வளைகள் ஒலிக்கும் ஒலிகேட்டு
வயலிற் கயல்கள் மருண்டலையும்
வரம்பில் நடக்கும் மடமகளிர்
மார்பின் மலரா முகைகுலுங்கும்
களைகள் பறிக்கும் கழனிகளிற்
கருங்கால் நாரை தவம்புரியும்
காராம் பசுவின் கடைவாயிற்
கார்நீ லங்கண் விழித்திலங்கும்
வளைகள் அளிக்கும் தரளமெலாம்
வயலிற் கிடந்து நிலாப்பரப்பும்
வளமார் இரட்டங் காலியினில்
வதியும் அரசே மமதையறத்
துளைகள் படவெஞ் சூர்தடியுஞ்
சுடர்வேல் முருகா வருகவே
துவர்வாய்க் களப முலைக்குறத்தி
துணைவா வருக வருகவே. - 1

அ - ரை: வளைகள் - காப்புகள், சங்குகள்; மார்பின் மலராமுகை - கொங்கை; தரளம் - முத்து; வதியும் - உறையும்; மமதை - கர்வம்.

மடுக்கும் தேனின் மதிமயங்கி
வண்டு துயிலும் மலர்க்கடம்பு
மார்பில் அசையப் பவனிவரும்
வடிவேல் அரசே வடிவழகி
கொடுக்கும் முலைப்பால் சுவைத்தருந்தும்
கோவே இரட்டங் காலிவளர்
குன்றே இனிய தமிழ்புகட்டுங்
குழகா உமையாள் மலர்க்கரத்தால்
எடுக்கும் மணியே இமையவர் தம்
ஏறே ஈடும் இணையுமிலா
எழிலே ஏற்றின் மிசைப்பொலியும்
இறைவர்க் குணர்த்தும் குருநாதா
தொடுக்கும் வினைகள் தொலைத்தருளும்
சுடர்வேல் முருகா வருகவே
துவர்வாய்க் களப முலைக்குறத்தி
துணைவா வருக வருகவே. - 2

அ- ரை : மடுக்கும்- பருகும்; வடிவழகி- உமாதேவி; ஏறு- ஆண் சிங்கம், எருது; ஏற்றின்மிசைப் பொலியும் இறைவன்- சிவன்.

பொங்கும் கடல்சூழ் நயினையினிற்
பொழிலார் இரட்டங் காலிமிளிர்
பொன்னே வருக மணிவடங்கள்
புனைய வருக புதுப்புனல்சேர்
கங்கை நதியில் வடிவுபெறும்
கந்தா வருக கனிந்தநறுங்
கனியே வருக கயிலையினிற்
கடவுள் நயக்க நடம்புரியும்
மங்கை யணைத்து முத்தமிடும்
மைந்தா வருக மலையுறையும்
மறையோர்க் கினிய தமிழ்புகட்டும்
மணியே வருக மயிலின்மிசைத்
துங்க வடிவே லுடனுலவும்
சுடரே வருக துடியினிடைத்
துவர்வாய்க் களப முலைக்குறத்தி
துணைவா வருக வருகவே. - 3

அ - ரை : பொழிலார் - சோலைகள் நிறைந்த; நடம்புரியும் மங்கை - உமாதேவி; மலையுறையும் மறையோன் - அகத்திய முனிவர்; துங்க வடிவேல் - ஒளிரும் கூர்வேல் ; துடி - உடுக்கை.

நேரார் புரங்கள் நீறுபட
நெற்றிக் கண்ணால் எரித்ததிரு
நீறார் மேனி யழகர்தரும்
நேரில் குழகா இமையவர்க்காய்ப்
போரார்த் துழந்து அவுணர்குலம்
பொன்றப் பொருது துயர்களைந்த
போரே றேபொற் கொடிபயந்த
பொன்னே மணியே கழலணியும்
வீரா இரட்டங் காலிவளர்
விமலா விளையுங் காதலினால்
விழிநீர் சொரிய விதிர்விதிர்த்து
விரும்பி யடியார் நினையழைத்தால்
வாரா திருத்தல் நினக்கழகோ
வடிவேல் முருகா வருகவே
வளமார் நயினைப் பதிமிளிரும்
வாழ்கவே வருக வருகவே. - 4

அ - ரை : நேரார் - பகைவர்; பொற்கொடி பயந்த - உமாதேவியார் பெற்ற.

வருக வருக எனவழைத்தும்
வாரா திருந்தால் மணிவடங்கள்
பொருந்த நினக்கு இனிப்பூட்டேன்
பூவும் சூட்டேன் மையெழுதேன்
முருகு அவிழ்க்கும் நறுமலர்கள்
முளரிப் பதத்தில் இனிச்சாத்தேன்
முறுவல் தவழும் திருவிதழில்
முத்தம் சொரியேன் நித்தமும்நின்
அருகு அணையேன் ஆர்வமுடன்
அள்ளி யணை யேன் அழகுபெற
அருஞ்சந் தனநீர் இனியாட்டேன்
ஆடை யணியேன் தலைவாரேன்
வருகண் ணீ ர்யான் இனித்துடையேன்
வடிவேல் முருகா வருகவே
வளமார் நயினைப் பதிமிளிரும்
வாழ்வே வருக வருகவே. - 5

அ - ரை : முருகு- வாசனை; முளரிப் பதம்- தாமரை மலர் போன்ற பாதம்; முறுவல்- புன்சிரிப்பு; வடிவேல்- கூரிய வேல்.

சிந்தா குலங்கள் தீர்த்தருளும்
செல்வா வருக மிடிகடியும்
சேயே வருக கயிலையினிற்
செல்வி முலைப்பால் சுவைத்தருந்தும்
மைந்தா வருக மாயவன்றன்
மருகா வருக மறையுணர்த்த்தும்
மணியே வருக மலர்புனைந்து
வரிவண் டார்ப்ப நடை நடக்கும்
மந்தா கினியாள் மடியில்வளர்
மதலாய் வருக முருகவிழ்க்கும்
மலரே வருக கடம்புமிளிர்
மார்பா வருக அடியவர்க்காய்
வந்தார் கருணை மழை பொழியும்
வடிவேல் முருகா வருகவே
வளமார் நயினைப் பதிமிளிரும்
வாழ்வே வருக வருகவே. - 6

அ - ரை : சிந்தாகுலங்கள்- மனத்துயர்கள்; மிடி- வறுமை; மந்தாகினி- கங்கைநதி; முருகு- வாசனை.

குஞ்சுக் கிரங்கிப் பெடை நாரை
குறுமீன் கொண்டு மடற்றாளைக்
கோட்டில் அமரக் குயிலினங்கள்
கோதும் மாவின் இளந்தளிர்கள்
வஞ்சி யிடையார் செவ்விதழின்
வடிவுற் றிலங்க மலர்க்காவில்
வரிவண் டினிய மதுவருந்தி
மகர யாழின் இசையெழுப்ப
மஞ்சு தவழ உளம்மகிழ்ந்து
மஞ்ஞை அகவி நடனமிட
மாடந் தோறும் முழவதிர
மருத நிலத்திற் கதிர்வணங்கக்
கொஞ்சும் அழகு தவழ்நயினைக்
கோவே வருக பிணியகற்றும்
குன்றே வருக குருநடைசெய்
குமரா வருக வருகவே . - 7

அ - ரை : மடற்றாளை - மடல்களோடு கூடிய தாழை ; மஞ்சு - முகில்; மஞ்ஞை - மயில்; பிணியகற்றும் குன்று- சஞ்சீவி மலை, முருகன்.

ஞானத் துயர்ந்த முனிவர்க்கும்
நாடற் கரிய மலர்ப்பதத்தால்
நாதம் எழுப்பும் சிலம்பொலிப்ப
நடந்தே வருக நாரதன்நற்
கானம் இசைப்ப நடம்புரியும்
கடவுள் நுதற்கட் டோன்றியருள்
கந்தா வருக கயிரவம்நேர்
கண்ணாள் முலைப்பா லருந்தியுயர்
வானத் தவர்க்கும் அருள்புரியும்
வள்ளால் வருக வனத்துறையும்
வள்ளிக் கினிய மணவாளா
வருக வருக தேவர்கள்தம்
சேனைத் தலைவா வருகவருட்
செல்வா வருக செகம்புகழும்
சேயே வருக நயினைமிளிர்
செவ்வேள் வருக வருகவே. - 8

அ - ரை : நாதம்- ஓசை; கயிரவம்- நீலோற்பலம்; கயிரவம் நேர் கண்ணாள் - உமாதேவி.

நாட்டம் இமையா வானவர்கள்
நாடித் துதிப்ப அருள்புரியும்
நாதா வருக மறைபுகலும்
ஞானப் பழமே வருகநன்னீர்
ஆட்ட வருக முடிதிருத்தி
அழகு படுத்த வருகமணி
யாரம் புனைய வருகசெம்பொன்
ஆடை யணிய வருகவடம்
பூட்ட வருக பொன்னரைஞாண்
பூண வருக மணிச்சதங்கை
பொற்பா தங்கள் இரண்டினிலும்
பொலிய வருக திலகம்நுதல்
தீட்ட வருக பாலருந்தச்
செல்வா வருக செகம்புகழும்
சேயே வருக நயினைமிளிர்
செவ்வேள் வருக வருகவே. - 9

அ -ரை : நாட்டம்- கண்; மறை- வேதம்; வடம்- முத்து மாலை.

நீடும் நினது திருக்கோவில்
நிலத்திற் கணித்தாய் வான்தொடநின்
றாடும் தென்னஞ் சோலைதனில்
அழகார் பவள வாய் திறந்தே
பாடும் இளமைப் பசுங்கிளிகள்
பாலா பாலா வெனவழைக்கும்
பசுமை தவழும் மாமரத்திற்
பவள நிறத்துத் தளிர்கோதித்
கூடுங் குயில்கள் இனிமையுறக்
குமரா குமரா வெனக்கூவும்
கொம்ப ரதனில் நாகணவாய்
குகனே குகனே எனமிழற்றும்
தேடும் மறையும் தேடவொண்ணாச்
செல்வா வருக செகம்புகழும்
சேயே வருக நயினைமிளிர்
செவ்வேள் வருக வருகவே. 10

வருகைப் பருவம் முற்றிற்று.