பங்க யத்திற் றவழ்ந்துகயல்
பாயுஞ் சரவ ணத்தயலிற்
சிங்கக் குருளை யெனஆடித்
திரிந்து வளர்ந்த திருக்குமரா
சிங்க முகனைப் போர்க்களத்திற்
ரிணற வடித்துத் திறலழியப்
பொங்கு திரைக்கட் போய்ஒளியும்
பொய்ச்சூர் தடிந்த புயவீரா
தங்க நிறத்து ஒளிர்வடிவேல்
தாள்தோய் தடக்கைதனிலேந்தி
மங்கை நல்லார் இருவருடன்
மயிலிற் பவனி வருஞ்சுடரே
அங்க யற்கண் ணம்மைதரும்
அமுதே தாலோ தாலேலோ
அழகார் இரட்டங் காலிவளர்
அரசே தாலோ தாலேலோ - 1

அ - ரை : பங்கயம் - தாமரை, குருளை- குட்டி, சூர்- சூரபன்மன்; தடிந்த- கொன்ற ; தடக்கை- விசாலமான நீண்ட கை; அங்கயற் கண்ணம்மை - உமாதேவியார்.

நீறு விளங்க உடல்முழுதும்
நீண்டு விரிந்த சடைமுடியில்
ஆறு விளங்க அணிகலனாய்
அரவம் விளங்கத் திருமார்பில்
நாறுங் கொன்றைத் தார்விளங்க
நளினம் நிகர்க்கு மொருகரத்தில்
நீடு கொழுந்தோ டனல்விளங்க
நிருத்தம் புரியும் நிமலனுடற்
கூறு விளங்க அணைந்தவல்லிக்
கொடிநேர் இடைச்சி குரும்பைமுலை
ஊறும் முலைப்பா லுவந்தருந்தி
உமையாள் சேர்ப்ப ஓருருவாய்
ஆறு முகங்க ளுடன்விளங்கும்
அமுதே தாலோ தாலேலோ
அழகார் இரட்டங் காலிவளர்
அரசே தாலோ தாலேலோ. - 2

அ - ரை: கொன்றைத் தார் - கொன்றை மாலை; நளினம் - தாமரை; நிருத்தம் - நடனம்; நிமலன் - குற்றமற்றவன், சிவன்.

தேடும் மறையும் தேடவொண்ணாத்
திருப்பா தங்கள் ஊளத்திருத்திப்
பாடும் அடியார் பரவவருள்
பாலித் தருளும் பாலகனே
காடும் மலையும் கடந்தகன்று
கானிற் குறவர் திருமகளைத்
தேடும் பணியிற் களி(று)அருளத்
தேனிற் குலவும் திருவழகா
தோடும் தளிரும் கலந்துமிளிர்
தூய கடப்பந் தார்விளங்கும்
பீடு பெருநின் றிருமார்பம்
பிடியின் மருப்பால் வடுவுறவே
ஆடும் மஞ்ஞை யமர்ந்துலவும்
அமுதே தாலோ தாலேலோ
அழகார் இரட்டங் காலிவளர்
அரசே தாலோ தாலேலோ - 3

அ - ரை: மறை - வேதம்; களிறு - யானை முகத்தினையுடைய விநாயகன்; தேன் - தேனீ; தேனிற் குலவும் - தேனீ போன்று இன்புற்று மகிழும்; தோடு - பூவிதழ்; பிடி - பெண்யானை; மருப்பு - கொம்பு.

முன்னம் நதியிற் றுயில்கொண்டாய்
முளரித் தவிசிற் சரவணத்தில்
மின்னும் மதியின் ஒளியினிலே
மேலோய் நீயும் துயில்கொண்டாய்
மின்னின் நுடங்கும் இடைத்தாயார்
மேவி யுனக்குப் பாலருத்த
அன்னம் அனையாய் அவர்மடியில்
அறியுந் துயில்கொண் டருளினையால்
சின்னஞ் சிறிய கருவிழியாய்
சேவற் கொடியோய் கயற்கண்ணி
கன்னஞ் சிவக்க முத்தமிடக்
களித்துச் சிரிக்கும் காவலனே
அன்னத் தூவிச் சேக்கைதனில்
அமுதே தாலோ தாலேலோ
அழகார் இரட்டங் காலிவளர்
அரசே தாலோ தாலேலோ - 4

அ - ரை: முளரி - தாமரை; தவிசு - ஆசனம்; மின்னின் - மின்னலைப் போல; கயற்கண்ணி - உமாதேவி; அன்னத் தூவி - அன்னத்தின் இறகு; சேக்கை - படுக்கை.

புனற்கட் டவழ்ந்து புணர்முலையார்
புகட்டும் தீம்பால் குறுநகைசேர்
உதட்டின் வழிய உவந்தருந்தி
ஓங்கா ரத்தின் பொருளுரைத்து
மனத்தில் மமதை யுறும்மலரோன்
மமதை யொழித்து ஏனல்விளை
புனத்தில் வேடம் புனைந்தருளும்
பொருவேற் கண்ணாள புத்திரனே
சினத்தாற் றிரியும் திரிபுரங்கள்
சிதைந்து நீறாய்த் திரிதரவில்
வலத்தால் மலரெய் தோன்மடிந்து
மண்ணின் மறைய மலர்ந்தும்நுதல்
அனற்கண் பிறந்து வடிவுபெறும்
அமுதே தாலோ தாலேலோ
அழகார் இரட்டங் காலிவளர்
அரசே தாலோ தாலேலோ - 5

அ - ரை: புனல் - நீர்; புணர்முலையார் - கார்த்திகைப் பெண்கள்; மமதை - கர்வம்; மலரோன் - பிரமன்; எனல் - தினை; திரிதர - உருவம் மாற; வில்வலத்தால் மலரெய்தோன் - மன்மதன்; மலர்த்தும் - திறக்கும்.

வேறு
வானுக் கதிபனின் நேசத் திருமகள்
வரியப் புயம்அணைய
கானிற் குறமகள் மானைப் பொருவிழி
களவில் மணம்புரிய
மீனப் பொறுதிரு காதிற் குழைதோடு
விழியால் அருள்புரியும்
வானைக் கிழித்துயர் வெற்பிற் பிறந்தவள்
வரவால் ஒருங்கிணையும்
ஞானத் திருமகன் சேவற் கொடியினன்
நலமிக் குயர்அழகன்
நாதத் துருவினன் தாதர்க் கெளியவன்
நயினைப் பதிமிளிரும்
தானைக் கதிபதி வானோர் குலமணி
தாலோ தாலேலோ
தாழப் பவவினை நேயர்க் கருள்குக
தாலோ தாலேலோ. - 6

அ - ரை: வானுக் கதிபன் - இந்திரன்; நேசத் திருமகள் - தேவயானை; வரிய - திருமணம் புரிய; வெற்பிற் பிறந்தவள் - உமாதேவி; நாதத்துருவினன் - இசை வடிவினன்; தாதர் - அடியவர்.

வீடும் தருபவன் வெற்பில் உறைபவன்
விரியும் சடைஉடையான்
வேடம் புனைபவன் தோலும் அணிபவன்
விழியால் உனைஅளியா (து)
ஆடும் பதத்தனை நாடும் அடியவர்
அடையும் பதம்அறியா (து)
ஓடப் பழவினை உயரப் புகழ்உல
குய்யும் வகைசெய்யக்
கூடும் மடப்பிடி வாடக் கரந்தயல்
ஒளியும் உனைத்தேடிக்
கோடும் மனத்துடன் கோடொன் றினையுடை
குமரன் றனைக்கூவத்
தேடித் திரிபவன் நாணக் குதிப்பவ
தாலோ தாலேலோ
தாழப் பவவினை நேயர்க் கருள்குக
தாலோ தாலேலோ. - 7

அ - ரை: வீடு - முத்தி; வெற்பு - மலை; மடப்பிடி - இளம் வெண்யானை (உமாதேவி); கரந்து - மறைந்து; கோடும் மனம் - வாடும்மனம்; கோடு - கொம்பு.

நேரிற் கலந்திடு தேவர்க் குறுதுயர்
நிலைகெட் டழிவெய்த
நீசர்க் கெதிர்செலும் தானைக் கதிபதி
நிகரற் றவனெனவெ
போரிற் சிதைந்தவர் பொன்றத் துணைபுரி
பொருவேல் நினதாகப்
போகம் விழைந்தெழு பாசத் தொடுஉயல்
பொருவில் லெழில்மடவார்
காரிற் சுரிகுழல் அவிழத் தமதிரு
கருவேல் இரண்டேறியும்
காதற் சமரினில் மார்பந் துளைபடக்
கதியற் றவர்க்கருளும்
தாரிற் கடம்பணி தேவர் குலமணி
தாலோ தாலேலோ
தாழப் பவவினை நேயர்க் கருள்குக
தாலோ தாலேலோ. - 8

அ - ரை: நீசர் - அவுணர்; போகம் - இன்பம்; விளைந்து - விரும்பி; உயல் - வருந்துகின்ற; பொருவில் - ஒப்பற்ற; காரிற் கரிகுழல் - மேகம் போன்ற கரிய கூந்தல்; தார் - மாலை.

வேறு
தண்டேன் ஒழுகும் நறுந்தமிழிற்
றளைசீர் தெரிந்து தமிழ்விளங்கப்
பண்தேர் அறிஞர் படைத்திடும்நற்
பனுவல் அளிக்கும் சுவைநயமே
கண்டோர் வியக்கும் கவின்பெறுநற்
கனியே கயிலைக் கரியளிக்கும்
கன்றே கடலிற் சூர்தடிந்த
கதிர்வேல் அரசே கடல்புடைசூழ்
திண்டேர் மறுகுந் திருநயினைச்
செல்வி பயந்த செழுங்கனகக்
குன்றே இரட்டங் காலிவளர்
கோவே கமல மலருறையும்
வண்டே வணங்கும் அடியவர்தம்
வாழ்வே தாலோ தாலேலோ
வடிவே லேந்தும் திருக்கரத்து
வள்ளல் தாலோ தாலேலோ. - 9

அ - ரை: பனுவல் - செய்யுள்; கவின் - அழகு; கயிலைக்கரி - சிவபிரான்; நயினைச் செல்வி - நாகபூஷணி அம்மை; பயந்த - பெற்ற; கனகக்குன்று - பொற்குன்று; கமலமலர் - (உள்ளமாகிய) தாமரைமலர்.

புணரும் முலைகள் இரண்டுடைய
பூங்கொம் பொன்றி னுடன்பிறவாப்
புயல்வண் ணத்தன் வந்திடுவான்
பூவில் உறைவோன் உடன்வருவான்
இணரும் தளிரும் கொண்டணைவார்
இமையோர் அவர்தம் மகளிரெலாம்
கணமும் தரியார் நினைக்காணக்
கண்ணே மணிகள் அவர்தருவார்
மணமிக் கொளிரும் மாலைகளும்
வடமும் பீதாம் பரமுமுயர்
கடகத் தொடுபொற் கிண்கிணியும்
கடல்சேர் வணிகர் கொண்டணைவார்
குணமிக் குடைய குலக்கொழுந்தே
குன்றே தாலோ தாலேலோ
குரைக்குங் கடல்சூழ் நயினைமிளிர்
கோவே தாலோ தாலேலோ. - 10

அ - ரை: புணரும் முலைகள் இரண்டுடைய பூங்கொம்பு - உமாதேவியார்; புயல்வண்ணன் - திருமால்; இணர் - பூங்கொத்து; வடம் - முத்துமாலை; பீதாம்பரம் - பட்டாடை; கடகம் - வளையல்.

தாலப் பருவம் முற்றிற்று.