முழவதிரு மொலியிதென முழங்குகடல் ஓதைசெய
முன்றிலில் முத்த மீன்று
முடுகுவெண் சங்கங்கள் முக்கனிகள் பொலியவுறு
முகில்தழுவு சோலை சேரும்
விழவுமலி யூரனிவன் விரிசடையில் நதியணியும்
விமலனருள் வீர மகனால்
விரைகமழ முகையவிழு மலர் தழுவு மார்பனொளிர்
வீரவேல் தாங்கு கையன்
மழலை மொழி வாயரிய மறைபுகல அருள்புரியும்
மாயன்மரு கோனி வன்காண்
மலையரசன் மகள் தனது மடியதனில் விளையாடு
மதலையறு முகவ னிவனே
அழகுபொலி மயிலின்மிசை பவனிவரும் வேலனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 1

அ - ரை : முன்றில் - முற்றம்; முடுகுதல் - விரைந்து செல்லுதல்; விரைகமழ - வாசனை வீச; மலையரசன் மகள் - உமாதேவி; மதலை - குழந்தை.

பணி நெளிய அவிர்சடையில் மதிதிகழ வெண்ணீறு
பவளவுடல் மீது ஒளிரப்
பாய்புலியின் தோலுடீஇ யாடுபரம் பொருளினது
பாலனிவன் ஆடும் மயிலோன்
மணியொளிர மார்பதனில் வலியுறுகை வேல்தழுவ
மலரிணைகள் ஆடி யசைய
மாயவன்நற் காதலுறு நேயமரு கோன்புரியும்
மாயவிளை யாட லினிதே
பிணியகல வழிபடுநற் பெற்றிபெறுவோர்விழையும்
பேறருளும் வேல னுடன்நீ
பீடுபெற ஆடல்செய வல்லையெனில் உய்தியால்
பெருமைபெறு வெண்ணி லாவே
அணிதிகழும் மயிலின்மிசை பவனிவரும் வேலனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல் தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே - 2

அ -ரை : பணி - பாம்பு; விழையும் - விரும்பும்; பீடு - பெருமை; பிணி - நோய்.

ஆடரவ மணியுமெம தீசனொரு கண்ணதாய்
அமர்வுறுவை யெனினு மிவனவ்
அண்ணலது கண்மணியு மாவனுயர் விண்ணிலே
அமர்ந்தொளி பரப்பு கின்றாய்
நீடுபுவ னத்தோடு விண்ணுலகும் அண்டமும்
நிறைந்தவொளி யாமி வன்காண்
நீலநிறப் பையரவு கவ்வவுறு கவ்வையால்
நீதுய ருழப்ப தறிவாய்
சாடியர வேறியெழிற் றோகைவிரித் தாடுமயில்
தாவிநட மாடு குமரன்
சாருமடி யார்வினைகள் தீரவருள் பாலனிவன்
சார்வையெனிற் பாவ மறுமால்
ஆடவரு மாறுவுனை ஆசையொ டழைத்தவனொ(டு)
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே . - 3

அ - ரை : பையரவு - விசப்பையினையுடைய பாம்பு; கவ்வை - துன்பம்.

ஆடுசெவி வாரணத் தண்ணலுடன் எண்மரும்
ஆறுமுகன் வீர மாறியா(து)
அடுசமரம் முடுகியெதிர் பொருதவந் தாற்றாது
அன்றுவெந் நிட்ட தறியாய்
ஆடவரு மாறுவுனை அழைத்தும்வா ராதுவிடின்
அண்ணல்முனி யாது விடினும்
அழுதுவிழி சிவப்புறின் இரவிபகை சாய்த்தவன்
அதுபொறுத் தாள்வ னோசொல்
தோடவிழு மாலையுடன் தோழர்பலர் நிற்கவும்
தோன்றல்நினை யொருபொ ருட்டாய்ச்
சுட்டுவிரல் காட்டியிரு கண்பிசைந் தழைத்தனன்
தோஷமறும் ஓடி வந்தால்
ஆடுமயில் மீதுலவு பாலன்வடி வேலனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 4

அ - ரை : வாரணம் - யானை; வாரணத்தண்ணல் - இந்திரன்; எண்மர் - அட்டதிக்குப் பாலகர்; சமரம் - போர்;வெந்நிட்டது - புறமுதுகு காட்டியது; இரவி பகை சாய்த்தவன் - வீரவாகு தேவர்; தோடு - இதழ்.

புவியதனில் கவியுமிருள் கடிவதல் லாதகம்
குவியுமிருள் கடிய வலையோ
பொன்னெனமின் னொளிருநல் வானிலே பொலிவையாற்
பூமியிற் பொலித லிலையால்
குவியுமல வினைகளும் தீர்த்தருள வல்லவிக்
குகனை நீ யெங்ங னொப்பாய்
குறைநிறைவி லாமலெக் காலமும் கலையுடைய
குமரனிவன் நீயு மறிவாய்
கவிதைபெறு மிவன்நினது கறையும் துடைப்பன்நின்
கசப்பிணியும் மற்று மகலும்
கருதுபவர் துயரெலாம் நீக்கியருள் ஈந்திடும்
கந்தனிவன் நினைய ழைத்தான்
அவியுணவு வேட்குமிந் திரன்மருகன் வேலனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே . - 5

அ - ரை : அகம்குவியுமிருள் - மனவிருள்; அவியுணவு - யாகத்தில் அளிக்கப்படும் பலி; வேட்கும் - விரும்பி யேற்கும் .

கங்கைநதி முடிசூடி ஆடிடும் முழுமுதற்
கடவுள் தன்கண் ணாதலால்
கருணைநில வெறித்திடும் மதிக்கடவு ளென்னலாற்
கமலமலர் முகிழ்த்து வதனால்
செங்குவளை யோடுகுமு தம்விரியச் செய்தலால்
சேரிரவ லர்மு கங்கள்
செம்மையுறக் கோடா தளித்தலாற் றண்ணளி
சிறந்தி டச்சுரந் திடுதலால்
பொங்குபுவி தனிற்பயிர் தழைக்கவந் தெய்தலாற்
பொருவேலை முகந்திடுத லால்
பொலியுமெம திளவலைப் போன்றனை யெனினிவன்
பொன்னுலகும் அளிக்க வல்லான்
அங்கைதனில் வேலேந்தி ஆடல்புரி வீரனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 6

அ - ரை : முகிழ்த்தல் - குவியச் செய்தல்; இரவலர் முகங்கள் - இரப்பவர் முகங்கள், இரவில் மலரும் மலர்கள்; வேலை - சமுத்திரம்.

பூவிலுறை வேதன்மகன் யாகம் வளர்த்தவப்
பூமியுரு மாறி நொடியில்
பொலபொலெனத் தலையுருள வெங்குருதி பாயவொரு
போர்க்களம் ஆன தறிவாய்
காவிலுறை தேவர்மொத் துண்டதும் முழுமதிக்
கடவுள்நீ பட்ட பாடும்
கருத்திலுள தென்னில்நீ காலங் கடத்துமொரு
காரணமென் யாமும் அறியோம்
நாவிலுயர் பாரதி யிருக்கவும் நான்முகன்
நன்குகுட் டுண்ட தறிவாய்
நாதனொரு பாலனென எண்ணிடேல் எண்ணிடில்
நலிவுறுவை நாணும் மதியே
ஆவியினிற் காதலெனில் ஆசையொ டழைத்தவனொ(டு)
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 7

அ - ரை : பூவிலுறை வேதன் - பிரமன்; வேதன்மகன் - தக்ஷன் ; குருதி - இரத்தம்; பாரதி - சரஸ்வதி; நான்முகன் - பிரமன்.

செழுங்கமலம் அவர் தரநற் செங்கதிர் அழைத்திடும்
சேவலைக் கொடிய தாக்கிச்
செங்குமுதம் மலரநன் னிலாநகை முகிழ்த்தலால்
சேயிவனை ஒப்பை யெனினும்
விளங்குபல வுயிர்க்குமுயி ரானவன ஃ தன்றியும்
வேண்டிடும் வரம ளிப்பான்
விண்ணிலே பலகோடி தெய்வமுண் டென்னிலும்
விரைந்துதவு தெய்வம் இவனால்
களங்கமறுத் துன்னையும் காப்பனுனை வாட்டிடும்
காசநோய் மாற்ற வல்லான்
காய்வனெனில் அட்டதிக் கினிற்புகலும் இல்லையால்
கரந்துறைத லியலாது காண்
அழுங்குபிணி யாவையும் தீர்த்தருள வல்லவனோடு
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 8

அ - ரை : களங்கம்- குற்றம்; காய்வனெனில் - கோபங்கொள்ளின் ; புகல் - புகலிடம்; கரந்துறைதல் - மறைந்து வசித்தல்; அழுங்குபிணி - வருத்தும் நோய்

விரிசடையில் நதியணியும் விமலனது முடியிலே
விளங்கியொளி பரப்பு வதனால்
விரிந்தபதி னாறுகலை யுடன்பொலியும் மதியமென
விளங்குகையில் இடம்பெ யர்ந்து
திரிவுறுமுப் புரமெரித் தாடுபரம் பொருளினது
தேவியவள் வதன மொத்துத்
திகழ்வுறுவ தாலுனது கலைகள்பல தேய்வுறத்
தேய்ந்து பிறை வடிவு றுங்கால்
கரிவடிவு பெற்றவைங் கரத்தவனின் மருப்புறக்
களங்கமற இலங்கு வதனாற்
கணக்கரிய தோழர்பலர் நிற்கவும் ஆவலொடு
கந்தனுனை அழைத்த னன் காண்
அரிபிரமன் முதலாய தேவர் தொழ நின்றவனொ(டு)
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 9

அ - ரை : பரம்பொருளினது தேவி - உமாதேவி; வதனம் - முகம்; ஐங்கரத்தவன் - விநாயகக் கடவுள்; மருப்பு - கொம்பு; அரி - விஷ்ணு ; கரி - யானை.

கரியமலை யுருவெடுத் தென்னநின் றோசைபெறு
காதிரண் டும்ம டித்துக்
கால்கள் திமிதிமியெனத் தாளமிட வண்டினம்
கன்னமத முண்டு படரத்
திரியுமுயி ரினமச்ச முற்றிடச் சிறுகணாற்
செம்மையுற நோக்கி யெட்டுத்
திக்கினும் ஒசையெதிர் ஒலித்திடப் பிளிறிநற்
செங்கரும் பருந்தி யெங்கோன்
பெரியதிருக் கோவிலின் வாயிற் புறத்தினிற்
பெற்றியுடன் ஆடி நிற்கும்
பெருங்களிற் றின்புழைக் கையை நீ அரவெனப்
பேதுற்று அஞ்ச வேண்டாம்
அரியமறை முதல்வனுயர் அழகன்வடி வேலனுடன்
அம்புலீ ஆட வாவே
அலைகளெறி கடல்தழுவும் நயினைமிளிர் நாதனுடன்
அம்புலீ ஆட வாவே. - 10

அ - ரை : புழக்கை - துதிக்கை; அரவென- பாம்பென்று; பேதுற்று- மயக்கமுற்று; மறை முதல்வன்- வேத நாயகனான முருகன்.

அம்புலிப் பருவம் முற்றிற்று.