பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமம் செயல்.

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் - உமியோடு கூடியிருக்கும்போது முளைப்பது (நெல்லினுள் உள்ள) அரிசியே ஆயினும், உமி விண்டு போனால் முளையாதாம் - உமி நீங்கிப் போனால் அவ்வரிசி முளை விட மாட்டாது. (அதுபோல) கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் - நீங்காத பெரிய ஆற்றலை உடையவர்களுக்கும், அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ஆகாது - ஒரு கருமம் நிறைவேறுதற்குரிய காலம் வாய்த்தால் அன்றித் தொடங்கிய கருமத்தைச் செய்து முடித்தல் இயலாது.
விண்டு - நீங்கி
விள்ளுதல் - நீங்குதல்
அளவு - "அளந்த அளவு" எனக் கூறப்படும் வினைப்பயன். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி அடுத்த கருமங்கள் ஆகா என முன்னர் கூறப் பட்டிருப்பதும் இதுவே. இதற்கு, ஒருகருமத்தை நிறைவேற்றுவதற்க்கு வேண்டிய துணைவலி எனவும் பொருள் கூறுவார்.