுந்தரம்பிள்ளை, த. கார்த்திகேசு, வை. சடையப்பசாமி, க. ஆறுமுகம் ஆகியோர் தற்காலிக உதவியாசிரியர்களாகக் கடமையாற்றினார். திருமதி பூம்பாவை இராமச்சந்திரன், திருமதி சிவக்கொழுந்து சுந்தரம்பிள்ளை, திருமதி இராசம்மா வைத்தியலிங்கம் என்போர் பெண் ஆசிரியர்களாகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட முதலாவது பெண் ஆசிரியராக கடமையாற்றியவர் திருமதி நாகம்மா வேலுப்பிள்ளை ஆவர். பின்னர் திருமதி சீதேவிப்பிள்ளை சுப்பிரமணியமும் ஆசிரிய சேவையிற் புகுந்தார்.
திரு ச. நா. கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராக விளங்கிய காலம் ஸ்ரீநாகபூஷணி வித்தியாசாலையின் பொற்காலம் எனலாம். நயினாதீவு ஆசிரிய பரம்பரையொன்றை உருவாக்கி விட்ட பெருமை அவர்களுக்கேயுரியது. அவர்களை யாவரும் `பெரிய வாத்தியார்` என்றே அழைத்தமை அவருடைய சேவையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

கொழும்பு நயினைப் பழைய மாணவர் சங்கம் அக்காலத்தில் நயினாதீவின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டியது. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், இசைப் போட்டிகள் என்பன ஆண்டுதோறும் பாடசாலையில் அதி விமரிசையாக நடத்தப்பட்டன. அப்பொழுது கொழும்பு வர்த்தகர்களும், பிறரும் உதவிய பரிசில்களை இன்று நினைத்து பார்த்தாலும் வியப்பே உண்டாகின்றது. பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை நயினாதீவு வடக்கில் நாகபூஷணி வித்தியாசாலைக்குப் புதியதோர் கட்டிடத்தை அமைக்கவும் முன்வந்தது. 1929 ஆம் ஆண்டுதான் இன்றுள்ள நாகபூஷணி வித்தியாசாலைக் கட்டிடத்துக்கு அத்திவாரமிடப்பட்டது.
நயினாதீவில் ஒரு கிறிஸ்தவப் பாடசாலையை நிறுவ மிஷனரிமார் எடுத்த முயற்சியும் இக்காலத்தில் கைகூடியது. ஆயினும் அங்கு கல்வி கற்க ஒரு சில மாணவர்களே சென்றனர். அதனால் அது பொதுமக்களிடையே அதிக செல்வாக்குப் பெற முடியவில்ல. சில ஆண்டுகள் மாத்திரமே இப்பாடசாலை இயங்கியது. பின்னர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மாத்திரமே அந்த வளவுக்குள் எஞ்சி நின்றது. இக் கிறிஸ்தவ பாடசாலையிற் கடமையாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அருளம்பலச் சட்டம்பியாரும், முருகப்பா வாத்தியாருமாவர். நயினாதீவில் ஆங்கிலம் போதித்த முதலாவது ஆசிரியர் என நாம் முருகப்பா வாத்தியாரைக் குறிப்பிடலாம்.
நயினாதீவு தெற்கிலும் ஒரு பாடசாலை நிறுவ அப்பகுதி மக்கள் மிக ஆர்வத்துடன் முயன்றனர். அவர்களது அருமுயற்சியால் 1929 ஆம் ஆண்டு ஸ்ரீ கணேச வித்தியாசாலை உருவாகியது. இப் பாடசாலைக்குரிய கட்டிடம் நிறுவ நிலம் உதவிய பெருமை நாகமணிப் புலவர் அவர்களுக்கும், அவர்களது சகோதரர்களுக்கும் உரியதாகும். இப் பாடசாலையும் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையின் கீழ் இயங்கியது. சிரேஷ்ட பாடசாலை, விடுகைத் தராதரப் பத்திர வகுப்பு முதன் முதல் வைத்த பெருமை ஸ்ரீ கணேச வித்தியாசாலைக்கேயுரியது. அப்பொழுது தலமையாசிரியராகக் கடமையாற்றிய திரு வி. செல்லையா அவர்கள் பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க எடுத்துக் கொண்ட பெருமுயற்சியே இதற்கு காரணம் எனலாம். அதுவரை காலமும் சி. பா. த. வகுப்பிற் பயில விரும்புவோர் யாழ்ப்பாணம் சென்றே கல்வி கற்று வந்தனர். 1941 ஆம் ஆண்டு, முதன்முதலாக நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலையிற் பயின்ற ஒன்பது மாணவர் சி. பா. த. தேர்வுக்குத் தோற்றினர். அவர்களுள் எண்மர் சித்தியடைந்தமை பாராட்டுதற்குரியதே. அடுத்த ஆண்டில் ஸ்ரீ நாகபூஷணி வித்தியாசாலையிலும் சி. பா. த. வகுப்புக்கள் வைக்கப்பட்டன.

கெளரவ மந்திரி டபள்யூ. டபள்யூ. கன்னங்கரா அவர்களது முயற்ச்சியால் 1943 ஆம் ஆண்டு இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் உருவாகியது. இதனால் பணவசதியற்றோரும் ஆங்கில பாடசாலைகளிலே சேர்ந்து கல்வி கற்க முடிந்தது. ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் கனிஷ்ட (junior school) ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அப்பொழுது அரசாங்க சபையின் ஊர்காவற்றுறைப் பிரதிநிதியாகவும், சபாநாயகராகவும் விளங்கிய சேர் வை. துரைச்சாமி அவர்கள் தீவுகள் கடலாற் பிரிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டி வாதாடி ஒவ்வோர் தீவுகளிலும் கனிஷ்ட வித்தியாலயம் நிறுவ அனுமதி பெற்றார். அவரது அருமுயற்சியால் நயினாதீவிலும் ஒரு கனிஷ்ட ஆங்கில பாடசாலை 1946 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பமாகியது. கல்வி மந்திரி டபள்யூ. டபள்யூ. கன்னங்கரா அவர்களே அதனைத் திறந்து வைத்தார்.

கனிஷ்ட வித்தியாலயம் தோன்றும் வரை நயினாதீவில் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியடையவில்லை என்பது வருத்தத்திக்குரிய செய்தியாகும். பண வசதி படைத்த ஒரு சிலர் மாத்திரம் தமது பிள்ளைகளை ஆங்கிலங் கற்க யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்நிலை மாறி யாவரும் ஆங்கிலம் கற்க கனிஷ்ட வித்தியாலயம் சந்தர்ப்பம் அளித்தது. கனிஷ்ட வித்தியாலயம் அமைக்க தமது தேவாலய வளவின் முன் பாகத்தையுதவிய அமெரிக்கமிஷன் கிறிஸ்தவ சபையினரையும் அவர்களது பரந்த பொது நலநோக்கையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மேலே குறிப்பிட்ட மூன்று பாடசாலைக் கட்டிடங்களையும் நிறுவுவதற்குப் பொது மக்கள் புரிந்த உதவிகளையும் நாம் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. பனைகள், கற்கள், மரங்கள், கிடுகுகள் என்பன உதவியும், பணவுதவி புரிந்தும், உடலுழைப்பு நல்கியும் தற்காலிக கட்டிடங்களை அமைத்தும் நயினை மக்கள் ஆற்றிய சேவை போற்றுதற்குரியது.

கனிஷ்ட பாடசாலை பின்னர் சிரேஷ்ட பாடசாலை (senior school) ஆகவும் அதன் பின்னர் மாகாவித்தியாலயமாகவும் தரத்தில் உயர்ந்தது. க. பொ. த. உயர்தர வகுப்புக்கள் நடாத்தவும் அனுமதிக்கப்பட்டது. இங்கிருந்து பல்கலைக் கழகத்தின் கலைப் பிரிவுக்கு மாணவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இங்கு கல்வி பயின்ற மாணவர்களில் ஐந்நூறுக்கும் அதிகமானோர் இன்று பல்வேறு துறைகளிலும் உத்தியோகம் வகிக்கின்றனர். நயினை மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அக் காலத்தில் அதிபராக விளங்கிய திரு சி. கந்தப்பு அவர்களாற்றிய சேவையே காரணமெனலாம். திரு க. கனகரத்தினம் B Sc. அவர்கள் அதிபராக விளங்கிய காலத்தில் விஞ்ஞானப் பிரிவை வளர்க்கப் பெரிதும் உழைத்து வந்தார். இன்று விஞ்ஞானகூட வசதிகள் யாவும் பெற்று நயினை மகாவித்தியாலயம் விளங்குகின்றது. கலை, விஞ்ஞானம், வர்த்தகம் ஆகிய மூன்று பிரிவுகளும் அங்கு வளர்ந்து வருகின்றன. நயினாதீவு தெற்கிலமைந்துள்ள கணேச வித்தியாசாலையின் தரத்தை உயர்த்த வேண்டுமென அங்கு கடமையாற்றிய ஆசிரியர்கள் சிலரும், அப்பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெற்றோர் பலரும் பெரு முயற்சி செய்து வந்தனர். அவர்களின் பேரவா 1972 ஆம் ஆண்டு நிறைவேறியது. கணேச வித்தியாசாலை கனிஷ்ட உயர்தர (junior secondary school) தரத்தில் உயர்ந்து விளங்குகின்றது.

ஆயினும், இன்றுங்கூட க. பொ. த. உயர்தர வகுப்புக்களில் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டிய அவலநிலையே நீடிக்கின்றது. இதனால் உரிய விஷேட சித்திகள் பெற்ற பல மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பெற முடியாது இடையில் விட்டு விட நேரிடுகிறது. இந்நிலை மாறிப் பல்கலைக் கழகப் புதுமுக வகுப்பு வரை காலை, விஞ்ஞானம், வர்த்தகம் ஆகிய பிரிவுகளிற் கல்வி கற்கக் கூடிய நிலை உருவாக வேண்டும். பாடசாலைக் கல்வியுடன் அமையாது ஊர் மக்கள் பலரும் கற்றுப் பயனடையத் தக்கதாக இன்றுள்ள நூல் நிலையங்கள் பல துறை நூல்களாலும் நிறைக்கப்பட வேண்டும். வீடுகளில் உள்ளோரின் அறிவைப் பெருக்க ஒரு நடமாடும் நூல் நிலையத்தையும் நிறுவப் பொதுநல ஆர்வமுள்ளோர் முன்வர வேண்டும்.
இன்று தீவுப் பகுதிக் கல்வி அதிகாரியாக எமதூர்ப் பேரறிஞர் திரு அ. சி. நல்லையா அவர்கள் விளங்குகின்றார்கள். மூன்று பாடசாலைகளிலும் தலைமைப்பதவி பெற்று விளங்குபவர்களும் எமதூர் ஆசிரியர்களே. மூன்று பாடசாலைகளும் இணைந்து ஒத்துழைத்து வருவதும் நாம் செய்த பேறே. இச் சூழ்நிலையிற் கல்விப் பயிர் தழைத்தோங்கும் என்பதற்கையமில்லை.
ஓங்குக கல்வி!

ஆக்கியவர்: வித்துவான் சி. குமாரசாமி