அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாங் கொக்கு
கொக்கு - கொக்கு என்னும் பறவை, மடைத்தலையில் - நீர் ஓடும் வாய்க்காலில், ஓடும் மீன் ஓட - ஓடுகின்ற சிறுமீன் குஞ்சுகளைஎல்லாம் ஓடவிட்டு, உறுமீன் வரும் அளவும் வாடியிருக்கும் - ஏற்ற பெரிய மீன் வரும்வரை காத்து நிற்கும். (அதனைப்போல) அடக்கம் உடையார் - தமது (உள்ளத்து உணர்ச்சிகளை) அடக்கியாளும் ஆற்றல் படைத்தோரை, அறிவு இலர் என்று எண்ணி - அறிவு இல்லாதார் என்று தவறாகக் கருதி, கடக்கக் கருதவும் வேண்டா - வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டாம்.
மடை - வாய்க்கால்
உறுமீன் - பெரிய மீன்