தென்னிந்தியாவில் மரவேலைக்குப் பேர்பெற்ற இடம் நாஞ்சில் நாடு என்றுதான் சொல்லவேண்டும். நீலக்கடலோரத்திலே நின்று நித்தம் தவஞ் செய்யும் கன்னியாகுமரியை அடுத்த நாகர்கோயிலில் பரம்பரையாக மரவேலைத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் பல உள. அத்தகைய குடும்பமொன்றில் பிறந்த திரு. எஸ். குமாரசுவாமி ஆசாரியார் தாம் நயினாதீவுத் தேர்த் திருப்பணியையும் நிறைவேற்றினார். நாகர்கோவிலைச் சேர்ந்த தாழக் குடியில் பிறந்து இளம்வயதிலே கல்விகற்று சித்திரப் பாடங்களிற் சித்தி எய்தினார். சித்திரமும் கைப்பழக்கமாதலால், குரு சிஷ்ய முறையாக இந்த வேலையைக் கற்றுக்கொண்டார். பின்னர் 1924 ஆம் ஆண்டிலே சென்னைச் சிந்தாதிரிப்பேட்டையில் திரெளபதையம்மன் கோவிலுக்கு ஒரு தேர் செய்தார். இதுவே இவர் முதன்முதலாகச் செய்து நிறைவேற்றிய தேராகும். பின்னர் இந்தியாவில் பல இடங்களில் கோயிற்றிருப்பணி செய்திருக்கிறார். நாகேஸ்வரி அம்பாளின் திருவருளினால் அவள் உலாப் போதற்குரிய சித்திரத் தேர்த் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும்போதே அவருடைய சஷ்டியாப்த பூர்த்திவைபவமும் அம்பாள் சந்நிதானத்திலேயே நிறைவேறியது. அம்பாள் அருள் பாலிக்கும் திறனை யார் அறிவார்?