நாகேஸ்வரியின் சாற்றர்கரிய சாந்நித்தியத்தையும் தேஜோமயத்தையும் அருளொழுகு வதனத்தையும் நீங்கள் உண்மையிற் கண்டு கடைத்தேற விரும்பினால் இரதோற்சவத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள். அந்தச் சக்தி வெள்ளத்தில் இறங்கி ஆடிப் பாருங்கள். “அம்பிகையின் திருமுன் நின்று அனுதினமும் போற்றுந் தொண்டர்தம் பெருமை யார் சொல்ல வல்லார்” என்று வரகவி நயினை நாகமணிப் புலவரே கூறுவாராயின், அம்பிகை தேரின் மீது இவர்ந்து பல்லாயிக் கணக்கான பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியை ஒருமுறையாவது காணப்பெறுவார்களாயின், நீங்கள் எடுத்த பிறவியாற் பயனடைந்துவிட்டீர்கள் என்று சொல்லலாம்.


நயினையில் புதுமை தரு புனித தாயின் கருணை தவழும் திருக்கோலம்

"எழுதரு மறையுங் கடந்தநா யகிநன்
றிருந்தருள் செய்யுமத் தலத்திற்
பழுதறுஞ் சைவ தந்திர முறையாற்
பக்தியோ டவளடி பரவி
யழுதகண் ணொடுமெய் யரும்பநாத் தழும்ப
வகங்குழைத் தென்பெலா முருகத்
தொழுதகை யொடுநின் றனுதினம் போற்றுந்
தொண்டர்தம் பெருமையார் சொல்வார்.

வாய்ந்தசெந் திருவுருங் கலைகளுங் காண
மலங்குமன் பினையுளங் காண
வோய்ந்தவெம் பிணியாங் கடற்கரை காண
வுடற்றிடு மரளிபின் காண
வாய்ந்தமந் திரத்தின் பொருளது காண
வம்பிகை யோங்குசீ றடிகள்
காய்ந்தபுன் கண்க லாமெனா தணிநேர்
காணுவார் கண்களே கண்கள்.

ளருங்கைச் சிலையலர் கூம்ப
வீன்றிடுங் கருப்பைகள் கூம்பப்
போர்த்ததீ நிரையக் குழிகள்வாய் கூம்பப்
புறர்சம யாந்தகங் கூம்ப
மூர்த்தமா யிருந்த கவுரியா லயத்து
முன்புநின் றன்பொடு தலைமேற்
கூர்த்தநீ டுரக்கை இவையனா துயர்த்திக்
கூப்புவார் கைகளே கைகள்.

- நயினைமான்மியம் மூர்த்திவிஷேடச் சுருக்கம்

ஆனிமாதத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வடபகுதிக்கு யாத்திரீகர் திரள்திரளாகச் செல்வதைக் கண்டால் அவர்கள் நயினாதீவு நாகம்பாள் ஆலயத்துக்கே செல்கின்றனர் எனத் திடமாய்க் கூறிவிடலாம். பூசைகளுக்கும் நேர்கடங்களுக்குமாக நாளாந்தம் மக்கள் இக்கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கின்றன ரெனினும், ஆனி மாதத்திற் பத்து நாட்களுக்கு அம்பாள் பவனி வந்து பக்தர்களை ஆசீர்வதிக்கும் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுங் காலத்தில் மக்கள் பெருந்தொகையாகச் செல்கின்றார்கள். அம்பாள்மீது கொண்ட ஆறாத பக்தியினால் மக்கள் பிரயாணக் கஷ்டங்களையும் பொருட்படுத்தாது 'மோட்டார் லாஞ்சி'களிலும், பாய்விரித்தோடும் தோணிகளிலும், வத்தைகளிலும், வள்ளங்களிலும் இங்கு வந்து குவிகின்றனர். இந்நாட்களில் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான தோணிகளும் மோட்டார் படகுகளும் பல்லாயிரங்கணக்கான யாத்திரீகர்களும் போய்வந்துகொண்டும், ஏறிஇறங்கிக்கொண்டும் இருப்பதைப் பார்க்கப் பார்க்க, புராண ங்களிற் கூறப்பட்ட சப்ததீவு இதுதானோ என்ற ஐயம் ஏற்படும். பூவுலகைக் கடந்து தெய்வலோகத்திற் சஞ்சரிப்பதைப் போன்ற பக்திபரவசம் ஏற்படும்.

இத்தீவுக்கு முதன்முதலாகச் செல்லும் ஒருவர் வட இலங்கையிற் பெரிய துறைமுகம் நயினாதீவு தான் என்று முடிவுகட்டிவிடக் கூடும். இவ்வாறு அநேக நாவாய்கள் தங்கிநிற்பதை உற்று நோக்குமிடத்து நாகேஸ்வரி கோயில் கொண்டேளுந்தருளி இருக்கும் தலத்தின் பண்டைப்புகழை ஒருவாறு எங்கள் அகக்கண்முன் கொண்டுவருவதற்கு ஏற்படுத்திய ஜாலவித்தை என்றுஞ் சொல்லலாம். வர்த்தகக் கப்பல்கள் இடையிலே தங்கிச் செல்லும் பெரிய துறைமுகம் ஒன்று பண்டைக் காலத்தில் இங்கிருந்த தென்பது ஈண்டு நினைவு கூர்தற்பாற்று.

திருவிழாத் தொடங்கி விட்டால், அதற்கு வரும் பக்தர்களை நயினாதீவு மக்கள் அன்புடன் வரவேற்றுத் தங்கள் வீடுகளிலுங் குடிசைகளிலுந் தங்குவதற்கு இடம்கொடுத்து ஆதரவளிக்கின்றனர். சனநெருக்கம் அதிகமாக இருப்பதாற் பக்தர்கள் கோயில் வீதிகளில் பரந்த வேப்பமர நிழலிலும் தோட்ட வெளிகளிலும் கூடியிருந்து அம்பாளின் அருட்கோலத்தைத் தரிசிக்க ஆயத்தஞ் செய்வார்கள்.

பக்தர்கள் அதிகாலையில் துயில்விட்டேழுந்து காலைக்கடன் முடித்தபின், தாமரைக்குளம் போன்ற நன்னீர்க்குளங்களுக்குச் சென்று நீராடுவது கண்ணுக்கு இன்பமளிப்பதாகும். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள கிணறுகளைச் சுற்றியும் பக்தர்கள் கூடி நிற்பதைக் காணலாம்.

அதிகாலை ஆறு மணிக்கு முன்னரே அம்பாள் தரிசனத்துக்காக மக்கள் கோவிலை யடைகின்றார்கள். எங்கே பார்த்தாலும் தொழுவாரும் அழுவாரும் புரளுவாருமாகவே காணப்படுவர். தம்மை மறந்து, தம் மனைவி மக்களை மறந்து, அகிலாண்ட ஈஸ்வரியின் கண்நீர்மல்கிக் கதறும் மக்களின் ஒலி பாம்பன் கடலொலியையும் மலையடிவார அலையொலியையும், கடை ஒலியையும் மீறிவிடும்.

புயற்காற்றடித்து ஏழாற்றுப் அடிக்கமல பாதங்களையே சிந்தித்து நின்று உரோமஞ் சிலிர்ப்ப உரைதடுமாறி 'தாயே! தாயே! அரோகரா! நாகம்மாளுக்கு அரோகரா! என்று கற்றாவின் மனம் போலக் கசிந்து பிரிவு குமுறிக் கொண்டிருக்கும் காலத்திற் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செய்வதில் ஈடுபட்ட போதிலும் அம்பாள் கடைக்கண் பார்வை செய்தருழுவதால், அந்த யாத்திரீகர்கட்கு எவ்வித தொல்லையும் ஏற்படுவதில்லை. நயினாதீவிலுள்ள தொண்டர்சபைகளும் முன்னேற்றச் சங்கங்களும் பொலிசாரும் ஒருங்குசேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் மக்கள் கூட்டத்தில் நடைபெறக் கூடிய சாதாரண குழப்பங்களைக் குறைக்கின்றன.