அலைக்கும் திரைகள் எறிந்துகரை
அரித்து நுரைத்து நறுமலர்கள்
உதிர்க்கும் தாதும் நறுந்தேனும்
உடலிற் கலப்ப விரைந்துலகில்
நிலைக்கும் கங்கைப் புனலதனில்
நீந்தும் மதலாய் சரவணத்தின்
நீடும் அயலிற் றிரிந்துவளர்
நிமலா நீல மடப்பிடிதன்
முலைக்கண் ணுறும் பாலருந்தும்
முருகா முக்கட் செல்வனருள்
முதல்வா குதலைக் கனிவாயால்
முனிவர்க் குணர்த்தும் குருநாதா
மலைக்கண் பிறந்த பசுங்கொடியின்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 1

அ - ரை: தாது - மகரந்தம்; நீல மடப்பிடி - நீல நிறமுடைய பெண்யானை, உமாதேவி; முக்கட் செல்வன் - சிவன்; மலைக்கண் பிறந்த பசுங்கொடி - உமாதேவி.

அரையிற் புலித்தோல் ஆடையுடீஇ
ஆடும் செல்வர் அவிர்சடையிற்
புனையுங் கங்கை நதியினுடன்
பொலியும் பிறையைத் தன்கடைவாய்
அரையின் முறிந்த ஒருகோட்டின்
அரையென் றெண்ணிப் புழைக்கரத்தால்
அரிதிற் பற்றி முறிகோட்டில்
அணைத்துப் பார்க்குங் குழக்களிறு
தரையிற் புரண்டு கதறியழத்
தாய்கோல் கொண்டு நினைக்கடியத்
தாவி யோடும் சிறுகுறும்பா
தனிவேல் அரசே தடத்தலர்தா
மரையின் மலர்ந்து மணங்கமழும்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 2

அ - ரை: புழைக்கை - துதிக்கை; குழக்களிறு - இளம் யானைக்கன்று; குறும்பன் - குறும்பு செய்பவன், குறிஞ்சி நிலத் தலைவன்; தனிவேல் - ஒப்பற்றவேல்; தடத்தலர் - வாவியில் மலரும்.

செந்தா மரையிற் சிறந்திலங்கும்
திருப்பா தங்கள் உளத்திருத்தி
வந்தார் கழல்கள் வணங்கிநிற்கும்
வறியோர் வினைகள் தீர்ப்பவனே
கந்தா இரட்டங் காலிவளர்
கதிர்வேல் முருகா கருநிறத்தாள்
மைந்தா மருதின் இடைத்தவழ்ந்த
மாயோன் மருகா மதம்பொழியக்
கந்தார்த் தெறியும் கடகளிற்றின்
காதைத் திருகி வயிறளந்து
கையை முறுக்கிக் குறும்புசெயும்
கடம்பா குறிஞ்சிக் காவலனே
மந்தா ரத்தின் மலர்ந்திலங்கும்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 3

அ - ரை: கருநிறத்தாள் - கரிய நிறத்தினையுடைய உமாதேவி; கந்து - கட்டுத்தறி; கடகளிறு - மதம் பொழியும் யானை, விநாயகர்; மந்தாரத்தின் - மந்தார மலரினைப் போன்று.

சங்கம் அமைத்துத் தமிழ்வளர்த்துத்
தனிவெண் குடைக்கீழ் அரசுபுரி
தமிழ்நாட் டரசர் திறைகொணரும்
தண்ணென் றொளிரும் சகலமுத்தும்
வங்கம் அலைக்கும் திரைமலியும்
மாதோட் டத்திற் குளித்தமுத்தும்
வாரித் தளத்திற் புகுந்தெடுத்த
வளமிக் குயர்ந்த சிலாபமுத்தும்
செங்கண் யவனர் விலைகொடுக்கச்
சேரர் அளிக்கும் சிறந்தமுத்தும்
சீரார் கொற்கைத் துறையதனிற்
சேரும் முத்தும் ஈடாமோ
மங்க அவற்றின் மகிமையெலாம்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 4

அ - ரை: தனிவெண்குடை - ஒப்பற்ற வெண்கொற்றக் குடை; வங்கம் - நாவாய்; வாரி - சமுத்திரம்; யவனர் - கிரேக்கர்.

குணக்குன் றெனநின் றடியவர்கள்
குழையக் குழையக் கருணைபொழி
குகனே நுதற்கண் பிறந்தருளும்
கொழுந்தே யவுணர் குடல்சரிந்து
நிணக்குன் றெங்கும் விளங்கவெறி
நெடுவே லுடையாய் நீறணியும்
நிமலர்க் கரிய பொருளுணர்த்தும்
நிகரில் குழகா நீள்வரையில்
கணக்கில் ஊழி காலமெல்லாம்
கடந்து நிற்கும் கருப்பொருளே
கங்கைத் துறையில் ஒருங்கிணையும்
கந்தா குறத்தி காதலனே
மணக்கும் துவர்வாய்ப் பசுங்கொடியின்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 5

அ - ரை: நுதற்கண் - நெற்றிக்கண்; துவர்வாய் - பவளவாய்; பசுங்கொடி - உமாதேவி.

தேனின் றொழுகும் மலர்க்கூந்தற்
தெய்வப் பிடிநின் பாலணையத்
தேவ மகளிர் ஏந்திநிற்பத்
தேடித் திரியும் குழக்களிறுன்
பானின் றொழுகும் மலர்முகத்தைப்
பார்த்துக் களித்து முத்தமிடப்
பாலும் பழமும் கொணந்தமரர்
படைத்துப் பரவிப் பூசைசெய
வானின் றழியும் மலர்மழைநின்
மார்பம் நிறைப்ப மலைமகளுன்
மணக்கோ லத்தைக் கண்டுமனம்
மகிழ்ந்து குளிரத் தேவர்குல
மானின் அழகுக் கழகுசெயும்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 6

அ - ரை: மலர்க்கூந்தற் தெய்வப்பிடி - தேவயானை; குழக்களிறு - இளம் யானைக்கன்று, விநாயகர்; பானின்றொழுகும் மலர்முகம் - பால்வடியும் மலர் போன்ற முகம்; தேவர் குலமான் - தேவயானை.

உருகும் அடியார் உனைநினைந்து
உழுவல் அன்பால் உளமுருகி
மறுகக் கண்ணீர் கதுப்பின்வழி
வழிய உளத்தே யூற்றெடுத்துப்
பெருகும் பக்திப் பெருக்கேயெம்
பெம்மா னேநற் பிடிபயந்த
பிள்ளைக் கனியே பிறையணிந்த
பித்தர்க் குணர்த்தும் குருநாதா
வருகுங் குமச்சே றாடுமிரு
வடமார் பொற்குன் றோடிணைந்த
வல்லிக் கொடியைத் தேவர்கள்தம்
மகளைக் குன்றில் மலர்த்தடத்தில்
மருவும் குமரா முருகவிழ்க்கும்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 7

அ - ரை: உழுவல் அன்பு - கனிந்த அன்பு; கதுப்பு - கன்னம்; நற்பிடி - நல்ல பெண்யானை, உமாதேவியார்; பிறையணிந்த பித்தன் - சிவபிரான்; வடமார் பொற் குன்றோடிணைந்த வல்லிக்கொடி - வள்ளி; தேவர்கள்தம் மகளை - தேவயானையை.

கண்ணும் கருத்தும் நிறைந்தடியார்
கவலை யெல்லாம் கருவறுத்துக்
காணும் பொருள்கள் அனைத்தினிலும்
காட்சி தருமெங் காவலனே
நண்ணும் கோல மடப்பிடியின்
நயனக் கணைபட் டுளமழியும்
நாதன் அளிக்கும் குலதிலகா
நலிவுற் றயர்ந்து செயலிழந்து
எண்ணும் பொழுதில் எழுந்தருளி
இன்பம் நல்கி இடர்களையும்
கண்ணின் மணியே கனிந்தநறுங்
கனியே இனிய குருநாதா
மண்ணும் விண்ணும் நிறைந்துகமழ்
மலரே முத்தம் தருகவே
மறிக்கும் கடல்சூழ் நயினைமிளிர்
மணியே முத்தம் தருகவே - 8

அ - ரை: கோல மடப்பிடி- அழகிய இளம் பெண்யானை, உமாதேவியார்; நயனக்கணை - விழியாகிய அம்பு; உளமழியும் நாதன் - சிவன்; நலிவுற்று - துன்பமுற்று.

வேறு

நிருதா திபன்மடிய வடிவேல் விடுங்குமர
நெடியோய் குலத்து முதலே
நிமலா மலர்க்குழலி மகனே மலைக்குவடு
நிலையா தழித்த முருகா
வருதா தையர்க்குமறை யுரையா துணர்த்துமொரு
மலர்தா மரைக்கை யுடையாய்
வடிவேல் நிகர்த்தவிழி துடிநே ரிடைக்கொடியை
மலைவாய் மணந்த குழகா
இருதா மரைக்கழல்கள் தமதா ருயிர்க்குநிழல்
எனவே துதிக்கும் அடியார்
இறைவா எனக்கதற அருள்வாய் திருக்குமர
இனிதாய் உளத்தின் ஒளியே
கருதா தவர்க்குமருள் மணியே எனக்குனது
கனிவாயின் முத்தம் அருளே
கருமால் தனக்குமரு மகனே எனக்குனது
கனிவாயின் முத்தம் அருளே. - 9

அ - ரை: நிருதாதிபன் - அரக்கர்களின் தலைவனான சூரபன்மன்; மலைக்குவடு - கிரெளவுஞ்ச மலை; தாதை - தந்தை; துரிநேரிடைக்கொடி - வள்ளி; துடிநேர் இடை - உடுக்கை போன்ற இடை.

தனியாய் வருந்திமலை புகுவாய் நினக்கினிய
கனியா னளிப்பன் இனியே
தணலாய் அனற்கணிடை வருவாய் திருக்குமர
தணிகா சலத்து மணியே
முனியாய் மறைக்கடவுள் மயலே யொழித்துமறை
மொழிவாய் இறைக்கு மகனே
மொழிதேர் முனிக்கினிய தமிழே யுரைக்குமொரு
முதலே தவத்தின் விளைவே
இனியாய் அருள்வடிவின் எளியாய் உளத்துறையும்
இறையே எமக்கு நிழலே
இமவான் மகட்கினிய அமுதே எழிற்குள்மிகும்
எழிலே இருட்குள் ஒளியே
கனியாய் மனத்தினிடை கனிவாய் எனக்குனது
கனிவாயின் முத்தம் அருளே
கருமால் தனக்குமரு மகனே எனக்குனது
கனிவாயின் முத்தம் அருளே. - 10

அ - ரை: மறைக்கடவுள் - பிரமன்; மொழிதேர்முனி - அகத்தியர்; இமவான்மகள் - உமாதேவியார்; எழில் - அழகு.

முத்தப் பருவம் முற்றிற்று.