"நாவலர் பலருறை நயினை" எனவும், நாகதீபம் எனவும் போற்றப்படும் நல்லெழில் மிக்க நயினாதீவாகிய நயினை ஒரு புனித சேத்திரமாகும். நண்ணுமடியார்க்கு அருள் சுரக்கும் ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆலயமும், மணிமேகலையிற் கூறப்படும் புத்த விகாரையும் அமைந்துள்ளமையினால் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை நாடோறும் ஈர்க்கும் அப்புண்ணிய பூமியின் நடுவண் இரட்டங்காலி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது முருகப்பெருமானின் ஆலயம். நயினை முருகன் எனவழைக்கப்படும் அப்பெருமான் மீது பிள்ளைத்தமிழ் பாடிய இந்நூலாசிரியரான திரு சு.சி.கதிரவேலு அவர்களும் நயினையைத் தமது பிறப்பிடமாகக் கொண்டவரே. கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் பண்டித வித்துவான் திரு சி.குமாரசாமி அவர்களின் இளைய சகோதரர் ஆகிய இவர் தனது சிறுபராயத்திலேயே அம் முருகனைத் தனக்கு நிழலாகக் கொண்டவர். அந்த நிழலில் விளையாடி அவனருளால் உயர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் , சமஸ்கிருதம், பாளி என்ற ஐந்து மொழிகளில் புலமை பெற்றவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரும், தமிழ்ப் பண்டிதரும் ஆகிய இவர் லண்டன் சர்வகலாசாலை, இலங்கைப் பல்கலைக்கழகம் எனபவற்றில் முறையே பீ.ஏ., எம்.ஏ.கியூ என்ற பட்டங்களைப் பெற்றவர் . சட்டக்கல்லூரியில் பல வருடங்கள் பயின்ற சட்டவல்லுநர் . நாற்பதுக்கு மேற்பட்ட சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்துதவியவர். ஆயிரக்கணக்கான இனிய பாடல்களைத் தமிழில் இயற்றியுள்ளார். ரவீந்திரநாத தாகூர் இயற்றிய கீதாஞ்சலி என்னும் நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் உதவி அரசாங்க அதிபராக உயர் பதவி வகிக்கும் இவருடைய முருக பக்தியினையும், தமிழ்ப்பற்றினையும், புலமையினையும் நயினை முருகன் பிள்ளைத்தமிழ் எமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது. பக்திரசம் சொட்டச் சொட்ட இவர் பாடிய பாடல்கள் சொல்நயமும் பொருள் நயமும் மிக்கனவாய் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாய் அமைந்துள்ளன. இனிய தமிழ் எளியநடையில் ஆற்றொழுக்குப் போன்று தங்குதடையின்றிச் செல்வனவாய் அமைந்துள்ள இவருடைய பாடல்கள் நயினையின் இயற்கை வளங்களையும், முருகனின் திருவிளையாடல்களையும் அழகு ததும்ப உணர்த்தி நிற்கின்றன. கந்தபுராணம், மகாபாரதம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், குமாரசம்பவம் என்பனவற்றில் இடம்பெற்றுள்ள புராண வரலாறுகளைத் தமது பாடல்களில் சேர்த்துப் புனைந்துள்ள விதம் மிகவும் வியந்து பாராட்டுதற்குரியது. சம்ஸ்கிருத மொழியில் ஆசிரியருக்குள்ள புலமையும் கற்பனைத் திறமையும் இதில் ஒவ்வொரு பருவத்திலும் மிளிர்வதைக் காணலாம்.

நயினை முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூலை அச்சிட்டு வெளியிட முன்வந்துள்ள செட்டிகுளம் கலாச்சாரப் பேரவையினரின் தமிழ்த்தொண்டும், நற்பணிகளும் பாராட்டுதலுக்குரியன. அவர்களின் தமிழ்த்தொண்டு வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம். இவ்வாசிரியர் எழுதிய "ஏழைச் சிறுவனே தயங்காதே" என்ற கவிதைத் தொகுதியும், "சிலப்பதிகார காலத்து நாகரிகம்" என்ற ஆராச்சி நூலும் விரைவில் எமது அச்சகத்தில் அச்சாகும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். தமிழ்ப் பற்று மிக்க வன்னி மக்கள் அதிலும் சிறப்பாக, செட்டிகுளம் கலாச்சாரப் பேரவையினர் இத்தகைய அரிய நூல்கள் வெளிவருவதற்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பர் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. தமிழன்னைக்கு இத்தகைய நல்லாரங்களை மேலும் மேலும் புனையச் செய்யும் அவர்களின் நற்பணிகள் தளைத்தோங்கட்டும்.
வாழ்க தமிழன்னை, வளர்க அவள் புகழ்!

விபுலானந்த அச்சகத்தினர்
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்