கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ் சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

கயவர் கடுஞ் சினத்துக் கல் பிளவோடு ஒப்பர் - கீழ்மக்கள் கடுங்கோபம் கொண்டால் கல் பிளந்ததுபோல உறவைப் பிளந்து கொள்வர். (அவ்வெடிப்பு பின்னர் ஒன்று சேராது) கடுஞ் சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வர் - நல்லோர் கடுஞ்சினத்தால் பிரிந்துவிடினும் பின்பு பிளந்த பொன் ஒட்டிவிடுவது போல சேர்ந்துவிடுவார், சீர் ஒழுகு சான்றோர் சினம் - நல்லொழுக்கமுடைய அறிவுடையார் கோபம், விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல மாறும் - விற்பிடித்து எய்த அம்பினால் நீரில் ஏற்படும் வடு உடனேயே மறைந்து விடுவதுபோல, தோன்றிய உடனேயே மறைந்துவிடும்.