இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலி கிடந்த தூறாய் விடும்.

இல்லாள் அகத்திருக்க - குணவதியான மனையாள் வீட்டில் இருப்பாள் ஆயின், இல்லாதது ஒன்று இல்லை - அவ்வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமே இல்லையாம் (எல்லாம் நிறைவாக இருக்கும்), இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் - மனையாள் இல்லாத வீடும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் - கடுஞ் சொற்களைக் கூறும் மனையாள் உறையும் வீடும், புலிகிடந்த தூறாய் விடும் - புலி பதுங்கிக் கிடக்கும் பற்றை போலாகிவிடும்.
மாற்றம் - சொல்
வலிகிடந்த மாற்றம் - கடுஞ்சொல்
தூறு - பற்றை, புதர்.