"ஆத்மஜோதி" ஆசிரியர்
உயர்திரு. க. இராமச்சந்திரன்
அளித்த அணிந்துரை

அன்னையைத் தெய்வமாக வழிபாடும் முறை உலகெங்கணும் தொன்று தொட்டு இருந்து வரும் ஓர் அருமையான வழக்கமாகும். அது எம்மொழியினர்க்கும், எச்சமயத்தவர்க்கும் பொதுவானதாகும். இன்று பன்னிரண்டு இராசிகளுடன் கருதப்படும் இராசி மண்டலத்தில், முற்காலத்தில் எட்டு இராசிகளே கணிக்கப்பட்டன. வேதங்களுள் முதலாவதான இருக்கு இந்தக் கணிப்பை ஏற்றுள்ளது. இந்த எட்டினுள் முக்கிய இடம் பெற்றது கன்னி இராசியாகும். நவராத்திரி பூசை நடப்பது கன்னி இராசியான புரட்டாசி மாசத்தில் என்பதை எல்லோரும் அறிவர். வானூல் சாஸ்திர ரீதியாகக் கிடைத்துள்ள இந்த உண்மையொன்றே தேவி வழிபாட்டின் தொன்மைக்கும் போதிய சான்றாகும்.

விஞ்ஞானம் மூலம் இயற்கையை அடக்கியாண்டு அணுவின் சக்தியை நாச வேலைக்கு உபயோகமாக்கி அல்லற்படும் நவீன உலகம் உய்ய வேண்டின், மறுபடியும் பராசக்தியைப் போற்றி வழிபட்டு அவள் கருணையைப் பேணி வாழ வேண்டுமென்ற கருத்துப்பட அண்மையில் ஓர் அரிய பெரிய ஆராய்ச்சி நூல் (The Return of the Goddess) உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான திருமதி.ரைசன் என்னும் ஆங்கில அம்மையாரால் வரையப்பட்டுள்ளது.

ஈழத்தைப் பொறுத்தமட்டில், நமது சைவசமயத்தைச் சார்ந்த அளவில், தேவி வழிபாட்டின் பழமைக்கும், புதுமைக்கும், மகிமைக்கும் இணையற்ற அத்தாட்சியாக விளங்குவது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். அதன் பழைய வரலாற்றையும், அங்கே அம்பாள் பவனி வரும் புதிய அலங்காரத் தேரின் அற்புத சிற்ப வெளிப்பாட்டையும், அதில் அமைந்துள்ள அழகிய சித்திரங்களின் தத்துவங்களையும் விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும்.

இதை இயற்றிய அன்பர், திரு. குல. சபாநாதன் அவர்கள், ஈழநாட்டின் புராதன புண்ணிய தலங்களின் வரலாறுகளையும், தமிழ்ப் பெரியார்களின், புலவர்களின் சரித்திரங்களையும், அவர்களால் இயற்றப்பட்டு மறைந்து கிடக்கும் நூல்களையும் தேடிச் சேர்த்து, அவற்றைத் தமிழ் உலகு அறியச் செய்வதைத் தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர்.

நாகபூஷணி அம்பாள் அருள் பாலிக்கும் திறன் மிகவும் அற்புதமானதாகும். இதனை அனுபவத்தில் கண்டவர்களே நன்கு உணர முடியும். தனது ஆலய சம்பந்தமான திருத்தொண்டு எதுவாயினும் சரி அதற்கு எவரை, எக்காலத்தில், எவ்விதத்தில் அப்பெருமாட்டி ஆட்கொண்டு கருவியாகச் செய்வாள் என முன்கூட்டிச் சொல்லவோ திட்டமிடவோ முடியாது. பக்தியும், சைவசமய சாஸ்திர அறிவும், சரித்திர ஆராய்ச்சித் திறனும் ஒருங்கே அமைந்த திரு. சபாநாதன் அவர்கள் சென்ற சில வருடங்களாகத் தொடர்ந்து இவ்வித பிரசாரத் தொண்டில் ஈடுபட்டு வருவது தேவியின் திருச்சித்தப்படியேயாம். மேலும் மேலும் அவளது அளப்பருங் கருணைக்கு அவர் உரித்தாகுமாறு பிரார்த்திக்கின்றோம்.

க. இராமச்சந்திரன்
ஐயந்திபுரம், தலங்கம,
சுபகிருது வைகாசி மீ 24ந் தேதி