உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவதல்லாற் பெரும் பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

கல் தூண் - கல்லால் அமைந்த தூணானது, பெரும் பாரந்தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமக்க நேர்ந்தால், பிளந்திறுவதல்லால் - பிளந்து உடைவதேயல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ - அத்தூண் தளர்ச்சியடைந்து வளையுமோ (வளையாது). அதுபோல உற்றஇடத்தில் - (தமக்கு ஆபத்தோ அவமானமோ நேர்ந்தால்) அவ்விடத்தில், உயிர் வழங்குந் தன்மையோர் - தமதுயிரையும் விட்டுவிடக்கூடிய மான உணர்வுடையோர், பற்றலரைக் கண்டால் பணிவரோ - தமது பகைவரைக் கண்டால் அஞ்சிப் பணிவார்களோ (பணியார்).
பற்றலர் - பற்று + அல்லர் - பகைவர்
கற்றூண் - கல் + தூண்
இறுதல் - உடைதல், அழிதல்.