நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி - நெற்பயிருக்கு இறைத்த நீரானது வாய்க்கால் வழியே ஓடும்போது, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - கசிந்து ஊறி அருகே இருக்கும் புற்களுக்கும் பயனாகும். (அதுபோல) தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்திலே, நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பின், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை - அவருக்காகப் பெய்யும் மழை எல்லார்க்கும் பயன் தரும்.
பொசிதல் - கசிந்து ஊறுதல்
தொல் + மை = தொன்மை - பழைமை
அவர் பொருட்டு - அவருக்காக