நறையுண்ட வரிவண்டு களிபாட விரிகொன்றை
நறுந்தா ரசைந்து ஆட
நான்முகனும் மாலும்நற் புகழ்பாட நாகங்கள்
நலிவுற் றுயிர்த்து ஆடக்
கறையுண்ட மணிமிடறு ஒளிவீச முடியினிற்
கங்கைதன் கண்ப னிப்பக்
கரதலத் தனலாட நகுகின்ற பூதங்கள்
களிகொண்டு சூழ்ந்து ஆடப்
பிறைகொண்ட திருசடையு மவிழ்ந்தாட மாமேரு
பிலமுற் றமிழ்ந்து ஆடப்
பிரபஞ்சம் யாவையும் ஆட்டிவைத் தாடிடும்
பிஞ்ஞகன் பெற்ற மணியே
சிறையுண்ட வானோர்கள் குறைதீர்த்த செல்வனே
செங்கீரை யாடி யருளே
திருமருவும் நயினையிற் குலவும் வடிவேலனே
செங்கீரை யாடி யருளே - 1

அ – ரை: நறை - தேன்; உயிர்த்து - பெருமூச்சு விட்டு; பிலம - வெடிப்பு பாதலம்; பிஞ்ஞகன் - சடாமுடியையுடைய சிவன்.

சூல்கொண்ட மேகங்கள் சுற்றித் திரண்டெழச்
சொரிகின்ற மழைத டுத்துச்
சோர்வுற்று நலிகின்ற ஆனினம் காத்துநற்
றூணிடைத் தோன்றி மேலும்
மால்கொண்ட விரணியன் உடல்பிளந் தூறுபுரி
மாமன்றன் உயிர்க வர்ந்து
மாதுவடி வுற்றவொரு பேய்முலைப் பாலுண்டு
மருதிடைத் தவழ்ந்து களவிற்
சால்கொண்ட நவநீத முண்டுமத் தாலடிகள்
சாலவே பட்டு ஐவர்
தாயமது பெறற்கெனத் தூதுசென் றருளிமிகு
சாகஸங் கள்பு ரிந்தோன்
சீர்கண்டு முத்தாடி மகிழ்வெய்தும் மருகனே
செங்கீரை யாடி யருளே
திருமருவும் நயினையிற் குலவும்வடி வேலனே
செங்கீரை யாடி யருளே. - 2

அ - ரை: சூல்கொண்ட - கருவுற்ற; சால் - பெரியகுடம்; நவநீதம் - வெண்ணெய்; தாயம் - உரியபங்கு.

வேறு
கங்கைத் திரையில் முதல்ஆடிக்
கடல்போற் றிகழும் சரவணத்தில்
அஞ்ச ரோரு கத்தின்மிசை
அமர்ந்து ஆடிக் கார்த்திகைநன்
மங்கை மார்தம் மடியின்மிசை
மலர்ந்து கிடந்து விளையாடிக்
கொங்கை சொரியும் நறுந்தீம்பால்
குடித்து மகிழ்ந்து குதித்தாடி
அங்கை வேலோ டாடும்மயில்
அமர்ந்து ஆடிக் கூத்தாடிச்
செங்க னிக்காய் அண்ணனுடன்
சினந்து வெம்பிப் போராடி
அங்கண் வானத் தவர்க்கருளும்
அமுதே செங்கோ செங்கீரை
அலைசூழ் நயினைப் பதிவாழும்
அரசே செங்கோ செங்கீரை. - 3

அ - ரை: அஞ்சரோருகம் - அழகிய தாமரை; அங்கை – அழகிய கை; அங்கண் வானத்தவர் - அழகிய இடமகன்ற வானத்தில் உறையும் தேவர்.

பங்கப் பழனம் விளைசெந்நெல்
பாரிற் சரிந்து முத்தமிடப்
பழனத் தூரும் சங்கமெலாம்
பாத்தி களினன் முத்தமிடும்
வங்கம் மலியும் திரைகடல்சூழ்
வளமார் நயினை நகரதனில்
வளரும் பிறையென் றிடநாளோர்
வண்ணன் பொழுதோர் மேனியனாய்க்
கொங்கு துளிர்க்கும் நாண்மலர்ப்பூங்
கோதை யளிக்கும் திருமுலைப்பால்
கொஞ்சும் கடைவாய் வழிவழியக்
குலவும் செல்லக் கோமளமே
அங்கம் முழுதும் கண்ணனார்க் (கு)
அமுதே செங்கோ செங்கீரை
அலைசூழ் நயினைப் பதிவாழும்
அரசே செங்கோ செங்கீரை. - 4

அ - ரை: பங்கம் - சேறு; பழனம் - வயல்; வங்கம் - நாவாய்; கொங்கு - தேன்; நாண்மலர்ப் பூங்கோதை - உமாதேவியார்; அங்கம் - உடல்; அங்கம் முழுதும் கண்ணனார் - இந்திரன்.

வேறு
நசிவுறு நங்கையர் நின்னெழில் கண்டு
நயந்து நயந்தாட
நான்முக னுந்திரு மாலொடு தேவர்தம்
நாயக னும்நாட
அசைவுறு தன்னிரு செவிகளும் ஆடிட
அகமும் சேர்ந்தாட
அருமறை யோடுதன் னிருகையும் தூக்கி நின் (று)
அண்ணன் தாளமிட
இசைபெறு நின்புகழ் இமையவர் பாடிட
இமவான் மகளோடே
இறையவன் மகிழ்வொடு சிறுபுறம் தைவர
இருகரம் முன்னூன்றி
அசைவறு தொந்தியும் ஆடிட வேலவ
ஆடுக செங்கீரை
அன்பர் உளத்தினில் என்றும் நிலைப்பவ
ஆடுக செங்கீரை. - 5

அ - ரை: நசைவு - விருப்பம்; எழில் - அழகு; அகம் - மனம்; இமவான் மகள் - உமாதேவியார்; சிறுபுறம் - முதுகு; தைவர - தடல்; தொந்தி - வயிறு.

உததிக ளேழுடன் ஈரே ழாகிய
உலகங் களுமாட
உறுதி யழிந்து திகைத்தல மந்தலை
உயிரினந் தள்ளாடச்
சலதிக ளின்புறத் தொல்லையில் நின்றிடு
சக்கர வாளமுடன்
சடுதியின் முற்படு சேடனும் ஆயிரம்
தலைகள் அசைந்தாடப்
பரிதியி னோடெழு மதியமும் ஆடிடப்
பங்கயத் தோனாடப்
பாரளந் தோனுடன் தேவரும் ஆடிடப்
பார்வதி யும்ஆடப்
அதிதிக ளோடுயர் முனிவரும் ஆடிட
ஆடுக செங்கீரை
அன்பர் உளத்தினில் என்றும் நிலைப்பவ
ஆடுக செங்கீரை. - 6

அ - ரை: உததி - சமுத்திரம்; சலதிகள் - கடல்கள்; பங்கயத்தோன் - பிரமன்; பாரளந்தோன் - விஷ்ணு; அதிதிகள் - விருந்தினர்.

வாரியின் ஊடுசெலும் வள்ளம தலைப்புற
மலைத்துச் சுழித்தமகரம்
வானிற் குதித்தேறி வாலைச் சுழற்றிமுகில்
வாளிற் கிழித்தெழுந்து
பாரினிற் செம்பவள மரகதக் குலைகளோடு
பாளைகள் சேர்ந்துபொலியப்
பச்சைமர கதமென்ன முற்றித் தழைத்திடும்
பாசிலைப் பூகமதனில்
மாரியி னோடிழிய அதுகண்டு மந்திகள்
மருண்டடித் தோடிமறையும்
மகரக் குழாத்தினொடு மனைமுன்றி லூர்ந்திடும்
வலம்புரிச் சங்கமலியும்
சீரினச் சாலிவிளை நயினைமிளிர் செல்வனே
செங்கீரை யாடியருளே
செஞ்சடையில் மதியுடைய செம்மலருள் பாலனே
செங்கீரை யாடியருளே. - 7

அ - ரை: வாரி - சமுத்திரம்; பாசிலை - பசுமையான இலை; பூகம் - கமுகு; மகரம் - சுறாமீன்; குழாம் - கூட்டம்; சாலி - நெல்.

பாராளு முடிமன்னர் பல்லாண்டு பாடிடப்
பரவிநின் பதந்துதிப்பப்
பார்வதியும் நாதனும் போற்றிப் புகழ்ந்திடப்
பச்சைமயில் மீதிவர்ந்தே
போராடு தாரகன் றலைகொய்து மாயங்கள்
போர்க்களத் தேபுரிந்து
போலிவடி வுற்றுவரு சிங்கமுக வசுரனைப்
பொன்றிடச் செய்துமுடிவில்
நீராடு வாவியில் மறைசூரன் உடலதனை
நீள்வடிவ மாய்ப்பிளந்தே
நீடுபுகழ் பெற்றநின் புகழ்பாடி நின்னையே
நித்தமும் நினைந்துஉருகும்
சீராளர் வாழ்கின்ற நயினைமிளிர் செல்வனே
செங்கீரை யாடியருளே
செஞ்சடையில் மதியுடைய செம்மலருள் பாலனே
செங்கீரை யாடியருளே. - 8

அ - ரை: இவர்ந்து - ஏறியமர்ந்து; பொன்றிடச் செய்து - கொன்று; வாரி - சமுத்திரம்.

ஓராது இருப்பவர்தம் உள்ளத் தொளிக்கின்ற
ஒளியாகி உன்னுபவர்தம்
உள்ளத்து உறைகின்ற உயிராகி ஆனந்த
ஊற்றுமாய் உணர்வுமாகி
நீராகி நிற்கின்ற அடியார்கள் குறையெலாம்
நிர்மூல மாக்கிநின்று
நிறைவுற்ற செல்வமொடு சுகபோக மிவையெலாம்
நேர்மையுற வேயளிக்கும்
பாராகி விண்ணுமாய்ப் பரிதியும் மதியுமாய்ப்
பார்க்கின்ற பொருளிலெல்லாம்
பரிணமித் திருக்கின்ற பதியுமாய்ப் பசுவுமாய்ப்
பாசமும் ஆகிநிற்கும்
சேராத வர்க்குமருள் பாலிக்கும் ஐயனே
செங்கீரை யாடியருளே
செஞ்சடையில் மதியுடைய செம்மலருள் பாலனே
செங்கீரை யாடியருளே. - 9

அ - ரை: ஓராது - நினையாது; உன்னுபவர் - நினைப்பவர்; பார் - பூமி; பரிதி - சூரியன்; மதி - சந்திரன்; பரிணமித்திருக்கின்ற - வியாபித்திருக்கின்ற.

பால்கொடுத் திடுபசுவின் அருள்கூர்ந்து பாலிக்கும்
பார்வதிக் குகந்தமகனே
பரவுமடி யார்களுக் கருளுசுகு மாரனே
பவவிருள் கடியும்மணியே
வேல்எடுத் திமையவர்கள் குறைதீர்த்த செல்வனே
வெற்றிமயி லேறுகுகனே
வீரமுறு மார்பினில் ஈரமுள வீசனே
விஞ்சையர் வியக்கும்ஒளியே
மால்கெடுத் தடியவரை யாட்கொளும் தேவனே
மாதுகுற வள்ளிநினைவே
மாயன்மகிழ் வுறவொளிரும் நேயமுறு சீலனே
மாதர்நய னங்கள்மானச்
சேல்குதித் திடுநயினை சேர்ந்துமிளிர் வேலனே
செங்கீரை யாடியருளே
செஞ்சடையில் மதியுடைய செம்மலருள் பாலனே
செங்கீரை யாடியருளே. - 10

அ - ரை: பலவிருள் - பாவமாகிய இருள்; ஈரம் - இரக்கம்; மால் - மயக்கம்; நயனம் - கண்; மான - ஒப்ப.

செங்கீரை பருவம் முற்றிற்று.