டச்சுக்காரர் ஆட்சியின் பின்னர் நயினாதீவில் மீண்டும் நாகேஸ்வரி ஆலயம் சிறிய அளவிற் கட்டப்பெற்றது. எனினும் அங்கே தாபிக்கப்பெற்றிருந்த சிவலிங்கத்தைச் சைவர்கள் தாம் மறைத்து வைத்திருந்த இடத்திற் காணாமையாற் பெரிதும் கவலைகொண்டார்கள். ஆயினும் நயினாதீவுக்கு வடபால் உள்ள புலியேந்தி அல்லது புளியந்தீவு என்னும் சிறுதீவில் பழைய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்ற சைவர்கள் ஒருவாறு மனந்தேறினார்கள். இக்கோவில் நாகதம்பிரான் கோவில் என அழைக்கப்படுகின்றது. புலியேந்தியிலுள்ள நாகதம்பிரான் கோயிலிலே தாபித்திருக்கும் சிவலிங்கம் நயினாதீவு நாகேஸ்வரி ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் முன்னரே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கங்களுள் ஒன்றாயிருத்தல் கூடும் என்ற கொள்கையும் உண்டு.

டச்சுக்காரர் ஆட்சிக்குப் பின்னர் நாகேச்சரத்தில் தேவி ஆலயமே முதன்மை பெற்றுள தெனக் கருத இடமுண்டு. அற்றன்று; பண்டுதொட்டு இது தேவி ஆலயமாகவே விளங்கிற்று என வாதிப்பாரு முளர்.

அழகிய கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி கோயிலின் வாயிலில் இரண்டு பீரங்கிகளும் ஒரு கற்சில்லும் இருப்பதை யாத்திரீகர்கள் அவதானித்திருக்கலாம். இப்பீரங்கிகள் டச்ச்சுக்காரர் காலத்தனவாயிருக்கலாம். இவை இத்தீவின் அயலிலுள்ள கடலிலிருந்து கடற்றொழிலாளரால் கொண்டுவரப்பட்டன. அங்குள்ள கற்சில்லு பழைய தேர்சில்லு எனவும், கப்பல் நங்கூரமெனவும் கூறப்படுகிறது. இது பழைய கோயிலின் துவஜஸ்தம்பத்தின் பாகமாயிருக்கவும் கூடும்.

அண்மைக் காலம்வரை நாக பாம்புகள் இக்கோயிலுக்கருகில் வந்து செல்வது வழக்கமெனச் சில முதியோர் கூறக் கேட்டிருக்கிறேன். பாம்பு வணக்கம் இந்துக்களுட் பண்டுதொட்டுக் காணப்பட்ட மிகவும் புராதன வழிபாடாகவே தெரிகிறது.