மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லைக் கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் - அரசனையும், குறைவு அறக் கற்றோனையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்தால், மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - அரசனிலும் பார்க்கக் கல்வியில் மிக்க வித்துவானே கூடிய சிறப்பை உடையவனாவான், (ஏனெனில்) மன்னருக்கு - அரசனுக்கு, தன் தேசம் அல்லால் சிறப்பில்லை - தன்னுடைய தேசத்தில் அன்றிப் பிற தேசங்களில் சிறப்பு இல்லை, கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு - வித்துவானுக்கு செல்லும் தேசங்கள் தோறும் சிறப்பு உண்டாகும்.
மாசு - குற்றம்
சீர்தூக்கல் - ஒப்பு நோக்குதல்