உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.

உடன் பிறந்தே கொல்லும் வியாதி - சில வியாதிகள் பரம்பரையாகப் பிறக்கும்போதே வந்தடைந்து ஒருவனது மரணத்துக்கும் காரணமாவன. (அத்தகைய நோய்களையும்) உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும் - அவனுடன் பிறவாதனவும் பெரிய மலையினிடத்துக் காணப்படுவனவுமாகிய மருந்து மூலிகைகளே தீர்க்கும் வல்லமை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. அம்மருந்து போல்வாரும் உண்டு - அம்மருந்துபோல் ஆபத்து வேளையில் வந்து உதவும் அந்நியரும் உண்டு. (ஆதலின்) உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா - உடன் பிறந்த சகோதரர் மட்டுமே உறவினர் என்று எண்ண வேண்டாம்.