சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற் (று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடம் உடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்.

சீரியர் - நல்லோர், கெட்டாலும் சீரியரே - (தம்முடைய செல்வத்தை இழந்து) வறுமையுற்றாலும் மேலோராகவே மதிக்கப்படுவர், சீரியர் அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும் - நல்லோர் அல்லாத கீழோர் செல்வத்தை இழந்து விட்டால் அவர் நிலை யாதாகும்? இகழவேபடுவர். சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் - சிறந்த பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தாலும் அப்பொன்னுக்கு உரிய மதிப்புக் குறையாது, மண்ணின் குடம் உடைந்தக் கால் என்னாகும் - மண்ணாற் செய்யப்பட்ட குடம் உடைந்துவிட்டால் வெறும் ஒடேயாகும்.
சீரியர் - நல்லோர்
உடைந்தக்கால் - உடைந்தவிடத்து
மற்று - அசை