அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

அட்டாலும் - காய்ச்சினாலும், பால் சுவையிற் குன்றாது - பால் தனது சுவையிற் குறையாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - சங்கை (நீறாகும் வரை) சுட்டாலும் அது மிகுந்த வெண்மை நிறத்தையே கொடுக்கும். அவைபோன்று மேல் மக்கள் கெட்டாலும் மேல்மக்களே - நல்லோர் (விதிப்பயனால்) கேடுற்ற காலத்திலும் தம்முடைய மேலான இயல்பிற் சிறிதும் குறைவுபடார், அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்புஅல்லர் - ஒருவரோடு அளவளாவிக் கலந்து நட்பு பூண்டாலும் சிநேகித குணமற்ற கீழ் மக்கள் நண்பர்கள் ஆகார்.
அடுதல் - காய்ச்சுதல்
நட்டல் - நட்புக் கொள்ளல்