எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சுரங்காய் ஈந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

இரங்கும் மட நெஞ்சே - துன்பங்கண்டு வருந்தும் அறிவற்ற மனமே, கருதியவாறு ஆமோ கருமம் - எண்ணியவாறு யாவும் நடந்துவிடுமா, எழுதியவாறே காண் - தலையெழுத்து என்று சொல்லும் விதிப்படியே தான் எதுவும் நடக்கும் என அறிவாயாக. கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்கு - கேட்பதைத் தரும் என்று எண்ணிக் கற்பக மரத்தை நாடிச் சென்றோர்க்கு, காஞ்சுரங்காய் ஈந்ததேல் - அம்மரம் எட்டிக்காய் எனப்படும் நஞ்சுக்காயைக் கொடுப்பின், (அதற்குக் காரணம்) முற்பவத்திற் செய்த வினை - முற்பிறவியில் அவர் செய்த தீவினைப் பயனேயாகும்.
கற்பகதரு - விரும்பியதைக் கொடுக்க வல்ல மரம்
காஞ்சுரங்காய் – எட்டிக்காய், பயங்கர நஞ்சுக்காய்
பவம் - பிறவி