இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு
வறுமை வந்து எய்தியக்கால் இளமை இன்னா - வறுமை ஏற்பட்டால் இளமைப் பருவம் துன்பந் தருவதாகும், இன்னா அளவில் - துன்பம் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் இன்னாத - இன்பத்தைத் தரவேண்டியனவும் துன்பமே தரும். எதுபோலவெனில், நாள் அல்லா நாள் பூத்த நல் மலரும்- பயன்படும் சுபவேளையில்லாத நாளிற் பூத்த நல்ல மலரும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - பார்த்து அனுபவிக்க வேண்டிய கணவன் இல்லாத இளம் பெண் பெற்றிருக்கும் அழகும் போலும்.
இன்னா - துன்பம்.
இன்னா அளவு - முதுமைப் பருவம்.