பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவுள்ள உலக நாயகியாகிய நாகேஸ்வரி கருணைத் திருக்கோலத்துடன் வானளாவிய அலங்காரத்தேரின் மீது வீற்றிருந்து பக்தர்களுக்கருள் புரியுங் காட்சியைக் காணில் கருங்கல் மனமுங் கசிந்துருகும். திருவிழாவில் பத்தாம் நாளாகிய தேர்த் திருவிழாவன்று அம்பிகையின் அருள்வடிவக் காட்சி ஓர் அற்புதக் காட்சி, ஆனந்தக் காட்சி! செற்பிரபஞ்சத்துக்குள் அடங்காத காட்சி! நினைந்து நினைந்து நெக்கு நெக்குருக வேண்டிய காட்சி; சொல்லொணாக் காட்சியை, தாமாகவே யுணர்ந்து இன்புற்றிருக்கவேண்டிய காட்சியை நாயேன் சொல்லத்துணிந்த பெருங் குற்றத்தை அம்பாள் பொறுத்து இரட்சிக்குமாறு கும்பிடுகின்றேன்.
அம்பாளின் அற்புத வடிவத்தைச் சொல்லோவியத்தில் தீட்ட முயன்றனர் புலவர் பலர். அவள் பக்தி வலையிற் படுபவள் ஆதலின் பக்தி நிரம்பிய அடியார்க்கு எளியள் அல்லவா? ஆகவே அவளை ஒருவாறு வர்ணிக்க முயன்ற வரகவி முத்துக்குமாருப் புலவர்,
"பேர்தங்கு மகிலாண் டடுக்குமதி லுறுபொருட்
பிரிவுஞ் சராசரமெனும்
பேருயிர்க லுந்தந்து பாதுகாத் தருளுமுன்
பெருமையாம் பாடவெளிதோ"
என்று கைவிட்டுவிட்டார். எனினும் அவர் வரைய முயன்ற சொல்லோவியம் இது.
தொங்கலும் அகிலளாவிச்
சொருகிட்ட கொண்டையுஞ் சுட்டியு மலர்க்கையாற்
றொட்டிட்ட சிந்தூரமும்
தோடுற்ற கொந்தளக மரகதக் கொம்புமார்
துனைவிழியி லெழுதுமையும்
துகளற்ற வெண்டரள முருகுநற் பவளவாய்த்
துருவமொளிர் நளினமுகமுந்
தேடுற்ற செங்கமல பொற்பதமு மழகான
திருமெய்யு மறிவினாலே
தெரிசிக்க வருள்தந்து நீடாயு ளும்பெருஞ்
செல்வமுந் தரவேண்டு(ம்) நீ
நாடுற்ற பலவளமு முறையுமிகு நயினா
நகர்க்கண்மரு வுங்கெளரியே
நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசுக
நாகயீஸ் வரிஅம்மையே.
நயினாதீவுத் தேர்த்திருவிழாவின்போது அம்பிகையை வணங்குவது பெறற்கரிய பெரும் பேறாகவே சைவ நன்மக்கள் கருதிவருகின்றார்கள்.
சர்வலோக நாயகியாகிய நாகேஸ்வரி அம்பாள் அலங்காரத் தேர்மீதிவர்ந்து வீதிவலம்வந்து இருப்புத் தானத்துக்கு வரும்வரை பக்தகோடிகள் நற்றவமிக்க நயினையம்பதியை விட்டகலமாட்டார்கள். அதுவரை யாத்திரீகர் விரும்பினாலுங்கூட நயினாதீவை விட்டுப் புறப்பட முடியாது. வத்தைக்காரர் புறப்படவே மறந்து விடுவர். வீதிவலம்வரும் அம்பாள் மீண்டும் இருப்பிடத்துக்கு வந்ததும் மக்கள் அர்ச்சனை முதலியவற்றைச் செய்வித்துத் தம் இறுதி வழிபாட்டையும் ஆற்றி அன்னையிடம் விடைபெற்றுக்கொண்டு பாலத்தை நோக்கிச் செல்வார்கள். அங்கே படகுகளிலும், லாஞ்சிகளிலும்,போட்டுக்களிலும், வள்ளங்களிலும் மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஏறும்வரையும், 'அரோகரா அரோகரா' என்று சொல்லும் நாவும் அவ்வாறு அடிக்கடி சொல்லிப் பயின்ற வாசனை காரணமாகப் பண்பட்ட உள்ளமும் படைத்த மக்கள் அரோகராச் சொல்லிப் பாயிழந்து நாவாயிகளிற் செல்வதால் சனத்தொகை சிறிது சிறிதாகக் குறைவடைவதையும் கடைசிவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தால், சுவர்க்கலோகத்துக்குப் போய் மீண்டு வந்திருப்பதாகவே தோன்றும். நம் வாழ்வென்பது ஒர்சந்தையிற் கூட்டம் என்பதும் மனதிற் பதியாமற் போகாது.