நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்.

நீர் ஆம்பல் நீரளவே ஆகும் - நீரில் வளர்கின்ற ஆம்பற் கொடியானது அந்த நீர்நிலையிலுள்ள நீரின் உயரத்திற்கு ஏற்பவே உயர்ந்து தோன்றும், தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - ஓருவன் கற்ற நூல்களின் அளவாகவே அவனுடைய அறிவு நுட்பமும் அமையும், தான் பெற்ற செல்வம் - ஒருவன் பெற்று அநுபவிக்கும் செல்வமானது, மேலைத் தவத்தளவே ஆகும் - முற்பிறவியிற் செய்த தவப்பயனின் அளவாகவே கிட்டும், (அதுபோன்று) குலத்தளவே ஆகும் குணம் - தான் பிறந்த பரம்பரைக்குத் தக்கவாறே ஒருவனுடைய குணமும் அமையும்.
தான் - அவன் - ஒருவன்
மேலை - முற்பிறவி