விநாயகக்கடவுள்
செங்கா லன்னம் நடைபயிலச்
சிறுகாற் பிணைநின் றேதிர்நோக்கச்
சேற்கண் ணிரண்டும் மருண்டசையச்
செவ்வாய் குயிலின் இசையெழுப்ப
வெங்கா னடுவிற் றினைப்புனத்து
விரையும் பறவை யினமோச்சும்
வேற்கண் குறத்தி களபமுலை
விழையும் பெருமான் றனைக்காக்க
நங்காவலனென் ற டியவர்கள்
நாடித் துதிப்ப நான்மறையோன்
நவிலும் மாபா ரதக் கதையெந்
நாளும் நின்று நிலைக்கவெனப்
பொங்கா விழைவான் மேருமலைப்
புறத்தே பிறையின் மருப்பொசித்துப்
பொறித்து நயினைச் செம்மணத்தம்
புலத்துத் திளைக்கும் பெருமாளே. - 1

அரும்பதவுரை : பிணை - பெண்மான் , சேற்கண் - சேல் மீன் போற் பிறழுங் கண் , களபமுலை - சாந்தணிந்த முலை , விழையும் -விரும்பும் , நவிலுதல் - கூறுதல் , மருப்பு - கொம்பு , பிறையின்- பிறைபோன்ற , ஒசித்து- முரித்து .


திருமால்
பூந்தா திறைக்கும் கற்பகப்பூம்
பொங்கர்க் கிறைவன் போற்றிசைப்பப்
புரமூன் றெரித்த கறைமிடற்றுப்
புத்தேள் பரவப் பொதியமலை
போந்தாங் கிருக்கும் குறுமுனிக்குப்
புளகங் கொளத்தேன் றமிழ் புகட்டும்
பொற்றே சிகனை நினையின் கண்
பொழியுங் குமரன் றனைக்காக்க
பூந்தா மரையோன் றனைப்படைத்துப்
புவனம் படைப்பித் தருளிநுரை
பொங்குந் திருப்பாற் கடலினிடை
பூமா துடனின் றருள்புரியும்
ஏந்தா லெனத்தும் புருவினுடன்
இசைநா ரதனும் புகழ்பாட
ஏனத் தொடுமீ னுருக்கொண்டே
ஏமம் புரியும் இறையோனே - 2

அ -ரை :- தாது- மகரந்தம் , இறைக்கும்- சொரியும் , பொங்கா- சோலை , பொங்கர்க் கிறைவன் - இந்திரன் , புத்தேள் - சிவன், பரவ - போற்றித் துதிக்க, தேசிகன்- குரு, ஏனம்- பன்றி, ஏமம்-காவல்.


சிவபிரான்
வேறு

சடாமு டிக்கொரு பெண்ணையும் வைத்துயர்
சைல மீது தவழ்ந்து படர்ந்திடும்
வடாமு லைப்பசும் பொற்கொடி வெள வவே
வாம பாக மளித்தவற் போற்றுதும்
விடாது நித்தமும் தன்னிரு கோட்டினால்
வீறு கொண்டு மடப்பிடி தாக்கலிற்
படாது மொட்டவி ழும்பசுந் தாரனைப்
பைங்க டம்பனைப் பாலனைக் காக்கவே - 3

அ -ரை : சைலம்-மலை, வடாமுலை - வடமணிந்த முலை , பசும் பொற்கொடி - உமாதேவி, வௌவ - பற்ற, வாமபாகம் - இடது பக்கம், மடப்பிடி- இளம் பெண்யானை( தேவயானை).


உமாதேவி
வேறு

வங்க மெறியும் பொங்குதிரை
வளர்ந்து வளைந்து மோதுதலாற்
சங்கங் கொழிக்கும் தரளநிரை
தரையிற் கிடந்து நிலாப்பரப்ப
எங்கும் பரந்த வெண்மணலும்
எழிலார் முல்லை நெல்வயலும்
தெங்கும் பனையும் கதலிகளும்
தேமா வுடனின் றெழில்பரப்பும்
சங்கத் தமிழார் நயினையிற்
சாரும் அன்பர்க் கருள்புரியும்
தாயை நாகபூசணியைச்
சமுண் டியையாம் போற்றுதுமே
வெங்கண் ணவுனர் விறலழிய
வேல்விட் டெறிந்த விடலையினை
வினைதீர் இரட்டங் காலிவளர்
விமலன் றன்னைக் காக்கவென்றே - 4

அ - ரை : வங்கம்- நாவாய் , தரளம் - முத்து, எழில் - அழகு , விறல் - வெற்றி , வலிமை, விடலை - வாலிபன், விமலன்-குற்றமற்றவன் .


பிரமா
உந்திக் கமலத் துதித்தவனை
உலகம் படைக்கும் உத்தமனை
அந்திக் கமலம் இரண்டேந்தும்
அழகுக் கொடியைப் புலவர்தினம்
வந்தித் திடுநற் குலமயிலை
வாணி யினைத்தன் திருநாவிற்
சிந்தை யதனிற் குடியிருத்தும்
தீர்த்தன் றனைய மேத்துதுமே
சிந்தைக்கினிய வேலவனைத்
தேவர் சேனா பதியினையெம்
முந்தை வினைகள் தீரப்பவனை
முக்கண் ணுடையார் திருமகனைக்
கந்தன் எனும்பேர் பெற்றவனைக்
கண்ணும் மனமும் நிறைந்தவனை
எந்த வினையும் சாரமே
இமைபோற் பாது காப்பதற்கே - 5.

அ -ரை : உந்தி- நாபி , வாணி- சரஸ்வதி, அந்திக்கமலம்- குவிந்த தாமரை மொட்டு, வந்தித்தல்- துதித்தல்.


சரஸ்வதி
பாடும் புலவர் செந்நாவிற்
பண்ணுக் கிசையப் பதமேடுத்து
ஆடும் கோல மயிலினைநல்
லாட கக்குன் றிரண்டொடைம்பாற்
காடும் சுமக்குங் கரும்பினைநற்
கமலா சனியைக் கலைகளெலாம்
தேடும் முளரிப் பதத்தாளைத்
தினமும் எத்தி வணங்குதுமே
வாடுந் தேவர் துயர்களைவான்
வடிவே லேந்தி மறச்சூரன்
ஓடி யொளியச் சமருழக்கி
உமையா ளுவக்க விறல்வாகை
சூடுங் குமரப் பெருமானைச்
சூடா மணியைச் சுடர்க்கொழுந்தை
ஆடும் கலாப மயிலோனை
ஆறு முகனைக் காக்கநன்றே - 6

அ -ரை : ஆடகம்- பொன், ஐம்பால் - கூந்தல் , கமலாசனி- தாமரை மலரில் வீற்றிருப்பவள், முளரி- தாமரை, சமருழக்கி- போர் புரிந்து.


இலக்குமி
ஓவா துயர்ந்த பொற்குன்றின்
ஒருபா லடியில் உலவாதே
பாவா நிற்கும் முகிலினைப்போற்
பாயல் ஆகிப் பாற்கடலில்
ஓரா யிரம்பைந் தலைவிரித்து
உயர்ந்து நிற்கும் அரவணையிற்
காயாம் பூவின் நிறம்பொலியக்
கண்ணே துயிலும் கார்வண்ணன்
ஆராக் காதல் கொண்டு தன(து)
அகலத் திருத்த வருள்புரியும்
அன்பின் உருவை இலக்குமியை
அம்பு ஜத்தைப் பணியுதுமே
மூவா முதல்வன் றனைமதியா
முளரித் தவிசோன் செருக்கடக்கி
முக்கண் ணவற்குப் பொருளுரைத்த
முருகோன் றன்னைக் காத்திடவே . - 7

அ -ரை : அகலம்- மார்பு , அம்புஜம்- நீரிற் பிறந்தவள் , இலக்குமி, மூவா முதல்வன் - சிவபெருமான் , முளரித் தவிசோன் - பிரமன் .


இந்திரன்
கங்கை நல்லாள் தாங்குதலாற்
காங்கே யன்னென் ரொருபெயரும்
கந்தன் என்றோர் மறுபெயரும்
கார்த்தி கைப்பெண் கள்ளறுவர்
கொங்கை யருத்தப் பாலருந்தும்
கோமா னென்னுந் திருப்பெயரும்
கோல மயிலோன் எனும்பெயரும்
கொண்ட குமரன் றனைக்காக்க
செங்கை யதனில் வயிரவொள்வாள்
சினத்தோ டேந்திச் செறுகிரியின்
சிறகை யீர்ந்து திறல்விஜயன்
சீர்பெற் றோங்கத் திகழ்வண்கை
அங்கர் கோமான் பால்நடந்து
அணிசேர் கவச குண்டலங்கள்
பங்க முறவே கவர்ந்துசெல்லும்
பதியே அமரர் கோமானே - 8

அ - ரை : ஈர்ந்து- அரிந்து , அங்கர் கோமான்- கண்ணன் ,


காளி
வேறு

பண்ணம் பணத்தி திரிசூலி
பாலைக் கிழத்தி கலையூர்தி
வண்ண மிடற்ற னுடனாடும்
வாலைக் குமரி மகமாரி
நண்ணும் அடியார் துயர்துடைக்கும்
நாரி நீலி நான்மூன்று
கண்ணன் றன்னை எம்முயிரைக்
கருணைக் கடலைக் காத்திடவே - 9

அ - ரை : கலை-ஆண்மான் , வண்ணமிடற்றன் - சிவன்.


முப்பத்து முக்கோடி தேவர்கள்
காலம் கடந்த பெருமானைக்
கண்ணுக் கினிய காவலனை
ஆலம் அருந்து மருட்கடலின்
அன்பிற் குரிய சிறுமகனை
ஞாலம் புரக்கும் மருத்துவரும்
ஞானக் கதிர்சேர் உருத்திரரும்
கோலம் புனையும் கதிர்களுடன்
கூடும் வசுவும் புரந்திடவே - 10

அ - ரை : ஆழம்- விடம், அருட்கடல்- சிவபெருமான் , கோலம் - அழகு.


காப்புப் பருவம் முற்றிற்று