நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்

நின்று தளரா வளர் தெங்கு - நிலைபெற்று உயர்ந்து வளரும் தென்னைமரமானது, தாள் உண்ட நீரை - தனது அடியிலே ஊற்றத் தான் பருகிய தண்ணீரை, தலையாலே தான் தருதலால் - (அதற்கு நன்றியாக) தனது தலையிலே இனிய இளநீராகத் தருவதால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் - ஒருவனுக்கு யாதேனும் ஓர் உபகாரத்தை நீ செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - அவன் அதற்குப் பதிலுபகாரம் எப்பொழுது செய்வானோ என எண்ண வேண்டியதில்லை.
ஒருவன் + கு = ஒருவற்கு - ஒருவனுக்கு
தெங்கு - தென்னை