கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

கல்லாதான் கற்ற கவி - (இலக்கண இலக்கியங்களைக் கற்றோர் பொருத்தமான பாடல்களைக் கூறிப் பொருள் உரைப்பதையும், அதனைப் பலரும் பாராட்டுவதையும் பார்த்து) கல்வியறிவற்ற ஒருவன் பொருத்தமற்ற இடத்தில் தான் கற்ற பிழையான பாடலைக் கூறுதல், கான மயிலாட - காட்டிலுள்ள மயிலானது (தனது அழகிய சிறகை விரித்து) நடனமாட, கண்டிருந்த வான்கோழி - அதனைப் பார்த்து ஒரு வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து - தன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்து, தன் பொல்லாச் சிறகைத் தானும் விரித்து ஆடினாற் போலும் - அழகு குறைந்த தனது சிறகை விரித்து ஆடுவதற்கு ஒப்பாகும்.