அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

அற்ற குளத்தில் - நீர் வற்றிப்போன குளத்தை விட்டு, அறு நீர்ப் பறவை போல் - நீங்கிப் போகின்ற நீர்வாழ் பறவைகளைப் போல, உற்றுழி - (ஒருவருக்கு வறுமை) வந்து சேர்ந்த பொழுது, தீர்வார் உறவு அல்லர் - அவரை விட்டு நீங்கிச் செல்வார் உறவினர் ஆகார், அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே - அக்குளத்தில் வளர்ந்திருந்த கொட்டியும், அல்லியும், நெய்தலும், (அக்குளத்தை விட்டு நீங்காது தாமும் வறண்டு கருகி மடிவது) போன்று, ஒட்டி உறுவார் உறவு - தாமும் அவரது துன்பத்திற் பங்குகொண்டு அவரை விட்டு நீங்காதவரே உண்மையான உறவினராவர்.
நீர்ப்பறவை - அன்னம், கொக்கு, நாரை ஆதியான
அறுதல் - விட்டு நீங்குதல்
தீர்த்தல் - விட்டு நீங்குதல்
உழி - இடம், காலம்.